நடாஷா, ஹர்திக் பாண்டியா எக்ஸ் தளம்
T20

இலங்கை தொடரில் ஓய்வு ஏன்| மனைவி, மகனுடன் செர்பியா புறப்பட்ட ஹர்திக்?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி?

தனது மனைவி மற்றும் மகனுடன் ஹர்திக் பாண்டியா செர்பியா புறப்பட்டுச் சென்றிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

2024 ஐபிஎல் தொடரின்போது மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த ரோகித் சர்மா மற்றும் மும்பை அணி ரசிகர்கள் அவருக்கு எதிராகக் கோஷமிட்டனர். தவிர, அவரது தலைமையிலான மும்பை அணியும் நடப்புத் தொடரில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதனால் அவரும் மேலும் விமர்சனத்துக்குள்ளானார். இந்த நிலையில், குடும்ப வதந்தியும் சேர்ந்துகொண்டது. ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் பிரிந்து வாழ்வதாகச் செய்திகள் வெளியாகின. அதற்கு உதாரணமாய், இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களை நடாஷா ஸ்டான்கோவிக் தன்னுடைய வலைதளங்களில் இருந்து நீக்கியதும், அதுபோல் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்காததும், அவருடைய பிறந்த நாளுக்கு ஹர்திக் வாழ்த்து சொல்லாததும் காரணங்களாகச் சொல்லப்பட்டன. எனினும், விவாகரத்து / பிரிந்து வாழ்தல் என எதையும் ஹர்திக் பாண்டியாவோ அவரது மனைவி நடாஷாவோ அல்லது அவர்களை சார்ந்தவர்களோ உறுதிப்படுத்தவில்லை. இந்த விஷயத்தில் இருவரும் அமைதி காத்தனர்.

ஹர்திக் பாண்டியா

இந்த நிலையில்தான் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உச்சி முகர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம் ஹர்திக் பாண்டியா. இதை கேப்டன் ரோகித் சர்மாவே மனந்திறந்து பாராட்டினார். இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் புகழ் மீண்டும் உச்சத்திற்குச் சென்றது. ஐபிஎல்லின்போது மும்பை வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவை இழிவாகப் பேசிய ரசிகர்களே, அதே மைதானத்தில் டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின்போது தூக்கிவைத்துக் கொண்டாடினர்.

இதையும் படிக்க: ”காதல் என்றபெயரில் என் மகனை ஏமாற்றியுள்ளார்”-மருமகள் மீது வீரமரணமடைந்த கேப்டனின் தந்தை குற்றச்சாட்டு

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தியா சாம்பியன் ஆன பிறகு, ஹர்திக் பாண்டியா நேரடியாக மைதானத்தில் இருந்தபடியே வீடியோ காலில் பேசினார். அதைப் பார்த்த பயனர்கள் பலரும் அவரது மனைவிக்குத்தான் பேசியிருப்பார் எனப் பதிலளித்தனர். இன்னும் சிலர் அவரது சகோதரருக்குப் பேசியிருப்பார் எனத் தெரிவித்தனர். என்றாலும், இந்த வெற்றிக் கொண்டாட்டம் அவரது வீட்டில் நடைபெற்றதுபோது நடாஷா மட்டும் கலந்துகொள்ளாதது மீண்டும் கேள்வியை எழுப்பியது. இந்த நிலையில்தான் குடும்ப வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் சமீபத்தில் வீடியோ பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

அதில், "ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது குணாதிசயங்களையோ எப்படி நாம் இவ்வளவு விரைவாகத் தீர்மானித்து விடுகிறோம்? நம் குணாதிசயங்களை மீறி யாராவது ஒருவர் செயல்பட்டால், எந்தவோர் அனுதாபமும் இன்றி அவர்களை உடனே இப்படித்தான் என்ற முன்முடிவுக்கு வந்துவிடுகிறோம். ஒருவரின் வாழ்வில் என்ன நடக்கிறது என்று நமக்கு முழுமையாகத் தெரியாது. அதனால் மனிதர்கள் குறித்துத் தீர்மானித்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சற்றுப் பொறுமையாக எதையும் அணுகுவது நல்லது" என அதில் மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.

இதனால் ஹர்திக் மற்றும் நடாஷா ஆகியோருக்கு இடையிலான குடும்ப வதந்திகளுக்கு முற்றுப்புற்றி வைக்கப்பட்டதாகவே ரசிகர்கள் நம்பினர். முன்னதாக, ஹர்திக் பாண்டியா படங்களை நடாஷா தன் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கிய நிலையில், பின்னர் அதை மீண்டும் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ’ஜெய் ஸ்ரீராம்' கோஷத்துடன் மகாராஷ்டிராவில் இடிக்கப்பட்ட மசூதி.. வைரலாகும் வீடியோ.. பின்னணியில் யார்?

இந்த நிலையில்தான் இந்திய அணி, அடுத்து இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ்வணியுடனான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இருக்கிறது. ஏற்கெனவே டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வுபெற்று விட்டதால், ஹர்திக் பாண்டியா இத்தொடரான இந்திய டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியானது. ஆனால், தனக்கு ஓய்வு தேவை என பிசிசிஐயிடம் ஹர்திக் பாண்டியாவை தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக வேறு கேப்டனை அறிவிக்கும் நிலையில் பிசிசிஐ உள்ளது.

இதற்கிடையே ஹர்திக் பாண்டியா, ஓய்வு கேட்டது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அவர் தன் மனைவி நடாஷா மற்றும் மகனுடன் செர்பியா நாட்டுக்குச் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளுடன் நடாஷா பயணமாகி இருப்பதை அவரது இன்ஸ்டா வீடியோ ஒன்று காட்டுகிறது. அதேபோல் நடாஷாவும் அவரது மகனும் செர்பியா செல்வதற்காக விமான நிலையத்திற்குச் சென்ற காட்சி மற்றொரு பயனரின் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா இல்லை என்றாலும் அவர்களுக்கு முன்னேயோ அல்லது பின்னேயோ அவரும் சென்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: உத்தரகாண்ட் | “தெய்வீக உத்தரவு கனவில் வந்தது” - புனித ஏரியில் திடீர் கோயில்; சர்ச்சையில் சாமியார்!