ஹர்திக் பாண்டியா ட்விட்டர்
T20

நியூயார்க் சென்றடைந்த இந்திய அணி.. வேறு நாட்டில் தனிமையில் விடுமுறையை கழிக்கும் ஹர்திக்.. பின்னணி?

டி20 உலகக்கோப்பை தொடரில் கலந்துகொள்வதற்காக, இந்திய அணி நியூயார்க் புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த அணியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா இணைந்து செல்லாமல் வேறொரு நாட்டில் விடுமுறையைக் கழிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் ஆகியுள்ளது. இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டபோதிலும், அந்த அணி சிறப்பான செயல்பாட்டை எட்டவில்லை. புள்ளிப் பட்டியலில் கடைசி இடம்பிடித்து அடுத்து சுற்றுக்குக்கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

இதனால், ஹர்திக் பாண்டியா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவர் தன் மனைவி நடாசாவை பிரிய இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவியும் கடந்த சில மாதங்களாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாக சமூக வலைதள தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும் இணைந்திருந்த புகைப்படங்கள் வலைதளங்களில் நீக்கப்பட்டிருப்பதும், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக்கின் மனைவி நடாசா பங்கேற்காததும், அவருடைய பிறந்த நாளுக்கு ஹர்திக் வாழ்த்து சொல்லாததும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

இதையும் படிக்க: “என்னையே ஒப்பந்தத்தில் எடுக்கவில்லை!!” - பிசிசிஐ-க்கு IPL கோப்பை மூலம் பதிலடி கொடுத்த ஸ்ரேயஸ் ஐயர்!

எனினும், இத்தகவலை ஹர்திக் பாண்டியாவோ அவரது மனைவி நடாசாவோ யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் டி20 ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூயார்க் சென்றுள்ளது. ஆனால், இவர்களுடன் ஹர்திக் பாண்டியா செல்லவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

அவர் வேறு நாட்டில் விடுமுறையைக் கழிப்பதாகவும், இந்திய அணி விளையாடும் போட்டியின்போது வீரர்களுடன் அவர் நிச்சயம் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. குடும்பச் சூழ்நிலை மற்றும் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தோல்வி உள்ளிட்டவற்ற காரணங்களால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதிலிருந்து விடுபடுவதற்காக சில நாட்கள் வேறு நாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: 2024 | WPL & IPL Final.. ஆஸி. கேப்டன்ஸ்.. 18.3 ஓவர்கள்.. 113 ஆல் அவுட்.. ஒருசேர நிகழ்ந்த அதிசயம்!