Hardik pandya @hardikpandya7 | Twitter
T20

“அவர் மட்டும் என்னை அழைக்காமல் இருந்திருந்தால்.. இந்நேரம் இவருடன் விளையாடியிருப்பேன்” - பாண்ட்யா

குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்வதற்கு முன்னதாக, கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியில் இருந்து அழைப்பு வந்ததாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

சங்கீதா

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி 15 சீசன்களை கடந்த போதிலும், பரபரப்பு குறையாமல் தற்போதும் நடைபெற்று வருகிறது. உலகளவில் பிரபலமான இந்தப் போட்டியின் மூலம் உள்ளூர் வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரை அனைவருமே ஜொலிப்பதால், அவர்களுக்கு தேசிய அணியிலும் வாய்ப்பு கிடைக்கிறது. அதேநேரத்தில் வருடந்தோறும் ஐபிஎல் போட்டிகளில் ஏதேனும் மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளின் சுவாரஸ்யங்கள் கூடிக்கொண்டே செல்வதும் நடக்கிறது.

ஐபிஎல்

அந்தவகையில் கடந்த 2022-ம் ஆண்டு இரண்டு அணிகள் புதிதாக அறிமுகமாகின. கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் புதிதாக களமிறங்கின. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி அறிமுகப் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

கடந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் 10-ல் வெற்றிபெற்று, இறுதிப்போட்டியிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. நடப்பு சீசனிலும் 4 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான 3 போட்டிகளி்லும் வெற்றிபெற்றுள்ளது. ரஷீத்கான் தலைமையில் நடைபெற்ற ஒரு போட்டியில் மட்டும் அந்த அணி தோல்வியை தழுவியது.

ரஷீத் கான்

5 முறை கோப்பை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டராக 7 ஆண்டு காலமாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக அந்த அணியால் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர், குஜராத் அணியால் வாங்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்வதற்கு முன்னதாக, கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியில் இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்கு அழைப்பு வந்ததாம்! இதுபற்றி அவரே தற்போது தெரிவித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் நேர்காணலில், கௌரவ் குமாரிடம் ஹர்திக் பாண்ட்யா இதுபற்றி பேசுகையில், “ஐபிஎல்-ல் மற்றொரு புதிய அறிமுக அணியின் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) உரிமையாளரிடமிருந்து் எனக்கு அப்போது அழைப்பு வந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர் (கே.எல். ராகுல்) அந்த அணியை வழி நடத்தவுள்ளார் என்பதால், என்னைப் பொறுத்தவரை, நான் அப்போது இருந்த நிலையை கருத்தில் கொண்டு, உண்மையில் அவருடன் இணைந்து விளையாடவே விரும்பினேன்.

கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா

என்னைப்பற்றி அறிந்தவர்கள் என்மீது எப்போதும் வித்தியாசமான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதை நான் அறிவேன். ஆகையால், எனக்குத் தெரிந்த ஒருவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததும், அந்த அணியில் சென்று விளையாட மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அந்த நேரத்தில் ஆஷு பா ( குஜராத் அணி பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா) என்னை அழைத்துப் பேசினார்.

அப்போது, ஐபிஎல் தொடரில் பங்கேற்க குஜராத் அணிக்கு அனுமதி கூட வழங்கியிருக்கவில்லை. ஐபிஎல்லில் குஜராத் அணி பங்கேற்பதற்கான பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துக் கொண்டிருந்தது. முழுவதுமாக அதற்கானப் பணிகள் முடிக்கப்படாத நிலையில், ஆஷிஷ் நெஹ்ரா என்னிடம், ‘நான் பயிற்சியாளராகப் போகிறேன். இன்னும் அணி குறித்த பணிகள் முடியவில்லை. ஆனாலும் நான் பயிற்சியாளராக ஆகிவிடுவேன்’ என்று தெரிவித்தார்.

ஹர்திக் பாண்ட்யா, ஆஷிஷ் நெஹ்ரா

நான், அவரிடம், ‘ஆஷு பா, நீ இதை சொல்லாவிட்டால், நான் இந்த விஷயத்தை நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டேன், நான் என்னவாக இருக்கிறேன் என்பதை புரிந்துக்கொண்ட நபர்களில் நீங்களும் ஒருவர் என்பதை அறிவேன்’ என்றேன்

நான் யார் என்று என்னை தெரிந்த ஒருவருடன் பணிபுரிவது எனக்கு எளிமையானது. எனது மற்றொரு பக்கத்தையும் அறிந்தவர் நெஹ்ரா என்று நினைக்கிறேன். இருப்பினும் அச்சமயத்தில் நான் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததால், விளையாட்டிலிருந்து விலகி இருந்தேன். அதனால் லக்னோவா குஜராத்தா என எதனையும் முடிவு செய்யாமல் இருந்தேன்.

Hardik Pandya

பின்னர் நான் அவரிடம், ‘ஆஷு பா, என்னிடமிருந்து நீ என்ன எதிர்பார்க்கிறாய் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம்’ என்றேன். அவரும் கூறினார். இருவரும் மனம்விட்டு நன்கு பேசினோம். பின் நான் அவரிடம் ‘இதைப் பற்றி யோசித்து சொல்கிறேன்’ என்று மட்டும் சொன்னேன். அழைப்பைத் துண்டித்த சில நிமிடங்களில், ‘தயாராக இருந்தால், குஜராத் அணி கேப்டன் பதவியை நீங்கள் ஏற்க விரும்புகிறேன்’ என்று அவர் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. எதற்குப் பின்னாலும் ஓடியவனாக நான் இருந்ததில்லை. ஏதாவது வருமானால் கண்டிப்பாக வரும் என்று இருப்பவன் நான். அதனால் அன்று அந்த அழைப்பு வந்ததும், அதை ஏற்றேன்! இன்று அதில் சிறந்த விஷயங்களை செய்திருக்கிறேன்.

அவர் மட்டும் என்னை அழைக்காமல் இருந்திருந்தால்.. இந்நேரம் கே.எல்.ராகுலுடன் விளையாடியிருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.