நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் இந்த ஆண்டுக்கான சாம்பியன் யார் எனத் தெரிந்துவிடும். இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டபோதிலும், அந்த அணி சிறப்பான செயல்பாட்டை எட்டவில்லை. புள்ளிப் பட்டியலில் கடைசி இடம்பிடித்து அடுத்து சுற்றுக்குக்கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.
இதனால், ஹர்திக் பாண்டியா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவர் தன் மனைவி நடாசாவை பிரிய இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகஸ்தியா என பெயர்சூட்டினர். இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக நடாசா ஸ்டான்கோவிச் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.
அதற்கு உதாரணமாய் சமூக வலைதளத்தில் இருந்து பாண்டியா பெயர் நீக்கப்பட்டது, ஐ.பி.எல். 2024 தொடரின் போட்டிகளின்போது வராமல் இருந்தது, மற்றும் இருவர் தொடர்பான புகைப்படங்கள் நீக்கப்பட்டு இருப்பது குறித்த செய்திகள் வைரலாகின.
மேலும், கடந்த மார்ச் 4 அன்று நடாசாவின் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்டியா வாழ்த்து சொல்லவில்லை என்பதையும் குறிப்பிட்டு, அவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் இருக்கலாம் எனக் கூறி வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களாகவே நடாசா - ஹர்திக் பாண்டியா இடையே சமூக வலை தளத்தில் எந்தவிதமான பரிமாற்றங்களும் நடக்கவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்தடுத்த தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவின் குடும்ப வாழ்க்கைதான் காரணம் என இப்போது தகவல் பரவி வருகிறது. எனினும், ஹர்திக் பாண்டியா தனது மனைவியுடனான பிரிவு வதந்தி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அதேநேரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.