hardik pandya எக்ஸ் தளம்
T20

ஐபிஎல்லில் விரக்தி.. டி20-ல் வெற்றி.. வான்கடே மைதானத்தில் விண்ணைப் பிளந்த ‘ஹர்திக் பாண்டியா’ கோஷம்!

Prakash J

நடப்பு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி மீண்டும் வென்றிருக்கும் நிலையில், அதற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்துவருகின்றன. என்றாலும், பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து, இந்திய வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை. இந்த நிலையில், 5 நாட்கள் தாமதத்திற்கு பிறகு நேற்று தாயகம் புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் பிரதமர் மோடி அளித்த சிறப்பு விருந்தில் கலந்துகொண்டார். அவரிடம் கோப்பையைக் காண்பித்து இந்திய வீரர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். அவரும், வீரர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் கோப்பையை வென்ற வீரர்களுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை பாராட்டு விழா தொடங்கியது. இந்த விழாவில் ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வான்கடே மைதானமே ரசிகர்களால் டதிரண்டிருக்கும் நிலையில், அவர்கள் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வீரரின் பெயரையும் உரக்கச் சொல்லி குரல் கொடுத்து வருகின்றனர். அதிலும், ‘ஹர்திக் பாண்டியா... ஹர்திக் பாண்டியா’ என்கிற பெயர்தான் ரசிகர்களின் கூட்டத்தில் விண்ணையே அதிரச் செய்துவருகிறது. அதற்குக் காரணம், ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் நேர்த்தியாகப் பந்துவீசி விக்கெட்களை எடுத்ததுடன், கோப்பையையும் இந்தியா பக்கம் உறுதிசெய்தார்.

அதாவது முக்கியமான கட்டத்தில் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் விக்கெட்களை அறுவடை செய்து இந்தியாவுக்கு நம்பிக்கை வார்த்தார். இதனால் அன்றுமுதல் ஹர்திக் பாண்டியாவின் புகழ் மேலும் பரவச் செய்தது.

இதையும் படிக்க: ‘ஓய்வில்லாத உழைப்பால் ஏற்பட்ட மன உளைச்சல்’ - வாழ்வை முடித்துக் கொண்ட ரோபோ! துயரத்தில் தென்கொரியா!

முன்னதாக, ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் ஹர்திக்கிற்கும், ரோகித்திற்கும் இடையே விரிசல் இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், இந்தியா டி20 கோப்பையை கைப்பற்றிய அடுத்த நொடி, ரோகித் ஓடிச் சென்று ஹர்திக்கைத் தூக்கிக் கொண்டாடிய காட்சி இன்னும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தவிர, அவர்கள் இருவரும் கண்ணீர் வடித்த தருணங்களும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில்தான் அவரது திறமையை அறிந்து ரசிகர்கள் அவரை மீண்டும் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின்போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்தனர். அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக மும்பை அணியை வழிநடத்தி தோல்வியையே அடைந்தார். இதனால் மும்பை ரசிகர்கள் அவரைக் கடுமையாக வார்த்தைகளால் தாக்கினர். அவருக்கு எதிராக மைதானத்தில் கோஷமிட்டனர்.

குறிப்பாக, மும்பை மைதானத்தில் இதே ரசிர்கள் அவரைக் கிண்டல் செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. விராட் கோலிகூட, ஹர்திக் பாண்டியாவை வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். தவிர, இந்த விவகாரத்துடன் குடும்ப வதந்திகளும் தலைதூக்கத் தொடங்கின. ஆனாலும் ஹர்திக் பாண்டியா எவ்வித விமர்சனங்களுக்கும் பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே கடந்து சென்றார். ஆனால் அனைத்து விமர்சனங்களுக்கும் தற்போது பதில் அளித்து மீண்டும் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

இதையும் படிக்க: நேபாளத்தில் அரசியல் சடுகுடு|கூட்டணிக்கட்சிகள் விலகல்.. ஆளும் அரசுக்கு சிக்கல்; அமைகிறது புதிய ஆட்சி!