பாகிஸ்தான் - கேரி கிர்ஸ்டன் web
T20

“PAK உடன் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.. இந்தியாவிற்கு வாருங்கள்”- கேரி கிர்ஸ்டனை அழைத்த ஹர்பஜன்!

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவுடனும் கையிலிருந்து போட்டியை கோட்டைவிட்டு தொடரிலிருந்தே வெளியேறியது. பந்துவீச்சில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தினாலும், பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன.

பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், ஷாகித் அஃப்ரிடி, கம்ரான் அக்மல் முதலிய வீரர்கள் 2024 டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாமின் கேப்டன்சி மோசமாக இருந்ததை ஒப்புக்கொண்டனர். அதேநேரம், அணிக்குள் ஒற்றுமை இல்லை என்றும், அணியில் மூன்று குழுக்கள் பிரிந்து இருப்பதாகவும், அதனால் அணித்தேர்வில் மாற்றங்கள் தேவையென்றும், புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டன.

babar azam

இதற்கிடையில் பாகிஸ்தான் அணியின் தற்போதைய பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன், பாகிஸ்தான் அணிக்குள் ஒற்றுமை இல்லாததை கடுமையாக விமர்சித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வைரலாகின.

பாகிஸ்தான் ஒரு அணியே இல்லை...

2011 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியை கோப்பைக்கு வழிநடத்திய பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன், தற்போது பாகிஸ்தானின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு 2024 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் பணியாற்றிய கிர்ஸ்டன், பாகிஸ்தான் போன்ற ஒரு அணியை பார்த்ததில்லை என்று விமர்சித்ததாக செய்திகள் வைரலாக பரவிவருகின்றன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின் படி பாகிஸ்தான் அணி குறித்து பேசியிருக்கும் கேரி கிர்ஸ்டன், “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையே இல்லை. அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள், ஆனால் அதெல்லாம் ஒரு அணியே இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கவில்லை, அனைவரும் தனித்தனியாக பிரிந்திருக்கின்றனர். நான் பயிற்சியாளராக பல குழுக்களுடன் வேலை செய்திருக்கிறேன், ஆனால் இதுபோலான ஒரு மோசமான சூழ்நிலையை பார்த்ததில்லை” என்று விளாசியுள்ளார்.

பாகிஸ்தானில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்..

கேரி கிர்ஸ்டன் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்ததாக சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்.

தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் ஹர்பஜன் சிங், “பாகிஸ்தானுடன் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி, இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாருங்கள். கேரி கிர்ஸ்டன் ஒரு அரிதான வைரத்தை போன்றவர். அவர் ஒரு தலைசிறந்த பயிற்சியாளர், ஆலோசகர் மற்றும் நேர்மையானவர். 2011 இந்திய அணியில் இருந்த அனைவரிடமும் நட்பாக பழகியவர். எங்களின் கோப்பை வென்ற பயிற்சியாளர், தனித்துவமானவர்” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

மேலும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஹர்பஜன், “உண்மையை உடைத்து கூறிவிட்டீர்கள் கேரி, பாகிஸ்தான் அணி உங்களை போன்ற ஒரு பயிற்சியாளரை கொண்டிருக்க தகுதியற்ற அணி” என்று கூறியுள்ளார்.