Suryakumar Yadav PTI
T20

GTvsMI | பழைய பன்னீர்செல்வமாக மாறிய மும்பை - குஜராத்தை புரட்டிப்போட்ட சூர்ய புயல்!

ப.சூரியராஜ்

‘முடிஞ்சுட்ட முடிஞ்சுட்டனு நினைச்சா, திரும்ப திரும்ப எழுந்திருச்சு நிக்குறியேடா’ என எல்லா அணி ரசிகர்களுமே மும்பை இந்தியன்ஸ் மீது வெறுப்பில் இருக்கிறார்கள்.

‘மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் ஸ்டார் ப்ளேயர்களை வைத்து ஆட்டத்தை வெல்வார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ப்ளேயர்களை ஸ்டார்களாக்கி வெல்வார்கள்’

என ஹர்திக் உதிர்த்த நாலடியாரைக் கேட்டு மும்பை ரசிகர்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். வெறுப்பும் வெறுப்பும் மோதிக்கொண்டால் என்னாகும்?

Rohit-hardik

நேற்றிரவு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஸ்பேரிங் போட்டார்கள். டாஸில் ‘தல’ கேட்ட ஹர்திக், பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். ரோகித்தும், இஷானும் மும்பையின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் முகமது ஷமி. ஓவரின் கடைசிப்பந்து, பவுண்டரி அடித்தார் இஷான். ஆச்சரியமாக, இரண்டாவது ஓவர் வீச வந்தார் மோகித் சர்மா. இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் என பறக்கவிட்டார் ரோகித் சர்மா.

Rohit

ஷமியின் 3வது ஓவரில், இஷான் ஒரு சிக்ஸரும், ஹிட்மேன் ஒரு சிக்ஸரும் ஹிட்டினர். மோகித்தின் 4வது ஓவரில், இஷான் மீண்டுமொரு பவுண்டரி அடித்தார். ரஷீத் கானின் 5வது ஓவரில், பவுண்டரி ஒன்றை தட்டிவிட்டார் கேப்டன் ரோகித். அடுத்து இடதுக்கை ரஷீத் கான் (எ) நூர் அகமது வந்தார். இரண்டு பவுண்டரிகள் அடித்தார் இஷான். பவர்ப்ளேயின் முடிவில் 61/0 என அசத்தலாக தொடங்கியிருந்தது மும்பை.

‘இப்போ ஹர்திக் கையை முறுக்குவான் பாரு, பல்லை கடிப்பான் பாரு, நெஞ்சை நிமித்துவான் பாரு, ஒங்கி அடிப்பான் பாரு’ என ப்ளே ஆஃப் ரேஸிலிருக்கும் மற்ற அணியின் கேப்டன்கள், ஹர்திக்கை உசுப்பேற்ற தொடங்கினர். ரஷீத் கானின் 7வது ஓவரின் முதல் பந்து, ரோகித் அவுட். அடுத்து களமிறங்கினார் ஸ்கை. பவுண்டரி ஒன்று பறந்தது. அதே ஓவரில், இஷான் கிஷனும் எல்.பி.டபிள்யு முறையில் காலி.

நூர் அகமதின் 8வது ஓவரில், வதேரா ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் வெளுத்தார். ரஷீத்தின் 9வது ஓவரில் ஸ்கை ஒரு பவுண்டரி அடிக்க, ரஷீத் கான் வதேராவை அடித்தார். வதேராவும் அவுட். அடுத்து களமிறங்கினார் விஷ்ணு வினோத். கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் களத்தில் இறங்குகிறார். அல்ஸாரியின் 10வது ஓவரில், ஸ்கை இன்னொரு பவுண்டரியும் அழகாய் தட்டினார். 10 ஓவர் முடிவில் 96/3 என லேசாக இறங்கியிருந்தது மும்பை.

நூர் அகமதின் 11வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே. அல்ஸாரியின் 12வது ஓவரின் விஷ்ணு ஒரு சிக்ஸர், ஸ்கை ஒரு சிக்ஸர் என மிரட்டினர். ஷமியை அழைத்துவந்தார் பாண்டியா. ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என கலக்கினார் விஷ்ணு. ஸ்கையும் பவுண்டரி மழையாய் வெளுத்து வாங்கியது.

நூரின் 14வது ஓவரை பவுண்டரியுடன் வரவேற்றார் விஷ்ணு. அல்ஸாரியின் 15வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பல்தான்ஸை குதூகலமூட்டினார். 15 ஒவர் முடிவில் 151/3 என கெத்தாக இருந்தது மும்பை. 16வது ஓவரில், விஷ்ணு வினோத்தின் விக்கெட்டைக் கழட்டினார் மோகித் சர்மா. ரஷீத்தை பவுண்டரியுடன் வரவேற்றார் ஸ்கை. அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த டேவிட், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். மோகித்தின் 18வது ஓவரில், மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என ஸ்கோர் எகிறியது. 19வது ஓவரை வீசவந்தார் ஷமி. ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் என கிண்டிவிட்டார். கடைசி ஓவரின் 4வது பந்து, சிக்ஸர் அடித்து 95 ரன்களில் இருந்தார் ஸ்கை. அடுத்து பந்தில் இரண்டு ரன்கள். கடைசி பந்தில், ஒரு சிக்ஸரை வெளுத்துவிட்டு 49 பந்துகளில் சதத்தை தொட்டார் சூர்யகுமார் யாதவ். 218/5 என கடினமான ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தது மும்பை.

MI

மோகித் சர்மாவுக்கு பதிலாக இம்பாக்ட் வீரராக களமிறங்கிய கில்லுடன் இன்னிங்ஸைத் தொடங்கினார் சாஹா. முதல் ஓவரை வீசிய பெஹ்ரன்டார்ஃப், 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மத்வாலின் 2வது ஓவரில், சாஹா அவுட். எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாகி நடையைக் கட்டினார். அம்பயர்ஸ் கால் என்பதால், நல்ல வேலையாக டைட்டன்ஸுக்கு ரிவ்யூ தப்பியது. அடுத்து களமிறங்கிய கேப்டன் பாண்டியா, முதல் பந்தே பவுண்டரிக்கு அனுப்பிவைத்தார்.

பெஹ்ரன்டார்ஃபின் 3வது ஓவரில், ஹர்திக் அவுட். கீப்பர் கிஷனிடம் எளிமையான கேட்ச் ஒன்றை கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர், முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்தார். மத்வாலின் 4வது ஓவரை இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் விஜய் சங்கர். அந்த ஓவரில், கில்லுக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கபட்டது. மத்வால் வீசிய பந்தில், ஆஃப் ஸ்டெம்ப் குட்டிக்கரணம் அடித்தது. பெஹ்ரன்டார்ஃபின் 5வது ஓவரில், தொடர்ந்து மூன்று பவுண்டரி அடித்தார் விஜய் சங்கர். குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்கள் பெருமிதம் அடைந்தார்கள். ஜோர்டனின் 6வது ஓவரில், மில்லரும் ஒரு பவுண்டரி தட்டினார். பவர்ப்ளேயின் முடிவில் 48/3 என போராடிக்கொண்டிருந்தது டைட்டன்ஸ்.

MI

7வது ஓவரை வீசிய சாவ்லா, முதல் பந்திலேயே முரட்டு கூக்ளி ஒன்று வீசி விஜய் சங்கரின் விக்கெட்டைத் தூக்கினார். விஜய் சங்கரை எந்த தவறும் சொல்ல முடியாது. சாவ்லாவின் உருட்டு அப்படி! அதே ஓவரில், மில்லர் ஒரு பவுண்டரி அடித்து சேஸிங்கிறது தயாரானார். 8வது ஓவரின் முதல் பந்து, அபினவ் மனோகரின் விக்கெட்டைத் தூக்கினார் கார்த்திகேயா. டைட்டன்ஸ் ரசிகர்களை விட, மற்ற அணியின் ரசிகர்கள்தான் பெரும் சோகத்தில் மூழ்கினர். சாவ்லாவின் 9வது ஓவரில், ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் என பிரமாதபடுத்தினார் கில்லர் மில்லர். ஜோர்டனின் 10வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 10 ஓவர் முடிவில் 82/5 என தரையில் உருண்டுக்கொண்டிருந்தது குஜராத் அணி.

சாவ்லாவின் 11வது ஓவரில், ஒரு பவுண்டரி தட்டினார் திவாட்டியா. மத்வாலின் 12வது ஓவரை சிக்ஸருடன் துவங்கிய மில்லர், தனது விக்கெட்டுடன் முடித்தார். இன்னும் 48 பந்துகளில் 119 ரன்கள் தேவை. சாவ்லாவின் 13வது ஓவர் முதல் பந்து, திவாட்டியாவும் காலி. கார்த்திகேயாவின் 14வது ஓவரில் நூர் அகமதின் விக்கெட்டையும் கழட்டினர். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என முடிவு செய்த ரஷீத் கான், அதே ஓவரில் பளார் பளார் என இரன்டு சிக்ஸர்கள் அடித்தார். இன்னும் 36 பந்துகளில் 103 ரன்கள் தேவை. ரன்ரேட்டும் எகிறபோகுது என பல்தான்கள் ஹேப்பியாக இருந்தார்கள்.

Rashid khan

பெஹ்ரன்டார்ஃபின் 15வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பந்துகளை விரட்டினார் ரஷீத். பவர்ப்ளேயின் முடிவில் 130/8 என ஊசலாடியது டைட்டன்ஸ். மத்வாலின் 16வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் ஜோசப். 17வது ஓவரை வீசவந்தார் ஜோர்டன். இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என பந்துகளை அடித்து நொறுக்கினார். க்ரீன் வீசிய 18வது ஓவரை சிக்ஸருடன் துவங்கிய ரஷீத், அதே ஓவரில் இன்னொரு சிக்ஸர் அடித்து 21 பந்துகளில் தனது அரைசதத்தையும் நிறைவு செய்தார். 12 பந்துகளில் 55 ரன்கள் தேவை. ரிங்கு சிங் துணை! ஜோர்டன் வீசிய 19வது ஓவரில், ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு ஸ்டிரைக்கை மாற்றினார் ரஷீத். அல்ஸாரியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

Suryakumar-rashid khan

6 பந்துகளில் 48 ரன்கள் தேவை. கடைசி ஓவரை வீசவந்தார் கார்த்திகேயா. முதல் பந்து, அகலப்பந்து. மாற்றாக வீசபட்ட பந்தில் சிக்ஸர் பறந்தது. 2வது பந்து டாட். 3வது பந்தில் மீண்டுமொரு சிக்ஸர். 4வது பந்தில் மற்றுமொரு சிக்ஸர். 191/8 என எதிர்பாராத ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தது டைட்டன்ஸ். ரஷீத் - அல்ஸாரி பார்ட்னர்ஷிப்பில் 88 ரன்கள். எப்படியோ, 27 ரன்களில் ஆட்டத்தை வென்ற மும்பை, மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது. சிறப்பாக ஆடி சதமடித்த ஸ்கைக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இனி, சன்ரைசர்ஸ் என்ன செய்ய காத்திருக்கோ...