“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
டி-ஷர்ட், ஜன்னல் சீட், கடைசி பிஸ்கெட் என அண்ணன் தம்பி இருவர் ஆயிரம் விஷயங்களுக்கு அடித்திருக்கலாம், கடித்திருக்கலாம். ஆனால், முதல்முறையாக இரு அணிகளின் கேப்டனாக, ஒரு ஐ.பி.எல் கோப்பைக்காக நேற்று சண்டையிட்டார்கள். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்கிற இரு இளந்தாரி அணிகள், அகமதபாத் மைதானத்தில் முட்டி மோதின. அதில் யாருக்கு மண்டை பணியாரம் போல் புடைத்தது என பார்ப்போம்.
டாஸ் வென்ற க்ருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியாவை பேட்டிங் செய்ய சொன்னார். கோலியின் பன்ச் வசனத்திற்கு எதிர் வசனம் எழுதி, கௌதம் காம்பீருடன் நின்றபடி ஆடு ஸ்மைலியுடன் போட்டோ போட்டார் நவீன் உல் ஹக். கடைசியில் அவரையே பலிகடாவாக்கி லெவனில் இருந்து தூக்கிவிட்டது லக்னோ அணி. சாஹாவும், கில்லும் ஓபனிங் இறங்க, முதல் ஓவரை வீசவந்தார் மோஷின் கான். தொடர்ந்து, இரண்டு பவுண்டரிகளை அடித்தார் சாஹா. அடுத்த ஓவரை வீசவந்தார் ஆவேஷ் கான். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என வெளுத்தார் சாஹா. 3வது ஓவரை வீசினார் க்ருணால். சாஹாவிடமிருந்து மீண்டுமொரு பவுண்டரி!
4வது ஓவரை வீசவந்த மோஷினை, சிக்ஸருடன் வரவேற்றார் சாஹா. அதே ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என கலக்கினார். எதிர் முனையில் நின்றுகொண்டு, படையப்பா அப்பாஸைப் போல் `வாவ், வாட் எ மேன்' என்றார் கில். கேப்டன் க்ருணால் வீசிய 5வது ஓவரில், கில் ஒரு சிக்ஸர் அடித்தார். யாஷ் தாக்கூரின் 6வது ஓவர் முதல் பந்து, சிக்ஸருக்கு பறக்கவிட்டார் சாஹா. அத்தோடு, 20 பந்துகளில் தனது அதிவேக அரைசதத்தையும் நிறைவு செய்தார். அந்த ஓவரின் கடைசிப்பந்தில், கில் இன்னொரு சிக்ஸர் அடித்தார். பவர்ப்ளேயின் முடிவில், 78/0 என பட்டாசாக தொடங்கியிருந்தது டைட்டன்ஸ்.
ரவி பிஷ்னோயின் 7வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 8வது ஓவரை வீசவந்தார் மேயர்ஸ். மூன்று பவுண்டரிகளை நொறுக்கிவிட்டார் சாஹா. `உங்களுக்கு இன்னும் வயசாகலை' என அப்பாஸ் கதாபாத்திரத்தை சிரத்தையுடன் செய்துகொண்டிருந்தார் கில். மீண்டும் வந்தார் பிஷ்னோய். இம்முறை, முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் கில். அதே ஓவரில், இன்னொரு சிக்ஸரும் பறந்தது. `நடிச்சா ஹீரோதான் சார்' என்பதைப் போல, அடிச்சா சிக்ஸர்தான் சார் என ஆடிக்கொண்டிருந்தார் கில். அடித்த 5 பவுண்டரிகளுமே சிக்ஸர்கள்தான்! க்ருணாலின் 10வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கிடைக்க, 121/0 என மிக சிறப்பான நிலையிலிருந்தது குஜராத் டைட்டன்ஸ்.
11வது ஓவரை வீசவந்தார் ஸ்வப்னில், 7 ரன்கள் கிடைத்தது. க்ருணால் வீசிய 12வது ஓவரில், சாஹா ஒரு பவுண்டரியும், கில் ஒரு சிக்ஸரும் அடித்தனர். அடுத்து யாரிடம் பந்து வீச சொல்லலாம் என யோசித்த க்ருணால், குயின்டன் டி காக்கிடம் பவுலிங் போட சொல்லி திட்டு வாங்கினார். வேறு வழியின்றி, ஆவேஷ் கானை அழைத்து ஓவரை கொடுத்தார். 13வது ஓவரின் முதல் பந்து, அட்டகாசமாக ஆடிக்கொண்டிருந்த சாஹா அவுட்! சப்ஸ்டிட்யூட் வீரர், மன்கட் அற்புதமான கேட்ச் பிடித்தார். 81 ரன்களுடன் வெளியேறினார் சாஹா.
அடுத்து களமிறங்கினார் தம்பி பாண்டியா. தாக்கூரின் 14வது ஓவரில், ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். அடுத்த பவுலராக ஸ்டாய்னிஸை அறிமுகப்படுத்தினார் க்ருணால். முதல் பந்தை மீண்டும் சிக்ஸருக்கு விளாசினார் கில். அதே ஒவரில், பாண்டியாவும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என புரட்டியெடுத்தார். மோஷின் கானின் 16வது ஒவரில், ஒருவழியாக ஒரு பவுண்டரி அடித்தார் கில். அதே ஓவரின் கடைசிப்பந்தில், அண்ணன் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார் தம்பி பாண்டியா! 16 ஓவர் முடிவில் 184/2 என டைட்டாக கட்டியது டைட்டன்ஸ்.
ஆவேஷ் கானின் 17வது ஓவரில், கில் மற்றுமொரு பவுண்டரி அடித்தார். 18வது ஓவரை வீசினார் தக்கூர். மில்லருக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. ஆவேஷ் வீசிய அடுத்த ஓவரில், மில்லர் ஒரு சிக்ஸரை வெளுத்தார். தாக்கூரின் கடைசி ஓவரை சிக்ஸருடன் துவங்கினார் கில். மில்லருக்கும் ஒரு பவுண்டரி கிடைத்தது. ஆறு ரன்களில் கில்லின் முதல் ஐ.பி.எல் சதம் கை நழுவிப்போனது. 227/2 என முரட்டு இலக்கை நிர்ணயித்தது டைட்டன்ஸ்.
228 எனும் இலக்கை எட்டிபிடிக்க ஆயத்தமானது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். கீப்பர் சாஹாவுக்கு பதில், கே.எஸ்.பரத்தை சப்ஸ்டியூட் ஃபீல்டராக இறக்க முயன்றார் ஹர்திக் பாண்டியா. நடுவர்கள் குறுக்கே வந்து கேட்டைப் போட, மீண்டும் சாஹாவுக்கு கீப்பர் க்ளவுஸை மாட்டி இறக்கிவிட்டார் நெஹ்ரா! க்ளவுஸை சரியாக மாட்டிவிட்டவர், பேன்ட்டை மட்டும் மாற்றிவிட்டார். முன்பக்கம் இருக்கும் லோகோக்கள், பின் பக்கம் சென்றுவிட்டது. மேட்சை மட்டுமல்ல, பேன்ட்டையும் திருப்பிபோட்டிருந்தார் சாஹா. மொத்த மைதானமுமே சிரித்த இந்த காமெடிக்கும் கம்பீர் சிரித்திருக்கமாட்டார்.
மேயர்ஸ் - டி காக்கும் லக்னோவின் இன்னிங்ஸை துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் முகமது ஷமி. பவுண்டரிகள் ஏதுமின்றி வெறும் 4 ரன்கள் மட்டுமே. ஹர்திக் வீசிய 2வது ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார் மேயர்ஸ். இம்முறை, ஃபிஸியோ உள்ளே வந்து சாஹாவை அழைத்துக்கொண்டு போக, கே.எஸ்.பரத் கீப்பராக உள்ளே வந்தார். கில்லுக்கு பதில் அல்ஸாரி இம்பாக்ட் வீரராக களமிறங்கினார். ஷமியின் 3வது ஓவரை இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் டி காக். அதே ஓவரில், மேயர்ஸ் ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் பறக்கவிட்டார். ஹர்திக்கின் 4வது ஓவரையும், இரண்டும் பவுண்டரிகளுடன் தொடங்கினார் டி காக். 5வது பந்து நேராக ரஷித் கானின் கையில் விழுந்தது. மேயர்ஸ் கொடுத்த வாய்ப்பை தவறவிட்டார் அவர். ஓவரின் கடைசிப்பந்தை, மேயர்ஸ் ஒரு பவுண்டரி அடிக்க, நொந்துபோனார் ரஷீத்!
5வது ஓவரை வீசினார் ரஷீத் கான். மேயர்ஸ் ஒரு சிக்ஸரும், டி காக் ஒரு பவுண்டரியும் அடித்தனர். அடுத்த ஓவரை நூர் அகமது வீசினார். இரண்டு பவுண்டரிகளை விளாசினார் மேயர்ஸ். கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன செய்வதென புரியவில்லை. பவர்ப்ளேயின் முடிவில் 72/0 என சிறப்பாக விரட்டிவந்தது லக்னோ. ரஷீத் கானின் 7வது ஓவரில், வெறும் 4 ரன்கள் மட்டுமே. மீண்டும் வந்தார் நூர் அகமது. இரண்டு பவுண்டரிகள் அடித்தார் டி காக். மோகித் சர்மாவை அழைத்து 9வது ஓவரை வீச சொனார் ஹர்திக். ஓவரின் 2வது பந்து, மேயர்ஸின் விக்கெட் காலி. கையில் விழுந்த பந்தை தவறவிட்ட ரஷீத் கான், கிட்டதட்ட 26 மீட்டர்கள் ஓடிச்சென்று இந்த கேட்சைப் பிடித்தார்! தீபக் ஹூடா அடுத்து களமிறங்கினார். ஹர்திக்கின் 10வது ஓவரில், டி காக் ஒரு சிக்ஸரை விளாசினார். 10 ஓவர் முடிவில், 102/1 என கொஞ்சம் சுணங்கியது லக்னோ.
மோகித் சர்மாவின் 11வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே. 12வது ஓவரை வீசிய ரஷீத் கான், 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 13வது ஓவரில் ஹுடாவின் விக்கெட்டை கழட்டினார் ஷமி. லக்னோ ரசிகர்களே சந்தோஷபட்டார்கள். நூர் அகமதின் 14வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. மீண்டும் வந்த மோகித் சர்மவை, டி காக் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால், ஸ்டாய்னிஸ் விக்கெட்டை கழட்டிவிட்டார் மோகித். 15 ஓவர் முடிவில் 130/3 என ஓட முடியாமல் அமர்ந்துவிட்டது லக்னோ. இன்னும் 30 பந்துகளில் 98 ரன்கள் தேவை!
16வது ஓவரை வீசவந்த ரஷீத் கானை, சிக்ஸருடன் வரவேற்றார் டி காக். கடைசி பந்தில், விக்கெட்டை கழட்டி டி காக்கை வழியனுப்பி வைத்தார் ரஷீத். 41 பந்துகளில் 70 ரன்கள் எனும் தைரியமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. யாஷ் தாக்கூருக்கு பதிலாக இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் ஆயுஷ் பதோனி. ஷமியின் 17வது ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் பதோனி. நூரின் 18வது ஓவரின் பூரனும் அவுட். மோகித் சர்மாவின் 19வது ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்த பதோனி கேட்ச் கொடுத்துவிட்டு அவுட்டாகி கிளம்பினார். அடுத்து களமிறங்கிய க்ருணால், முதல் பந்திலேயே அவுட்! கடைசி ஓவரில், சிறுவன் பிஷ்னோய்க்கு அல்ஸாரி ஜோசப் பயம் காட்ட, 56 ரன்களில் ஆட்டத்தை வென்றது டைட்டன்ஸ். 94 ரன்கள் எடுத்த இளம்புயல் சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. `சூப்பர் சாஹா', `செம கேட்ச் ரஷீத்' என இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டுக்கொண்டிருந்த கோலி, நிச்சயம் ஆட்டம் முடிந்தது மெத்தையில் ஏறி நின்று குத்தாட்டம் போட்டிருப்பார்.