கவுதம் கம்பீர் எக்ஸ் தளம்
T20

INDIA Head Coach நியமனம்... கிரிக்கெட் வீரர் டு முன்னாள் பாஜக எம்பி.. யார் இந்த கவுதம் கம்பீர்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

நடப்பு டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற உற்சாகத்துடன், தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அந்தப் பதவிக்காக நடைபெற்ற நேர்காணலில், கவுதம் கம்பீருக்குப் போட்டியாக முன்னாள் இந்திய வீரரான W.V.ராமனும் கலந்துகொண்டது பேசுபொருளானது. என்றாலும், கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ முன்னுரிமை அளிக்கும் எனச் சொல்லப்பட்டது.

இந்தச் சூழலில்தான் கவுதம் கம்பீர், சம்பளத்தை உயர்த்திக் கேட்டதாகவும், அதாவது ரூ.15 கோடி கேட்டதாகவும், தமக்கு ஸ்பெஷல் பவர் வேண்டும் எனவும் பிசிசிஐயிடம் அவர் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் கசிந்தன. அதன்பேரிலேயே தலைமைப் பயிற்சியாளர் பதவி நியமனம் காலதாமதமானதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இவர் இலங்கை தொடருக்கு முன்னதாகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: India Head Coach|காலதாமதம் ஆவது ஏன்? 2 விஷயங்களை பிசிசிஐயிடம் முன்வைத்த கவுதம் கம்பீர்!

யார் இந்த கவுதம் கம்பீர்?

டெல்லியைச் சேர்ந்த கவுதம் கம்பீர், 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011, 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர். இதுதவிர ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை ஏழு சீசனுகளுக்கு வழிநடத்தியவர். அதில், இரண்டு முறை கோப்பைகளை வென்று கொடுத்ததோடு, ஐந்து முறை பிளே ஆப் சுற்றுக்கு அணியை தகுதிபெற வைத்தார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், பாஜகவில் இணைந்து கடந்த 2019ஆம் ஆண்டு தனது அரசியல் இன்னிங்ஸை ஆரம்பித்தார். அந்த ஆண்டு டெல்லி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட அவர், 6,95,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

அந்தச் சமயத்தில் டெல்லியின் பணக்கார வேட்பாளர்களில் ஒருவராக கம்பீர் அறியப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இருந்து விலகிய அவர், மீண்டும் கிரிக்கெட்டில் கால்பதிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன்படி, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கேகேஆர் அணியை மீண்டும் மகுடம் சூட வைத்தார். இதையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கும் அவரது பெயர் அடிபட்டது. தற்போது ராகுல் டிராவிட்டின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: IPL Coach| வெளியேறும் கவுதம் கம்பீர்.. உள்நுழையும் ராகுல் டிராவிட்.. தீவிரம் காட்டும் கொல்கத்தா அணி!