கம்பீர், நவீன், கோலி PTI
T20

LSG vs RCB: வார்த்தைப் போரில் ஈடுபட்ட கம்பீர், கோலி - ஜென்டில்மேன் Game-க்கு என்னாச்சு?

'கிட்டத்தட்ட காலணியில் இருக்கும் அழுக்கிற்கு ஒப்பானவர்' என கோலி சொல்கிறார் என்று தான் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Sports Desk

இன்றளவும் நன்றாக நினைவிருக்கிறது. கம்பீர் அந்தத் தொடரில் கேப்டனாக இருந்தார். இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில், கம்பீரும், கோலியும் இணைந்து ஆடினார்கள். மூன்றாவது விக்கெட்டுக்கு 224 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு சீனியர் கம்பீருக்கு உதவினார் ஜூனியர் கோலி. ஆம், அந்தப் போட்டியில் தான் கோலி தன் முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். போட்டி முடிந்தப்பின்னர், ஆட்டநாயகன் விருது சிறப்பாக விளையாடிய கம்பீருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், கம்பீர் அந்த விருதை கோலிக்கு தருமாறு போட்டியாளர்களைக் கேட்டுக்கொண்டார். காரணம், அது கோலியின் முதல் சர்வதேச சதம்.

kohli-gambhir

இதுபற்றி ஒருமுறை பேசிய கம்பீர், " செய்யக்கூடாத எதையும் நான் செய்துவிடவில்லை. ஒரு வீரர் நூறு சதம் கூட அடித்துவிடலாம். ஆனால், முதல் சதம் என்றுமே பசுமையாய் நினைவில் இருக்கும். கோலிக்கு அவர் அடித்த முதல் சதத்தை சிறப்பான ஒன்றாக மாற்ற நினைத்தேன். அவ்வளவே" என்றார்.

பழைய கதையைப் பேசி என்ன பயன்.

நேற்று நடந்த விஷயங்களுக்கு வருவோம்.

லக்னோவுக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் இந்த சீசனில் இரண்டாம் முறையாக மோதிக்கொண்டன. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த முதல் ரவுண்டில் லக்னோ வென்றுவிட, ரிவெஞ்ச் எடுக்க நேரம் பார்த்துக் காத்திருந்தது பெங்களூரு அணி. அந்தப் போட்டியில் லக்னோ வீரர்களான அவேஷும், பிஸ்னாயும் மிகவும் ஆக்ரோஷமாக வென்றதை கொண்டாடினார்கள். ஹெல்மெட்டை தூக்கி எறிந்து அவர்கள் கொண்டாடியதை, கிரிக்கெட் ரசிகர்களே விநோதமாகத்தான் பார்த்தார்கள்.

LSG-RCB

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த டிராக்கில் சராசரி குறைவு தான் என்றாலும், இதை வைத்து என்ன செய்வது என்கிற நிலையில் தான் இரண்டாம் இன்னிங்ஸை எதிர்கொண்டது. ஆனால், இந்தப் போட்டி வெற்றி தோல்வியைக் கடந்து மைதானத்தில் நடந்த கசப்பான விஷயங்களுக்காக மட்டுமே நினைவில் நிற்கப் போகிறது.

கோலிக்கு, ஆஃப்கான் தேசத்து வீரரான நவீன்-உல்-ஹக்கிற்குடன் சண்டை முட்டிக்கொண்டது. அம்பயர் பேசி இருவரையும் சமாதானம் செய்தார்.

கோலி என்ன பேசினார் என யாருக்கும் தெரியாது என்றாலும், கோலி தன் காலில் அணிந்திருந்த ஷூவைத் தொட்டுக் காட்டிப் பேசினார். கிட்டத்தட்ட அந்த காலணியில் இருக்கும் அழுக்கிற்கு ஒப்பானவர் என கோலி சொல்கிறார் என்று தான் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

நவீன்-உல்-ஹக் பற்றி அமித் மிஷ்ராவிடம் கோலி பேசிக்கொண்டிருந்ததை நாமும் பார்க்க முடிந்தது. ஆனால், அமித் மிஸ்ரா எந்தப் பதிலும் சொல்லாமல் கூலாக என்ன பிரச்னை என்று மட்டும் கேட்டுக்கொண்டார். நவீன்-உல்-ஹக்குடன், முகமது சிராஜும் சண்டைக்கு ஆயுத்தமானார். க்ரீஸுக்குள் நவீன் நிற்கிறார் என தெரிந்தும், வேண்டுமென்றே ஸ்டம்பஸை நோக்கி பந்தை எறிந்துவிட்டுச் சென்றார் சிராஜ்.

போட்டி முடிந்த பின்னர், இரு அணி வீரர்களும், கைக்கொடுத்துக் கொள்வது என்பது இயல்பாக நடக்கும் ஒரு விஷயம்,. ஜென்டில்மேன்ஸ் கேம் என சொல்லப்படும் கிரிக்கெட்டில் தொன்றுத் தொட்டு நிகழும் ஒரு பாரம்பரியமான விஷயம். ஆனால், அப்போதும் கோலியும், நவீனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அதற்குப் பிறகு தான், இன்னும் மோசமான விஷயங்கள் அரங்கேறின.

LSG-RCB

கம்பீரும், கோலியும் பார்த்துக்கொண்டார்கள். இருவரும் இந்திய அணிக்காக 8 ஆண்டுகள் ஒன்றாய் விளையாடியவர்கள். டெல்லியைச் சேர்ந்தவர்கள். இதற்கு முன்பும் இருவரும் களத்தில் சண்டையிட்டு இருக்கிறார்கள். அப்போது, கம்பீர் கொல்கத்தா அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தார். ஆனால், இப்போது கம்பீர் பயிற்சியாளர்.

நேற்று போட்டி முடிந்ததும் பரஸ்பரம் கை கொடுக்கும் போதே எல்லாம் முடித்துவிட்டது என்று அர்த்தம் தான். லக்னோ அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் கேசுவலாக பேசிக்கொண்டிருந்தார். 'இவன்ட்ட என்ன பேச்சு' என்பதாக லக்னோ அணி நிர்வாகியான கம்பீர், மேயர்ஸை தர தரவென இழுத்துச் சென்றார்.

கம்பீர் செய்ததை கோலியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நேரடியாகவே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைகலப்பு ஆகிவிடக்கூடாது என்பதற்காக லக்னோ வீரர்கள் உள்ளே வந்து வாக்குவாதத்தை நிறுத்தினார்கள்.

LSG-RCB

எல்லாவற்றையும் முடித்து வைக்கும் விதமாக கோலியுடன் பேசிக்கொண்டிருந்தார் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல். அநேகமாக கம்பீரின் மேல் தான் எல்லா பிழையும் என்றுகூட பேசியிருக்கக் கூடும். நவீனை சமாதானமாய் போகச் சொல்லி அழைத்தார் ராகுல்.

நவீனுக்கு இன்னமும் அந்த காலணி அழுக்கு ஒப்பீடு சரியென படவில்லை என்பது அப்பட்டமாய் வெளிப்பட்டது. கேப்டன் ராகுல் சொல்லியும் அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார் நவீன்-உல்-ஹக். இது போதாதென எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றியிருக்கிறது RCB பக்கத்தில் வெளியாகியிருக்கும் வீடியோ. அதில் கோலி, "உன்னால கொடுக்க முடியும்னா, திருப்பி வாங்கிக்கறதுக்கு தெம்பு இருக்கணும். இல்லாட்டி கொடுக்கக்கூடாது" டைப்பில் ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.

கோலி, கம்பீர் இருவருக்கும் ஆட்டத்திற்கான மொத்த தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. நவீன்-உல்-ஹக்கிற்கு ஐம்பது சதவீதம் அபராதம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோலிக்கும், கம்பீருக்கும் ஒரு நாள் ஆட்டத்தொகை என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை. இந்திய விளையாட்டு வீரர்கள் அதிக ஸ்பான்ஸர் இருக்கும் வீரர்களில் கோலியும் ஒருவர். கம்பீர் இன்னும் ஒருபடி மேலே. டெல்லியில் பாஜகவின் எம்பியாக இருக்கிறார். இருவரும் தங்களைத் திருத்திக்கொள்ளாத வரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.

Virat Kohli

கோலி, கம்பீர் சண்டையில் யார் பக்கம் தவறு என நினைக்கிறீர்கள். கமென்ட்டில் சொல்லுங்கள்.