கிரிக்கெட்டில் நவீன தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டாலும், சமீபத்தில் மூன்றாவது அம்பயர்களின் முடிவுகள் மற்றும் DRS முடிவுகள் பல்வேறு போட்டிகளில் விவாதத்திற்குரிய ஒன்றாக மாறிவருகிறது.
சமீபத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் DRS மற்றும் ஹாக்-ஐ ஆப்ரேட்டர் சிஸ்டம் இரண்டையும் இங்கிலாந்து வீரர்களில் மிகப்பெரியளவில் விமர்சனம் செய்தனர். அதேபோல வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் கூட “பந்து பேட்டில் பட்டு சென்றது டிஆர்எஸ் சிஸ்டத்தில் தெரிந்தபோதும் பேட்ஸ்மேனுக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது” விவாதமானது.
இந்நிலையில் தான் களத்தில் அம்பயர்கள் எடுக்கப்படும் முடிவுகளில் அதிகப்படியான நம்பகத்தன்மை மற்றும் கூர்மையான முடிவுகளை உறுதிசெய்யும் வகையில், ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் (Smart Replay System) எனப்படும் புதிய அப்டேட்டர் சிஸ்டமை பிசிசிஐ அறிமுகப்படுத்த உள்ளது.
மிகவும் துல்லியமான முடிவுகளை தருவதற்காக Smart Replay System (SRS) எனப்படும் புதிய சிஸ்டம் 2024 ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படவிருக்கிறது. எளிமையாக சொல்லவேண்டுமானால் இது ஒரு மேம்பட்ட தொழில்நுட்ப அணுகலாகும்.
அதாவது ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் (SRS) ஆனது, நடுவர்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திரைகளை வரிசைப்படுத்தி சிறந்த காட்சிபுரிதலை ஏற்படுத்த பயன்படுகிறது. அந்த ஸ்கிரீன்களில் பல கோணங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும். அதன்மூலம் அம்பயர்கள் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.
ஒரு போட்டியின் போது, டிவி நடுவருக்கு ஒரே அறையில் இரண்டு ஹாக்-ஐ ஆபரேட்டர்கள் உதவுவார்கள். இந்த ஆபரேட்டர்கள் எட்டு அதிவேக ஹாக்-ஐ கேமராக்களால் படம்பிடிக்கப்பட்ட நிகழ்நேர காட்சிகளை ஸ்கிரீன்களில் காட்சிப்படுத்துவார்கள். இந்த விரிவாக்கப்பட்ட காட்சிகளின் மூலம், விளையாட்டின் முக்கியமான தருணங்களை இன்னும் விரிவாக ஆய்வு செய்து அம்பயர்களால் முடிவுகளை அறிவிக்க முடியும்.
முன்னதாக, ஹாக்-ஐ கேமராக்கள் பந்து கண்காணிப்பு மற்றும் அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்திற்காக மட்டுமே முதன்மையாக பயன்படுத்தப்பட்டன. தற்போது ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் பயன்படுத்தப்பட்டால், ”ஸ்டம்பிங், ரன்-அவுட்கள், கேட்சுகள் மற்றும் ஓவர்த்ரோக்களுக்கான" பரிந்துரைகளும் இப்போது சேர்க்கப்படும். இதன்மூலம் ’கேம்ஸ் ஸ்பிரிட்’ எனப்படும் விளையாட்டின் ஒட்டுமொத்த நேர்மைத்தன்மையையும் இது மேம்படுத்துகிறது.
ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று ஸ்டம்பிங்குகளுக்கான ட்ரை-விஷன் டிஸ்ப்ளே ஆகும். இதில் ஸ்டம்பிங் செய்யப்படும் போது இடது-வலது பக்கங்கள் மற்றும் முன் பக்கம் மூன்று பக்க காட்சிகள் ஒரே நேரத்தில் கேமராக்கள் மூலம் விரிவாக காட்சிப்படுத்தப்படும். அதேபோல கிரவுண்ட் கேட்ச்களிலும் இரண்டு பக்கவாட்டு மற்றும் முன்பக்க வியூக்களை SRS காட்சிப்படுத்தும்.
கூடுதலாக, 'பார்வையாளர்கள் டிவி நடுவருக்கும் ஹாக்-ஐ ஆபரேட்டர்களுக்கும் இடையிலான உரையாடல்களைக் கேட்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்'. சமீபத்தில் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதைத்தான் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தன்னுடைய கருத்தாக வைத்திருந்தார். இந்த அம்பயர்கள்- ஹாக் ஐ ஆப்ரேட்டர்கள் உரையாடல் மூலம், முடிவெடுக்கும் செயல்முறையைப் பற்றிய நுண்ணறிவை பார்வையாளர்களுக்கும் இது வழங்குகிறது.
2024 ஐபிஎல் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே மீதமிருப்பதால், கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் (SRS) செயல்படுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது நடுவர் முடிவுகளில் துல்லியமான மற்றும் வெளிப்படைத்தன்மையின் புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது.
இந்த புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதற்காக ஞாயிறு மற்றும் திங்கள் என இரண்டு நாட்களில் பயிற்சியை பிசிசிஐ நடத்தியுள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் இந்திய மற்றும் வெளிநாட்டு நடுவர்களை உள்ளடக்கிய சுமார் 15 நடுவர்கள் ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டத்துடன் பணியாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.