20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட், 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டபோதே, அது பந்துவீச்சாளர்களின் உரிமையை பறிக்கிறது என்றும், இதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் அழியும் நிலைக்கு செல்லும் என்ற அபாய குரல் எழுப்பப்பட்டது.
ஆனால் அதிரடியான பேட்டிங், எதிர்பாராத விதத்தில் மாறும் கடைசிநேர த்ரில்லர் போட்டிகள் மற்றும் சூப்பர் ஓவர்கள் கொண்ட பரபரப்பான முடிவுகள் என டி20 கிரிக்கெட் ஆனது ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது.
என்னதான் அதிகப்படியான வரவேற்பை பெற்றிருந்தாலும், பந்துவீச்சாளர்களை டாமினேட் செய்துவரும் டி20 வடிவமானது பேட்ஸ்மேன்களின் ஆதிக்க வடிவமாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் என்ற புதிய ரூல் அறிமுகமான பிறகு, 12 வீரர்கள் விளையாடும் நிலை எட்டியுள்ளதால் பேட்ஸ்மேன்கள் விக்கெட் விழுமோ என்ற எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துவருகின்றனர். இதனால் பந்துவீச்சாளர்களிடையே அழுத்தமும், பயமும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
ஒரு கட்டத்தில் 8 முழுமையான பேட்டர்கள் களத்தில் வந்து ஆடும்போது, பவுலர்கள் தங்களை தாங்களாகவே ஃபேக் ஃபுட்டில் போடுகின்றனர். இது அதிக அனுபவம் இல்லாத பவுலர்கள் என்பதை எல்லாம் தாண்டி, பும்ரா போன்ற நம்பர் 1 உலக பந்துவீச்சாளருக்கும் அழுத்தத்தை கூட்டியுள்ளது என்றால் பொய்யில்லை.
கடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா வீசிய முதல் ஓவரில் 18 ரன்கள் போனபிறகு, அவரும் விக்கெட் வீழ்த்தும் எண்ணத்தை விட்டுவிட்டு ரன்களை கொடுக்காமல் போடுவோம் என்ற பின்தங்கிய நிலைக்கு சென்று பந்துவீசினார்.
எப்போதும் இல்லாதவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 200, 250 ரன்கள் என்பது சுலபமாக அடிக்கப்பட்டுவருகின்றன. அதிலும் இதுவரை விளையாடப்பட்ட 45 போட்டிகளில் 28 முறை 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது பவுலர்களின் பரிதாப நிலையை தான் குறிக்கிறது. இதனால் அதிக அழுத்தத்திற்கு பவுலர்கள் சென்றிருக்கும் நிலையில், ”முகமது சிராஜ், முகேஷ் குமார், அக்சர் பட்டேல்” முதலிய பந்துவீச்சாளர்கள் இம்பேக்ட் விதிமுறையை நீக்குங்கள் என்ற குரலை எழுப்பி உள்ளனர். ’11 வீரர்கள் ஆடுவது தான் கிரிக்கெட் 12 வீரர்கள் ஆடுவது அல்ல’ என்றும், ’ஒன்று ஆடுகளத்தை மாற்றுங்கள் அல்லது இம்பேக்ட் வீரர் விதிமுறையை நீக்குங்கள்’ என்றும் என பல வீரர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
முகமது சிராஜ் - தயவுசெய்து IMPACT PLAYER விதிமுறையை அகற்றுங்கள், விக்கெட்டுகள் ஏற்கெனவே தட்டையாக உள்ளன. அதனால் பந்துவீச்சாளர்களுக்கு எதுவும் இல்லாமல் இருக்கிறது, இதற்கிடையில் தற்போது இம்பேக்ட் விதிமுறையால் பேட்டர்கள் எல்லாவிதமாகவும் வெளியே வருகிறார்கள்.
முகேஷ் குமார் - சர்வதேச அளவில் 12 வீரர்கள் விளையாடுவதில்லை என்றால், ஐபிஎல்லில் மட்டும் எதற்காக விளையாட வேண்டும்? 12 வீரர்களுடன் ஒரு அணி செல்லும்போது, ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகள் சரிந்தாலும், அடுத்து களத்திற்கு வரும் வீரர் அவுட்டாகிவிடுவோம், அணியை நிலைப்படுத்த நிலைத்து நின்று ஆடவேண்டும் என்ற எந்தவிதமான பயமும் இல்லாமல் விளையாடுகிறார்கள். இந்த சூழலில் ஆடுகளத்தின் தன்மையை மாற்ற வேண்டும் அல்லது 12 வீரர்களை விளையாட அனுமதிக்கக்கூடாது.
அக்சர் பட்டேல் - நான் இம்பேக்ட் பிளேயர் விதியின் பெரிய ரசிகன் அல்ல. ஏனென்றால் ஒரு ஆல்-ரவுண்டராக, இந்த விதி முறையானது பேட்ஸ்மேன் அல்லது பவுலருக்கு மற்றுமே பயன்படுத்தப்படும் என்று எனக்குத் தெரியும். ஒரு ஆல்ரவுண்டரை அணிக்குள் எடுத்துவரும் ஒரு வாய்ப்பை எப்போதும் இம்பேக்ட் விதிமுறை ஏற்படுத்தாது.
ஆனால் பவுலர்கள் மீது அழுத்தம் கூடுகிறது என்று ஒருதரப்பில் சொல்லப்பட்டாலும், அதிக ரன்கள் குவிக்கப்படுவதற்கு பவுலர்களே தான் காரணம் என டிவைன் ப்ரோவோ மற்றும் முத்தையா முரளிதரன் முதலிய பந்துவீச்சு ஜாம்பவான்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்படுவது குறித்து பேசியிருக்கும் முத்தையா முரளிதரன், “நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வழங்கப்படுவதற்கு பந்துவீச்சாளர்களே காரணம். சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் பந்தை அதிகமாக திருப்புவதில்லை, ஒரு ஓவரில் பேட்ஸ்மேன் இறங்கிவந்து டாமினேட் செய்த பிறகு எந்த ஸ்பின்னரும் வேரியேசனை எடுத்துவரவே விரும்புவதில்லை. நீங்கள் பேட்ஸ்மேனை ஆதிக்கம் செலுத்த வேரியேசன் தேவையென்பது முக்கிய அளவுகோளாக பார்க்கப்படுகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.
அதேபோல டிவைன் பிராவோ பேசும்போது, “டி20களில் பந்துவீச்சாளர்கள் சிரமப்படுவதற்கு முக்கிய காரணம், பவுலர்கள் தங்கள் திறமை மீது நம்பிக்கை வைப்பதில்லை. அவர்கள் தம்மாலும் யார்க்கர் பந்துகளை வீசமுடியும் என்ற திறமையை நம்பாமல் இருக்கின்றனர். அதனால்தான் அதிகப்படியான அழுத்தத்திற்கு செல்கின்றனர். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் பேட்ஸ்மேனை பீட்செய்வதற்கு யார்க்கர் லெந்த் டெலிவரிகள் ஆயுதமாக இருக்கின்றன. அதை சரியாக பயன்படுத்தும் பவுலர்கள் வெற்றிகரமான டி20 பவுலராக மாறியுள்ளனர்” என்று கூறினார்.
அனைத்து அணிகளும் ஃபிளாட் பிட்ச்களை விரும்புவதும், உடன் இம்பேக்ட் விதிமுறையால் 8 முழுமையான பேட்ஸ்மேன்கள் ஆடுவதும் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை அதிகமாக்குகிறது என சொல்லப்படும் அதேவேளையில், சுனில் நரைன், பும்ரா போன்ற வீரர்களால் மட்டும் எப்படி இன்னமும் சக்சஸ்ஸாக இருக்கமுடிகிறது என்ற கேள்வியையும் பல முன்னாள் வீரர்கள் எழுப்பியுள்ளனர்.
உண்மையில் பந்துவீச்சாளர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக பந்துவீசிவருவதும், அதிக ரன்கள் குவிக்கப்படுவதற்கு ஒரு காரணமாக மாறியுள்ளது என்பதை மறுக்க முடியாது.