டேவிட் ஜான்சன் எக்ஸ் தளம்
T20

இந்திய அணியின் முன்னாள் வீரர்.. கர்நாடகாவில் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை.. ஜெய்ஷா இரங்கல்!

Prakash J

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் கர்நாடக மாநிலம் கொத்தனூர் கனகஸ்ரீ லேஅவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று (ஜூன் 20) காலை, பால்கனியில் இருந்து அவர் தவறி விழுந்தோ அல்லது மன அழுத்தம் காரணமாகவோ தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இன்று காலை 11.15 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், அப்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கொத்தனூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து கொத்தனூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். டேவிட் ஜான்சன் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இதையும் படிக்க: INDvSA|இந்தியாவுக்குப் பதிலடி.. இருவர் சதம்; கடைசி வரை திக் திக்.. நூலிழையில் தென்னாப்ரிக்கா தோல்வி!

டேவிட் ஜான்சனின் இறப்புக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கௌதம் கம்பீர், அனில் கும்ப்ளே, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகி ஜெய் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த வலதுகை வேகப்பந்து வீச்சாளரான டேவிட் ஜான்சன், 1971 அக்டோபர் 16 அரசிகெரே பகுதியில் பிறந்தார். 1990களின் நடுப்பகுதியில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக விளையாடினார். 1996இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது அவர் 157.8 கிமீ வேகத்தில் பந்துவீசியிருந்தார். இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளிலும், 39 முதல்தரப் போட்டிகளிலும் விளையாடியிருந்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் இடம்பெறவில்லை.

இதையும் படிக்க: 24 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்.. வடகொரிய அதிபரைச் சந்தித்த புதின்.. உற்றுநோக்கும் அமெரிக்கா!