ஹர்பஜன் சிங் எக்ஸ் தளம்
T20

’மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறேனா?’ - நெட்டிசனின் கேள்விக்கு காட்டமாக பதிலடி கொடுத்த ஹர்பஜன் சிங்!

Prakash J

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணி, தொடரிலிருந்து வெளியேறியது. இதனால், அவ்வணி மீது நிறைய விமர்சனம் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அவ்வணியின் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டனே அணியை கடுமையாக சாடியிருந்தது கிரிக்கெட் உலகில் பேசுபொருளானது.

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங், “பாகிஸ்தானுடன் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி, இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாருங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ”ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; நீட் தேர்வை ரத்து செய்க” - பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்!

இதையடுத்து, நெட்டிசன்கள் ஹர்பஜன் சிங்கை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ’மாநிலங்களவை எம்.பியான ஹர்பஜன் சிங் எதற்காக கிரிக்கெட் கமெண்ட்ரி செய்து கொண்டிருக்கிறார். இதன்மூலம் மக்களின் வரிப்பணத்தைத்தான் அவர் வீணடித்துக் கொண்டிருக்கிறார்’ என பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார். இது பேசுபொருளானது.

இதற்கு ஹர்பஜன் சிங் அந்த எக்ஸ் பதிவை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். அதில், "என்னுடைய எம்.பி சம்பளத்தை படிக்க முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச்செலவுக்கு உதவி செய்கிறேன். அதில் ஒரு ரூபாயை கூட நான் எனக்காக செலவு செய்தது கிடையாது. நானும் வரி செலுத்துபவன் தான். உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவது படிப்பதற்கு உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள், நான் உதவி செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ”எனக்கு இப்போதான் தெரியவந்தது” - ரசிகரை பாதுகாவலர் தள்ளிவிட்ட விவகாரம்.. மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா!

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ‘விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலனுக்காக எனது மாநிலங்களவை சம்பளத்தை பங்களிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது பதிவிட்டிருந்த பதிவில், ‘ஒரு ராஜ்யசபா உறுப்பினராக, விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலனுக்காக எனது ராஜ்யசபா சம்பளத்தை பங்களிக்க விரும்புகிறேன். நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க நான் இணைந்துள்ளேன். என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஜெய் ஹிந்த்’ எனப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: T20 WC|தொடர் தோல்வி.. வெளியேறிய பாகிஸ்தான்.. PCB விசாரணையில் வெளியான புது தகவல்!