மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, கடந்த 4 மாதங்களாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் ஹர்திக் பாண்டியா, தன்னை அழுத்தத்திற்குள் தள்ளாமல் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.
2023 ஐபிஎல் தொடர்வரை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, 2024 ஐபிஎல் தொடருக்கு முன்பு மும்பை அணியால் வர்த்தகம் செய்யப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்றபோதும், ரோகித் சர்மாவின் கையிலிருந்த கேப்டன்சியை பறித்து ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது மும்பை அணி நிர்வாகம்.
இதனால் ரோகித் சர்மாவின் கேப்டன்சி பறிபோனதற்கு காரணம் மற்றும் 5 கோப்பையை முதல்முறையாக வென்ற ஒரு ஐபிஎல் கேப்டனை பவுண்டரி லைனுக்கு அலைக்கழித்தது என பல விஷயங்களால் ஹர்திக் பாண்டியா மீது அதிருப்தியடைந்த ரசிகர்கள் அவருக்கு எதிராக கடுமையாக நடந்துகொண்டனர். ஹர்திக் பாண்டியா விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போதும் அவருக்கு எதிராக அதிகப்படியாக சத்தமிட்ட ரசிகர்கள் கண்மூடித்தனமான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இவை அனைத்திற்கும் மேலாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், நாய் ஒன்று மைதானத்திற்குள் வர அதையும் “ஹர்திக் ஹர்திக்” என சத்தமிட்ட ரசிகர்கள் ஹர்திக்கின்மீது வெறுப்பின் உச்சிக்கே சென்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி மாற்றத்தால் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மாவிற்கு இடையே பிரச்னை என்றும், அதனால் ஹர்திக் பாண்டியா டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்றும், இந்தியாவின் துணைக்கேப்டனாக ரிஷப் பண்ட் தான் செயல்படபோகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்தியாவிற்கான டி20 உலகக்கோப்பை அணியில் துணைக்கேப்டனாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஹர்திக் பாண்டியா, வார்ம் அப் போட்டியில் ஹாட்ரிக் சிக்சர்களுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
அதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா, பாகிஸ்தான் அணியை மிடில் ஓவர்களில் ரன்கள் அடிக்காமல் கட்டுப்படுத்தினார். 13வது ஓவரில் ஒரு விக்கெட்டுடன் ஒரு ரன் மற்றும் 16வது ஓவரில் 5 ரன்னுடன் ஒருவிக்கெட் என, தேவையான நேரத்தில் ஃபகர் ஜமான் மற்றும் சதாப் கான் இரண்டுபேரையும் வெளியேற்றிய ஹர்திக் பாண்டியா, 4 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளுடன் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக எப்போது விளையாடினாலும் தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றியை தேடித்தரும் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.
2017 சாம்பியன்ஸ் டிரோபி பைனலில் தனியாளாக போராடியது முதல் 2022 டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்ததுவரை ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பந்துவீச்சில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் பந்துவீசிய ஒருபோட்டியில் கூட விக்கெட் எடுக்காமல் போனதில்லை. டி20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியில் விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 6 விக்கெட்டுகளுடன் இர்ஃபான் பதானின் ரெக்கார்டை சமன்செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக “ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, இந்தியா” என எந்த இடத்தில் விளையாடினாலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர். ஐபிஎல்லின் போது எழுந்த விமர்சனங்களை கடந்து “இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான், இந்தியா கோப்பை வெல்ல ஹர்திக் இருப்பது அவசியம்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.