சஞ்சு சாம்சன், தோனி கோப்புப் படம்
T20

”ரூ.500 டிக்கெட்டை ரூ.8000-க்கு விக்கிறாங்க”-14 மணி நேரம் காத்திருந்தும் கிடைக்கவில்லை எனப் புகார்!

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சங்கீதா

17-வது ஐபிஎல் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு நடைபெறவுள்ளது. இதில், தோனி தலைமையிலான சென்னை அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை அணி, லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரானப் போட்டிகளில் வெற்றுபெற்று நாளை ஹாட்ரிக் வெற்றியைப் பெற காத்திருக்கிறது.

தோனி, சஞ்சு சாம்சன்

அதேவேளையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தனது மூன்றாவது வெற்றியைப் பெற காத்திருக்கிறது. அந்த அணி இதுவரை நடந்த போட்டிகளில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால், இரு அணிகளும் 3-வது வெற்றியை பதிவுசெய்ய காத்திருப்பதாலும், சென்னை அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதாலும் நாளையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ள நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 38 ஆயிரம் இருக்கைகள் இருக்கும் நிலையில், 14 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

14 மணிநேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று காத்திருந்தும் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றும், 1500 முதல் 2000 டிக்கெட்டுகளை மட்டும் விற்றுவிட்டு டிக்கெட் இல்லை என்று கவுன்டரில் கூறுவதாகவும், ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கார்டு, ஜி பே என எதிலும் பணம் செலுத்த முடியவில்லை என்றும், டிக்கெட்டுக்கு பணம் கொடுத்தே வாங்கச் சொல்கிறார்கள் என்றும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், அனைத்து ரசிகர்களுக்கும் டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதைப் பயன்படுத்தி, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, ஆயிரத்து 500 ரூபாய் விலையுள்ள டிக்கெட்டை 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். சிலர் முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்கிவைத்துக்கொண்டு அவற்றைக் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதனைத் தடுக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், அண்மையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போதும் இதே குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்ற 13 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2019-ம் ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன், எம்.சி.சி. பெவிலியன் சேர்த்து 11 கேலரிகள் உள்ளன. இதில் எம்.சி.சி. பெவிலியன் பொறுத்தவரை எப்போதும் அது முழுக்க மெட்ராஸ் கிரிக்கெட் சங்கம் நிர்வாகிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு வருகிறது. அதனைத் தவிர 10 கேலரிகளிலும் தொடர்ச்சியாக ரசிகர்கள் போட்டிகளை பார்க்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சார்பில், மைதானத்தின் இரண்டு பக்கங்களில் உள்ள CDE மற்றும் IJK என வெறும் 6 கேலரிகளில் மட்டுமே ரசிகர்கள் டிக்கெட் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானம்

மைதானத்திற்கு நேராக இருக்க கூடிய H, G மற்றும் F கேலரிகளில் ஒரு டிக்கெட் கூட ரசிகர்கள் வாங்குவதற்கு அனுமதிக்கப்படாமல் உள்ளது. அதேபோல் C கேலரியில் உள்ள UPPER கேலரியிலும் ரசிகர்கள் டிக்கெட் வாங்க அனுமதிக்கப்படாமல் உள்ளது.