தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றிபெற்ற நிலையில் 1-1 என தொடர் சமன்செய்யப்பட்டது.
இந்நிலையில் அடுத்தடுத்து நடைபெற்ற 3வது மற்றும் 4வது போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்த திலக் வர்மா, இந்தியாவை 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல பெரிய காரணமாக இருந்தார்.
இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்தவிதமும், அணி வீரர்களுக்கு ஆதரவு கொடுத்தவிதமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டை பெற்றுவருகிறது. எந்தளவு அவருடைய கேப்டன்சி இருந்தது என்றால், ரசிகர்கள் அவரை இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களான கங்குலி மற்றும் தோனியுடன் ஒப்பிட்டு புகழும் வகையில் அமைந்திருந்தது என பாராட்டுகளை அடுக்கிவருகின்றனர்.
1999 - 2000ம் ஆண்டில் இந்திய அணியின் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இந்திய அணியும் தொடர்ந்து அப்போது மோசமாக செயல்பட்டதால் அப்போதைய கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகினார். இதனையடுத்து கங்குலியை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. இப்படியொரு இக்கட்டான சூழலில் கேப்டன் பொறுப்பை ஏற்ற கங்குலி இந்திய அணியை அடுத்த தலைமுறைக்கும் சிறந்த அணியாக கட்டமைத்தார். இன்றைய உலகின் நம்பர் 1 அணியாக இந்தியா இருக்கிறது என்றால் அதற்கெல்லாம் விதை போட்டவர் கங்குலி.
வேகம், விவேகம், ஆக்ரோஷம், அணி வீரர்களை தன்வீரர்களாக கருதியது என கங்குலியின் பல்வேறு குணாதிசயங்களும், ஒரு வீரரிடம் திறமை இருக்கிறது என்றால் அவர் சில போட்டிகளில் சோபிக்காமல் போனாலும் கூட தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது என இந்திய கிரிக்கெட்டின் தி கிரேட் கேப்டனாக இன்றுவரை கங்குலி தலைசிறந்து நிற்பதற்கு இவைதான் காரணங்களாக இருந்துவருகின்றன.
தோனி ஆரம்பகால போட்டிகளில் தொடர்ந்து சொற்ப ரன்களில் வெளியேறிய போதும், தோனியிடமிருந்த திறமையை கண்டுபிடித்த கங்குலி தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகளை வழங்கினார். பெரிய ரன்களை எடுக்க டாப் ஆர்டரில் களமிறக்கினார். அவரிடமிருந்து கற்றுக்கொண்டதோ என்னவோ தோனியும் கேப்டனான பிறகு வீரர்களிடமிருந்த திறமையை அடையாளம் கண்டு அவர்களுக்கான வாய்ப்பை தொடர்ந்து வழங்கினார். அப்படிதான் ரோகித் சர்மாவை தொடக்கவீரராக களமிறக்கி வெற்றிகண்டார் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற எம்எஸ் தோனி.
இப்படி கங்குலி மற்றும் தோனியிடம் இருந்த சிறந்த கேப்டனுக்கான குணாதிசயங்கள், சூர்யகுமார் யாதவிடமும் தற்போது இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுமழை பொழிந்துவருகின்றனர். கேப்டனாக பொறுப்பேற்றபோது “நான் கேப்டனாக இருக்கவிரும்பவில்லை, ஒரு சிறந்த லீடராக இருக்க விரும்புகிறேன்” என கூறிய சூர்யகுமார் யாதவ், அதனை சரியாக செய்துவருவதாக பாராட்டை பெற்றுவருகிறார்.
சூர்யகுமார் யாதவ் புகழப்படுவதற்கான 3 காரணங்களை இப்போது பார்க்கலாம்..
சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு என்பது அரிதிலும் அரிதாகவே இந்திய அணியில் வழங்கப்பட்டது. கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டாலும், அவர் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறமட்டார். இது அப்படியே சுழற்சி முறையில் நடந்துகொண்டிருந்த வேளையில், ஒரு சிறந்த திறமையுடைய வீரருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கொடுக்கப்படுகிறது என ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர்.
இத்தகைய சூழலில்தான் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக கொடுத்த உத்திரவாதம் மற்றும் நம்பிக்கை, சஞ்சு சாம்சனை 5 போட்டிகளில் 3 டி20 சதங்களை எடுத்துவர பெரிய காரணமாக அமைந்துள்ளது. தன்னுடைய கடைசி 5 டி20 போட்டிகளில் 100, 100, 0, 0, 100 என மிரட்டியுள்ளார் சஞ்சு சாம்சன்.
இந்நிலையில் தன்னுடைய பேட்டிங் குறித்து பேசிய சஞ்சு, “நான் துலீப் டிரோபியில் விளையாடும் போது, சூர்யாகுமார் என்னிடம் வந்து நீங்கள் ரன்கள் அடித்தாலும், அடிக்காவிட்டாலும் அடுத்த 7 போட்டிகளில் இந்தியாவுக்காக ஓப்பன் செய்யப்போறீங்க... தயாரா இருங்க என்று கூறினார். அவர்தான் எனக்கு மிகப்பெரிய உறுதியை அளித்தார். இப்படியான கேப்டனின் நம்பிக்கையானது உங்களுக்கு கூடுதல் நம்பிக்கையைத் தருகிறது" என்று பேசியுள்ளார்.
சஞ்சு சாம்சன் என்ற சிறந்த பேட்ஸ்மேனுக்கு ஒரு கேப்டனாக சூர்யகுமார் கொடுத்த நம்பிக்கை, அவரின் சிறந்த திறனை வெளிக்கொண்டுவர பெரிய உந்துகோலாக அமைந்துள்ளது.
திலக் வர்மா ஒரு சிறந்த துடிப்பான இளம்வீரராக இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் காயம் காரணமாக அவருடைய திறமையை அவரால் வெளிக்கொண்டுவர முடியாமல் போனது. இவருக்கு ஏன் இவ்வளவு வாய்ப்புகள் கொடுக்கிறீங்க என்ற கேள்விகளும் சமீபதத்தில் எழுப்பப்பட்டன.
இத்தகைய சூழலில்தான் தென்னாப்பிரிக்கா மண்ணில் தொடர்ச்சியாக 2 டி20 சதங்களை அடித்து எல்லோரையும் மிரட்சியில் தள்ளியுள்ளார் திலக் வர்மா. அடுத்தடுத்து இரண்டு சதங்களுக்கு பிறகு பேசிய திலக் வர்மா, “என்னுடைய கேப்டனுக்கும், கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன், தென்னாபிரிக்கா மண்ணில் 2 சதங்கள் அடித்திருப்பது ஏதோ கற்பனை போல இருக்கிறது” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தன்னுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பை கோரிய திலக்வர்மா நேராக கேப்டன் சூர்யகுமாரிடம் சென்று, “நான் ரன்களை அடிக்க விரும்புகிறேன், எனக்கு டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு வழங்குங்கள்” என்று கேட்டுள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட சூர்யகுமார் யாதவ் தன்னுடைய 3ம் நிலை பேட்டிங் ஆர்டரை மாற்றிக்கொண்டு அந்த இடத்தில் திலக் வர்மாவை பேட்டிங் செய்ய அனுமதித்தார். பிறகு நடந்தது எல்லாம் காலத்தால் அழிக்க முடியாதவை. இந்த நிகழ்வை சூர்யகுமார் யாதவ் போட்டிக்கு பிறகு தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது போட்டியில் 283 ரன்கள் குவித்த இந்திய அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 10 ரன்களுக்கே 4 விக்கெட்டை கைப்பற்றி போட்டியை கிட்டத்தட்ட சீல் செய்துவிட்டது.
அப்போது பவர்பிளே முடிந்தபிறகு பந்துவீசுவதற்கு தயாராக இருங்கள் என சூர்யகுமார் சைகை காட்டியது போட்டி கேமராவில் பதிவானது. அவர் ஏதோ முக்கியமான பவுலருக்கு அழைப்பு விடுக்கிறார் என நினைத்தபோது, அடுத்த ஓவரை வீச பந்தானது ரமன்தீப் சிங்கிடம் கொடுக்கப்பட்டது.
டி20 அறிமுகம் பெற்று இரண்டாவது போட்டியில் விளையாடிய ரமன்தீப் சிங்கிடம் இருக்கும் பந்துவீச்சு திறமையை வெளிக்கொண்டுவரும் விதமாக அவருக்கான வாய்ப்பை சூர்யகுமார் வழங்கினார். 3.2 ஓவர்களை வீசிய ரமன்தீப் சிங் ரன்களை விட்டுக்கொடுத்தாலும் முதல் சர்வதேச விக்கெட்டை கைப்பற்றினார்.
டி20 போட்டியில் எந்தவொரு வீரரும் போட்டியை மாற்றக்கூடியவர் என்பதால் ஒவ்வொரு வீரரிடம் இருக்கும் ஆல்ரவுண்டர் திறமையை பயன்படுத்திக்கொள்வது சிறந்த கேப்டனுக்கான குவாலிட்டியாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.