AFG pt desk
T20

T20 WC: ஆஸ்திரேலியாவின் கனவை தகர்த்து வரலாற்று சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் - ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆஸ்திரேலியா கனவை தகர்த்து உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்று வரலாறு படைத்தது. கண்ணீர் பொங்கும் கொண்டாட்டத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர்களும், வீரர்களும் ஈடுபட்டனர்.

webteam

டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இதில் வளர்ந்து வரும் அணிகளான அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றில் குரூப் சி பிரிவில் இடம் பெற்றிருந்தது. அந்த பிரிவில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றிருந்தன. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

aus vs afg

இதையடுத்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, குரூப் 1 பிரிவில் இடம் பெற்றது. இப்பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா என முன்னணி அணிகள் இருந்தன. இதில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்தியாவிற்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் குரூப் 1 பிரிவில் அரையிறுதிக்கு செல்லும் 2வது அணி எது? என்பதை தீர்மானிக்கும் முக்கிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேச அணிக்கு எதிராக விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அரையிறுதிக்கு முன்னேற 116 ரன்களை 12.1 ஓவர்களில் அடைய வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் வங்கதேச அணி களமிறங்கியது.

SA AFG

ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இலக்கை 12.1 ஓவருக்குள் வங்கதேசத்தால் அடைய முடியாததால் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது. இருந்தும் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் செல்லும் நிலை இருந்ததால், வெற்றி முனைப்பில் வங்கதேசம் விளையாடிது. ஆனால் ஆப்கானிஸ்தானின் சிறப்பான பந்து வீச்சால் வங்கதேசம் 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் முதல்முறையாக நுழைந்து வரலாறு படைத்தது.

வங்கதேசத்தின் வெற்றியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது. 2022ஆம் ஆண்டுக்குப்பின் தொடர்ந்து 2வது முறையாக அரையிறுதிக்குள் செல்லாமல் ஆஸ்திரேலியா அணி வெறியேறியது.

எப்போது, எங்கு என்ன நடக்கும் என நிச்சயமற்ற வாழ்க்கைக்கு மத்தியில், பல்வேறு சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கிரிக்கெட் பயிற்சி எடுத்து டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்குள் ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியதை, அந்த தேசத்தின் மக்கள் வீதியில் திரண்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.