ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா X
T20

ரோகித்தை அவமரியாதை செய்த ஹர்திக்.. 12 முறை எழுந்த எதிர்ப்பு குரல்! MI-ஐ வீழ்த்தி GT அசத்தல் வெற்றி!

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடருக்கான டிரேடிங் ஆரம்பித்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கும், ரோகித் சர்மா ரசிகர்களுக்கும் இடையே பெரிய யுத்தமே நடந்துவருகிறது. காரணம், மும்பை அணியின் கேப்டனாக 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய மும்பை அணி, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ரோகித் சர்மாவிடம் சொல்லிவிட்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று மும்பை அணி தரப்பில் சொல்லப்பட்டாலும், ரோகித் சர்மாவின் தரப்பிலிருந்து அது மறுக்கப்பட்டது. ஒரு சாம்பியன் வீரரின் கேப்டன்சி பதவியை இப்படியான முறையில் பறிக்க கூடாது என்று அதிருப்தியடைந்த ரோகித் சர்மா ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியை UNFOLLOW செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

rohit sharma, hardik pandya

தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மீது ரோகித் சர்மா ரசிகர்கள் வெறுப்பை வெளிப்படுத்திய நிலையில், கேப்டன்சி பதவி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா “என்னை மீறி நடக்கும் செயல்களுக்கு நான் பொறுப்பில்லை” என்று கூறி எரியும் தீயில் எண்ணெயை ஊற்றினார். முடிவில் ரோகித் சர்மா 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் விளையாடமாட்டார் என்று எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அணிக்காக மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா இன்றைய போட்டியில் பங்கேற்றார்.

12 முறை எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்!

குஜராத் அணியின் கேப்டன்சி பதவியை உதறிவிட்டு வந்த ஹர்திக் பாண்டியாவின் மும்பை அணி, கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

ஹர்திக் பாண்டியா

அகமதாபாத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ஹர்திக் பாண்டியா பேசும்போது அவருக்கு எதிராக மைதானத்தில் நிரம்பியிருந்த ரசிகர்கள் அதிகப்படியான சத்தத்தை எழுப்பினர். தொடக்கத்தில்தான் சத்தமிட்டார்கள் என்றால் பந்துவீச வரும் போதும், ஃபீல்டிங் நிறுத்தும் போதும் என 12முறை ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்கள் சத்தமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

சாய் சுதர்சனால் 168 ரன்கள் எட்டிய GT!

மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விரட்டி நல்ல டச்சில் தெரிந்த சாஹாவை, ஒரு அற்புதமான யார்க்கர் மூலம் போல்டாக்கி அனுப்பிவைத்தார் ஜஸ்பிரித் பும்ரா. அதற்கு பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

sai sudharsan

3 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்ட கில் 31 ரன்களை எடுத்து வெளியேற, மறுமுனையில் நிலைத்து நின்ற சாய் சுதர்சன் 45 ரன்கள் அடித்து கலக்கிப்போட்டார். நடுவில் சிறப்பாக பந்துவீசிய மும்பை அணி இழுத்துப்பிடித்தாலும், இறுதியாக வந்த ராகுல் திவேத்தியா கடைசிநேரத்தில் 2 பவுண்டரிகள், 1 சிக்சர் என பறக்கவிட 20 ஓவர் முடிவில் 168 ரன்களை எட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

43 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கம் கொடுத்த ரோகித்!

20 ரன்கள் குறைவாக எடுத்திருந்தாலும் இந்தப்போட்டியில் வெல்லமுடியும் என்ற நம்பிக்கையில் பந்துவீசியது குஜராத் அணி. இஷான் கிஷன் 0 ரன்னில் வெளியேறினாலும், ரோகித் சர்மா மற்றும் நமன் திர் இருவரும் அடுத்தடுத்து சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி ரன்களை எடுத்துவந்தனர். 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என கெத்துக்காட்டிய ரோகித் சர்மா 43 ரன்களும், டெவால்ட் பிரேவிஸ் 46 ரன்களும் அடித்து ரன்களை எடுத்துவர 12 ஓவர்களுக்கு 107 ரன்களை எட்டி சிறப்பான நிலையிலேயே இருந்தது மும்பை அணி.

ரோகித் சர்மா

ஆனால் ரோகித்தை 43 ரன்னில் வெளியேற்றிய சாய் கிஷோர் மும்பை இந்தியன்ஸ் அணியை இழுத்துப்பிடித்தார். அனுபவ வீரர் ரோகித் வெளியேறியதும் களத்தில் இருந்த இளம் வீரர்களை தன்னுடைய அனுபவத்தால் சுழன்றடித்த மோஹித் சர்மா, அடுத்தடுத்து பிரேவிஸ், டிம் டேவிட் இருவரையும் வெளியேற்றி கலக்கிப்போட்டார். முக்கியமான நேரத்தில் பந்துவீச வந்த ரசீத் கான், கடைசி 2 ஓவரில் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க ஆட்டத்தில் சுவாரசியம் கூடியது.

போட்டியை கோட்டைவிட்ட ஹர்திக் பாண்டியா!

வெற்றிபெறவேண்டிய இடத்தில் இருந்த மும்பை அணி தீடீரென கடைசி 2 ஓவருக்கு 27 ரன்கள் தேவையென்ற கடினமான நிலைக்கு சென்றது. 19வது ஓவரில் திலக் வர்மாவை வெளியேற்றிய ஜான்சன், 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் பக்கம் திரும்பியது.

கில்

கடைசி 6 பந்துக்கு 19 ரன்கள் தேவை என போட்டி மாற, ஸ்டிரைக்கில் இருந்த ஹர்திக் பாண்டியா முதலிரண்டு பந்துகளில் சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்டு குஜராத் ரசிகர்களுக்கு பீதியை ஏற்படுத்தினார். ஆனால் 3வது பந்தை சிறப்பாக வீசிய உமேஷ் யாதவ் ஹர்திக் பாண்டியாவை அவுட்டாக்கி வெளியேற்ற, ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

மும்பை கேப்டனாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார் ஹர்திக் பாண்டியா, அதேநேரத்தில் குஜராத் கேப்டனாக முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவுசெய்துள்ளார் சுப்மன் கில்.

ரோகித்தை அவமரியாதை செய்த ஹர்திக்!

போட்டியில் ரோகித் சர்மாவை ஹர்திக் பாண்டியா நடத்திய விதம், சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஃபீல்டிங்கின் போது 30 யார்ட் வட்டத்தில் இருந்த ரோகித் சர்மாவை திடீரென லாங்க்-ஆன் ஃபீல்டிங்கிற்கு செல்லுமாறு ஹர்திக் பாண்டியா உத்தரவிட்டார். அதை சற்றும் எதிர்ப்பாராத ரோகித் பின்னால் திரும்பி பார்த்துவிட்டு ‘என்னையா கூறுகிறாய்?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார். ‘ஆமாம் சென்று லாங்க்-ஆனில் நில்லுங்கள்’ என ஹர்திக் சொல்ல, வேகமாக சென்று எல்லைக்கோட்டுக்கு அருகில் நின்றார் ரோகித். ஆனால் ‘அங்கு நிற்காதீங்க, தள்ளி நில்லுங்க’ என்று அங்கும் இங்குமாக ரோகித்தை ஹர்திக் அலையவிட, அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வரும் ரோகித் சர்மா ரசிகர்கள், கண்ணீர் ஸ்மைலியை பதிவிட்டு வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர்.

பேசாம நீங்க ஐபிஎல் விளையாடாம டி20 உலகக்கோப்பை மட்டும் ஆடுங்க ரோகித்” என்றும், ”ரோகித் சர்மா இன்னும் இந்திய கேப்டன்தான் என்பதை ஹர்திக் மறந்துவிட்டார் போல” என்றும், ”உங்களை அணியில் எடுத்ததே ரோகித் சர்மாதான் ஹர்திக்” என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை முதல்சுற்றின் முடிவில் ராஜஸ்தான் ராயல் முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றன.