csk, adani x page
T20

கைமாறும் CSK.. கைப்பற்றப் போகிறதா அதானி குழுமம்? வைரலாகும் செய்தி.. உண்மை என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதானி குழுமம் வாங்க இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Prakash J

மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு, நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றிலேயே அந்த அணி வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது அதை மறந்து, டி20 உலகக்கோப்பை பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளனர் ரசிகர்கள். இந்த நிலையில், சிஎஸ்கே அணி பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதானி குழுமம் வாங்க இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

தோனி

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் கோப்பைகளை வென்றுகொடுத்த தல தோனி, அவ்வணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்துவருகிறார். அடுத்துவரும் ஐபிஎல்லிலும் சென்னை அணிக்காக அவர் விளையாட வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், அவர் முழங்காலில் அறுவைச்சிகிச்சை செய்துகொண்டதன் காரணமாக வலியால் அவஸ்தைப்பட்டு வருகிறார். அதன்காரணமாக, அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என தகவல்களும் வெளியாகி வருகின்றன. என்றாலும், இதுகுறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாக அணி நிர்வாகத்திடம் தோனி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: T20WC பயிற்சி| ஷிவம்துபேவுக்கு பவுலிங் பயிற்சி.. ரோகித் பிரத்யேக கவனிப்பு.. ஓரங்கட்டப்படும் ஹர்திக்?

இந்த நிலையில் சிஎஸ்கே அணியை அதானி குழுமம் வாங்க இருப்பதாக வரும் தகவல் வைரலாகி வருகிறது. தற்போது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சிஎஸ்கே அணியை நிர்வகிக்கிறது. அந்த வகையில் பார்த்தால், இதுவரை அந்த அணி நன்றாகவே செயல்பட்டு வருகிறது. தவிர, வருமானத்தையும் குவித்து வருகிறது. மேலும், ஐபிஎல்லிலேயே அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணியாகவும் சென்னை அணி விளங்குகிறது. மேலும், வருமானத்தில் சிறப்பாக இயங்கும் ஓர் அணியை எந்த நிறுவனமும் விற்க முன்வராது.

அதனால், இதில் உண்மை இருக்காது என்றே சென்னை ரசிகர்கள் நம்புகிறார்கள். அதானி குழுமம் யுபிஐ பரிவர்த்தனையில் செயல்பட முயற்சி செய்து வருகிறது. இதற்காக, கடந்த சில நாட்களாக பல்வேறு வங்கிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதிலும் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பேடிஎம் சேவையை அதானி குழுமம் வாங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதை பேடிஎம் சேவை நிறுவனமே மறுத்திருந்தது. அதுபோல, சிஎஸ்கே அணியை அதானி வாங்க இருப்பதாக போலிச் செய்திகளை யாராவது சிலர் பரப்பி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தவிர, ஆடவர் ஐபிஎல் மற்றும் மகளிர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளராகவும் அதானி குழுமம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தோனி, கோலி, ரோகித் யாராலும் செய்ய முடியாத சாதனை! தனி ஒருவனாக சாதித்த தினேஷ் கார்த்திக்!