eng vs oman pt web
T20

ஒரே போட்டியில் உச்சத்துக்கு ஏறிய ரன்ரேட்! பிரமாண்டமாக எழுந்து நிற்கும் இங்கிலாந்து அணி; இமாலய சாதனை!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணியை இங்கிலாந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Angeshwar G

eng vs oman

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் 4 பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுகள் ஜூன் 19 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன. இதில் குரூப் B பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, நமீபியா, ஓமன் போன்ற அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அடுத்தபடியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் போட்டியில், 5 புள்ளிகளுடன் ஸ்காட்லாந்து அணியே முன்னணியில் இருந்தது. ஆனால், இங்கிலாந்து ஓமன் அணிகளுக்கு இடையிலான போட்டி, பட்டியலில் இங்கிலாந்தினையும் கொண்டுவந்துள்ளது.

ஆன்டிகுவாவில் நடைபெற்ற போட்டியில், ஓமன் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று பந்து வீச்சை இங்கிலாந்து தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய ஓமன் அணி வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஓவருக்கு ஒரு விக்கெட் விழுந்துகொண்டே இருந்தது. 10 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழந்து 35 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ஓமன் அணி. முடிவில், 13.2 ஓவரில் 47 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து சுருண்டது. அடில் ரஷீத் 4 விக்கெட்களும், ஆர்ச்சர், வுட் தலா 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

உச்சத்தில் ரன்ரேட்

பின் 48 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கியது. இன்னிங்ஸின் முதல் இரு பந்துகளில் சிக்சர்களை அடித்து அடுத்த பந்திலேயே அவுட்டானார் சால்ட். 2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 24 ரன்களை எடுத்திருந்த நிலையில், பிலால் கான் வீசிய மூன்றாவது ஓவரை துவம்சம் செய்தார் பட்லர். அந்த ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சரை விளாசி 22 ரன்களை சேர்த்தார் பட்லர். இங்கிலாந்து அணி 3 ஓவர்களில் 46 ரன்களை எடுத்திருந்த நிலையில், நான்காவது ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார் பேர்ஸ்டோ. 3.1 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த பிரமாண்ட வெற்றியின் மூலம், நல்ல ரன்ரேட்டில் 3 புள்ளிகள் உடன் 3 ஆவது இடத்தில் உள்ளது. ஆட்டநாயகனாக 4 விக்கெட்களை வீழ்த்திய ஆதில் ரஷித் தேர்வு செய்யப்பட்டார்.

ஏனெனில் இங்கிலாந்து அணியில் ரன்ரேட் என்பது ஓமன் அணியுடனான போட்டிக்கு முன், -1.80 என்ற அளவில் இருந்தது. ஆனால், ஓமன் உடனான போட்டிக்குப் பின், +3.08 என்று ஆனது.

உலக சாதனை படைத்த இங்கிலாந்து

இங்கிலாந்து அணி 101 பந்துகளை மீதம்வைத்து வெற்றிபெற்றதன் மூலம், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தனது பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்குமுன் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 90 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

குரூப் B பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து அணியோ அடுத்து ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி 16 ஆம் தேதி நடைபெறுகிறது. ஸ்காட்லாந்து அணி ரன்ரேட்டில் +2.16 என்ற நிலையில் இருக்கும் காரணத்தால் எப்படியும் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இங்கிலாந்து அணியும் +3 என்ற ரன்ரேட்டில் உள்ளது. அதுமட்டுமின்றி, இங்கிலாந்து அணி அடுத்த போட்டியில் நமீபியா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளை நடைபெறுகிறது. ஸ்காட்லாந்து அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தும்பட்சத்தில், நமீபியாவை இங்கிலாந்து வீழ்த்தினால் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.