Dinesh karthik டிவிட்டர்
T20

RCBvsDC | ‘பேசாம கமெண்ட்ரிக்கே போயிடுங்க DK!’- மிகமோசமான IPL சாதனையில் தினேஷ் கார்த்திக்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கோல்டன் டக் ஆன தினேஷ் கார்த்திக், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனையை படைத்துள்ளார்.

Rishan Vengai

கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக், அந்த அணிக்கு ஃபினிசராக அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஜொலித்தார். மொத்தமாக 16 போட்டிகளில் விளையாடியிருந்த அவர், 55 சராசரி ரன்ரேட் மற்றும் 180+ ஸ்டிரைக் ரேட்டில் 330 ரன்களை குவித்து, பல போட்டிகளை தனியொரு ஆளாக ஆர்சிபிக்கு வென்று கொடுத்தார்.

Dinesh Karthik

இந்நிலையில் ஒரு ஃபினிசராக ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக்கை, இந்திய அணிக்குள் எடுத்துவந்தது நிர்வாகம்.

உலகக்கோப்பையில் ஜொலிக்காத தினேஷ் கார்த்திக்!

அதன்படி கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு இந்திய டி20 அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், 3 வருடங்களுக்கு பிறகு 2022 டி20 உலகக்கோப்பை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். வாய்ப்பே கிடைக்காமல் இருந்த வந்த தினேஷ் கார்த்திக், ஐபிஎல்-ஐ போன்றே உலகக்கோப்பையிலும் சிறப்பாக செயல்படுவார் என்று எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

Dinesh Karthik

ஆனால் ஒரு ஃபினிசராக ஐபிஎல்-ல் வெளிப்படுத்திய ஆட்டத்தை, இந்தியாவிற்காக செயல்படுத்த முடியாமல் சொதப்பிய தினேஷ் கார்த்திக், 2022 உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் வெறும் 14 ரன்களை மட்டுமே அடித்தார். அதனால் அவர் அரையிறுதி போட்டியில் விளையாட அனுமதிக்கப்படாமல் டிராப் செய்யப்பட்டார்.

IPL-லிலும் தொடரும் DK-வின் மோசமான ஆட்டம்!

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஆர்சிபி அணிக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக், இந்த வருட ஐபிஎல் தொடரிலும் மோசமாக செயல்பட்டுவருகிறார். அதன்படி முதல் போட்டியில் 0 ரன்னில் வெளியேறிய கார்த்திக், அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் 9 ரன்கள் மற்றும் 1 ரன்னில் வெளியேறினார்.

தினேஷ் கார்த்திக்

இந்நிலையில் இன்றைய டெல்லிக்கு எதிரான போட்டியிலாவது தன்னுடைய மோசமான பேட்டிங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பார் தினேஷ் கார்த்திக் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் டக் அவுட்டாகி ஆர்சிபி ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் தினேஷ் கார்த்திக் படைத்த மோசமான சாதனை!

கடந்த 4 போட்டிகளில் 2 முறை டக் அவுட்டாகியிருக்கும் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் வரலாற்றில் 15 முறை டக் அவுட்டான வீரராக மாறியுள்ளார். இதன்மூலம் ஐபிஎல்-ல் அதிகமுறை (15 முறை) டக் அவுட்டாகி முதலிடத்தில் இருந்துவந்த மந்தீப் சிங்குடன் இணைந்துள்ளார். இந்த மோசமான சாதனையின் அடுத்தடுத்த இடங்களில் 14 டக் அவுட்களோடு ரோகித் சர்மா மற்றும் சுனில் நரைன் இருக்கின்றனர்.

தினேஷ் கார்த்திக்கின் மோசமான பேட்டிங்க்-ஐ அடுத்து, ஆர்சிபி ரசிகர்கள் தங்களது அதிருப்தியை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.