kl rahul twitter
T20

என்ன ஆச்சு கே.எல்.ராகுல் பேட்டிங்கிற்கு? GT-LSG போட்டிக்கு பின் வைரல் ஆகும் பதிவுகளும், பின்னணியும்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ராகுல், இறுதியில் மோசமாக செயல்பட்டது சர்ச்சையாகி உள்ளது.

Rishan Vengai

நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பந்துவீச்சுக்கு சாதகமான லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டர்கள், ரன்களை சேர்ப்பதற்கே போராடினர். போட்டியின் தொடக்கத்தில் களமிறங்கி இறுதிவரை நிலைத்திருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, 41 பந்துகளில் 40 ரன்களையே அடித்து பொறுமையாகவே விளையாடினார்.

ஹர்திக் பாண்டியா

அதற்கு பிறகு ரவி பிஸ்னோய் வீசிய 18ஆவது ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என பறக்கவிட்ட ஹர்திக், அரைசதம் அடித்து அசத்தினார். 20 ஓவர் முடிவில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என விளாசி 50 பந்துகளில் 66 ரன்கள் அடித்த ஹர்திக் பாண்டியா, 135 ரன்களுக்கு குஜராத் அணியை எடுத்துச்சென்றார்.

கடைசி 7 ஓவரில் ஒரு பவுண்டரியை கூட அடிக்காத லக்னோ அணி!

பின்னர் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் மற்றும் மெயர்ஸ் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி, சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். சிறப்பான டைமிங்கில் மிரட்டி, பவுண்டரிகளை விரட்டிக்கொண்டிருந்த கேஎல் ராகுல், தன்மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், 35 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் போட்டியானது இரண்டாவது பாதியில் அப்படியே தலைகீழாக மாறியது.

கேஎல் ராகுல்

அரைசதம் அடித்தபின்னர் இறுதிவரை களத்தில் இருந்த ராகுல், அதற்கு பிறகு ஒரு பவுண்டரியை கூட அடிக்கவில்லை. கடைசி 7 ஓவர்களில் ஒரு பவுண்டரியை கூட அடிக்காத லக்னோ அணி, மிக மோசமாக செயல்பட்டு கடைசி ஓவரில் மட்டும் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

குஜராத் - லக்னோ போட்டி

இறுதிவரை களத்தில் கேப்டன் ராகுல் இறுதி ஓவரில் 61 பந்துகளில் 68 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னர் முடிவில் 7 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் படுதோல்வியை தழுவியது லக்னோ அணி.

கேஎல் ராகுல் மீது மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு என பரவிய தகவல்

போட்டி முடிவுக்கு வந்த பிறகு, கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடியும் இறுதியில் மோசமாக செயல்பட்டது, சந்தேகத்திற்கு இடமளிப்பதாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. Fixing என்ற வார்த்தையும் ட்விட்டரில் வைரல் ஆனது. இதற்கெல்லாம் மேலாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டதாக ஒரு ஸ்க்ரீன் ஷாட் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பதிவு பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் இல்லை. அது ஒரு போலி அக்கௌன்ட். போலி அக்கௌன்ட்டில் இருந்து சில விஷமிகள் நக்கலுக்காக இப்படியொரு ட்விட் செய்திருக்கிறார்கள். அது வழக்கம் போல வைரலாகி வருகிறது.

கேஎல் ராகுல்

கே.எல்.ராகுல் பேட்டிங்கை கடுமையாக சாடினாலும்..

கே.எல்.ராகுலின் பேட்டிங் தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டியில் விளையாடுவது போல் இருப்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருவதால் இந்தப் போட்டியும் அதேபோல் ஒன்று என சிலர் கூறுகின்றனர். அதேபோல், ஆர்சிபி VS பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இன்றைய குஜராத் டைட்டன்ஸ் VS லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலிய 3 போட்டிகளிலுமே பேட்டிங் செய்வதற்கு கடினமாகவே இருந்தன. பல நெட்டிசன்கள் ராகுலுக்கு ஆதரவாகவும், பல வீரர்கள் ராகுலிற்கு எதிராகவும் தங்களது கருத்துகளை தொடர்ந்து வைத்துவருகின்றனர்.