MS Dhoni @ChennaiIPL| Twitter
T20

CSKvsKKR | “எனக்கு பிரியாவிடை கொடுக்க முயல்கிறார்கள்...”- மஞ்சள் படையின் அன்பால் நெகிழ்ந்த தோனி!

"இன்று எல்லோரும் சேர்ந்து எனக்கு பிரியாவிடை கொடுக்க முயல்கிறார்கள். மிக்க நன்றி!"- தோனி நெகிழ்ச்சி

ஜெ.நிவேதா

‘இதென்ன ஈடன் கார்டன்ஸா இல்லை சேப்பாக்கமா’ என்று நினைக்கும் அளவுக்கு, நேற்றைய சென்னை – அணி ஆட்டத்தின்போது கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம் முழுக்க மஞ்சள் படையால் நிரம்பியிருந்தது. பொதுவாக ஒரு வீரர் அவுட் ஆனால், அந்த அணி ரசிகர்கள் வேதனைப்படுவதும் சோர்ந்துபோவதும்தான் வழக்கம். ஆனால் நேற்று ஜடேஜா அவுட் ஆனபோது, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

CSK vs KKR
எல்லாவற்றுக்கும் ஒரே காரணம், தோனி.

தோனி என்ற ஒற்றை பெயரை, அந்த மைதானமே அதிரும் அளவுக்கு ஒலித்தது. அவ்வளவு கரகோஷங்களுக்கு மத்தியில் கொல்கத்தா அணியை பந்தாடியது தோனி தலைமையிலான சென்னை அணி.

49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு, மைதானத்தில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ‘தல’ தோனி, “இன்று இங்கு கூடியிருக்கும் ரசிகர்களிடமிருந்து எனக்கு கிடைத்த ஆதரவுக்கு மிகவும் நன்றி. இன்று எல்லோரும் சேர்ந்து எனக்கு பிரியாவிடை கொடுக்க முயல்கிறார்கள். மிக்க நன்றி! இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த முறை KKR ஜெர்சியில் வருவார்கள் என நினைக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

Dhoni

தொடர்ந்து நேற்றைய ஆட்டம் குறித்து பேசுகையில், “இன்றைய ஆட்டத்தில் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக தங்கள் வேலையை செய்தார்கள். அதிலும் இடைப்பட்ட ஓவர்களை, சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பார்த்துக்கொண்டனர். எதிரணியிலும் (கொல்கத்தா அணி) நிறைய பவர் ஹிட்டர்கள் இருப்பதால், அவர்களின் திறமையையும் கணக்கில் வைத்து நாங்கள் விளையாட வேண்டியிருந்தது.

நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தேன். யாராவது காயமடைந்தால், அதற்கு பின் அவரை வைத்து பெரியளவில் எதுவும் செய்ய முடியாது. ஆகவே அப்படியொரு சூழல் வருகையில், அவர்களை மோட்டிவேட் செய்துவிட்டு அடுத்து வரும் இளம் வீரருக்கு வரவேற்பளிக்க வேண்டும்.

அணியில் ஒருவரை பேட்டிங்கிற்கு அழைக்கையில், அவர்மீது முழு நம்பிக்கை வைத்து அவருக்கு சுதந்திரமளித்தே அவரை அந்த இடத்தில் இறக்குவோம். இருந்தபோதிலும், அணி என்று வருகையில் ஒருவர் மற்றொருவருக்காக சில விஷயங்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கும்… மற்றொருவர் விளையாட, நாம் சில விஷயங்களை விட்டுக்கொடுத்து, அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுக்க வேண்டியும்வரும்” என்றார்.

ஏற்கெனவே அவர் கடந்த ஆட்டமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தின்போது ஃபேர்வெல் குறித்து பேசிய நிலையில், நேற்றும் பேசியது அவரது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. ட்விட்டர்வாசிகள் பலரும், ‘தயவுசெய்து ஓய்வை அறிவிக்காதீர்கள் தோனி’ ‘தோனிக்கு ஓய்வை பெறும் நிலையே வரக்கூடாதென நினைக்கிறேன்’ என்றெல்லாம் சொல்லி உருகியிருக்கிறார்கள்!