நடந்து முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரரான டிவோன் கான்வே, தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் பேட்டிங் பல போட்டிகளில் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது. மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 672 ரன்கள் எடுத்து, சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்த சீசனில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில், SENZ Mornings என்ற இணையதள செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஐபிஎல் தொடரின்போது எம்.எஸ். தோனி மற்றும் அவரது அணி எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் கிடைத்த வரவேற்பு, நம்பமுடியாத அளவுக்கு இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் நபராகவும், வணங்கப்படுபவராகவும் தோனி இருக்கிறார். அவர் எங்கு சென்று விளையாடினாலும், தொடர்ந்து வந்து அவருக்கு ரசிகர்கள் தரும் ஆதரவு நம்பமுடியாததாக இருந்தது. தோனிக்கு ஆதரவாக ரசிகர்களும், மற்ற மைதானங்களுக்கும் பயணம் செய்து வந்து உற்சாகப்படுத்தியதால், நாங்கள் விளையாடிய ஒவ்வொரு ஆட்டமும் சொந்த மண்ணில் விளையாடியதுப்போன்று இருந்தது. இது மிகவும் சிறப்பானது. நாம் பழகியதை விட வித்தியாசமான உலகமாக இருந்தது. அவரது புகழ் காரணமாக ஓட்டலுக்கு வெளியே அவரால் வேறு எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். வீரர்களின் மரியாதையை தோனி பெற்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணி பற்றி கேட்கப்பட்டதற்கு, “அணிக்குள் ஒரு நல்ல சூழல் இருக்கிறது. தோனி மற்றும் அணியின் உரிமையாளர்களுக்கு இடையில் நல்ல புரிதல் உள்ளது. தோனியின் ஆதரவைப் பெறுவது ஒரு குழுவாகவும், தனிநபராகவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது, நன்மை பயக்கும். சீசன் முழுவதும் ஓபனிங்கில் பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மேலும், பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் மற்றும் கேப்டன் எம்.எஸ். தோனியின் ஆதரவு கிடைத்தது.
ஐபிஎல்லில் எனது ஆட்டத்தை வளர்த்துக் கொள்ளவும், எனது திறமையை வெளிப்படுத்தவும், இது எனக்கு கிடைத்த பெருமைக்குரிய வாய்ப்பாகும். ஒவ்வொரு டி20 ஆட்டத்திற்கும் வெவ்வேறு சூழ்நிலைகள் உள்ளன. மேலும் ஆட்டத்தின் வெவ்வேறு தருணங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை அனுபவம் வாய்ந்த அவர்கள் வாயிலாக என்னை மேம்படுத்துவதற்கும், நான் முன்னேறுவதற்கும் சிறந்ததாக இருந்தது.
சென்னை மைதானம் சுழல் பந்துக்கு உகந்ததாக இருந்தது, அதனால், லக்னோவைப் போலவே மூன்று ஸ்பின்னர்களை நாம் பயன்படுத்த வேண்டும். ஆனால், பெங்களூரு அல்லது மும்பை மைதானங்களில் நீங்கள் விளையாடினால், அது சற்று பேட்டர் ஃப்ரெண்ட்லியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றபோது, போட்டி முடிந்தப்பின்பு பேசிய கான்வே, தனது கிரிக்கெட் வாழ்வில் இது தனக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்று தெரிவித்ததது நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்சிப் கோப்பையை வென்றதை விட, ஐபிஎல் தொடரின் வெற்றி தான் உங்களுக்கு பெரிதாக போய்விட்டதா என்றும், நாட்டுக்காக விளையாடுவதை விட பணத்திற்காக விளையாடுவது தான் உங்களுக்கு முக்கியமா என ரசிகர்கள் பலர் கான்வேவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதையடுத்து, சென்னை அணியின் வெற்றி தனது டி20 கேரியரில் மிக சிறந்த வெற்றியாகவே கருதுகிறேன் என்றும், இருந்தாலும், ஒட்டுமொத்தமாக தன்னுடைய கேரியரில் சிறந்தது என்று சொல்ல மாட்டேன் எனவும், 20 கேரியரில் அது மிகப்பெரிய சாதனையாக இருந்தாலும், அவை அனைத்தையும் விட நியூசிலாந்துக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வென்றதே மிகவும் ஸ்பெஷலாகும் என்று கான்வே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.