நடப்பு 2024 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் முதலிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், எந்த 4 அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு செல்லும் என்ற முக்கியமான கட்டத்திற்கு தொடர் நகர்ந்துள்ளது.
சூப்பர் 8 பிரிவில் இன்றுடன் இரண்டு சுற்று போட்டிகள் முடிவுறும் நிலையில், எந்த 4 அணிகளுக்கு செமிபைனல் செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்துவிடும். குரூப் 2 பிரிவில் நேற்றுடன் இரண்டு சுற்று போட்டிகள் முடிவுற்ற நிலையில், அமெரிக்கா அணியை மிகப்பெரிய வெற்றியின் மூலம் வீழ்த்தியிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு செல்ல இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா முதலிய மூன்று அணிகளுக்கும் கதவை திறந்துவிட்டுள்ளது.
இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் தோல்வி பெறாத அணியாக வலம்வரும் தென்னாப்பிரிக்கா அணி, அரையிறுதிக்கு முன்னதாகவே ஒரு நாக் அவுட் போட்டியில் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது கடைசி சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியே ஆகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அதை ஈடுகட்டும் வகையில் அமெரிக்கா அணியை தரமாக சம்பவம் செய்து அனுப்பியுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதிய சூப்பர் 8 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களே அடித்தது. இரண்டாவது பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி மிகைக்குறைவான டோட்டலை சேஸ் செய்தாலும், சாய் ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் 11 சிக்சர்களை பறக்கவிட்டு போட்டியை 11வது ஒவரிலேயே முடித்துவைத்தனர்.
எப்போதும் சாதுவாக விளையாடும் சாய் ஹோப் 39 பந்துகளில் 4 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி 82 ரன்கள் குவிக்க, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்த விண்டீஸ் அணி +1.814 என நெட்ரேட்டை பயங்கரமாக உயர்த்தியுள்ளது. இதுதான் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி +1.814, இங்கிலாந்து அணி +0.412, தென்னாப்பிரிக்கா அணி +0.625 முதலிய NRR உடன் நீடிக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணி அதிக நெட்ரேட்டும், தென்னாப்பிரிக்க அணி குறைவான நெட்ரேட்டும் வைத்திருப்பதால் தென்னாப்பிரிக்கா தோற்றாலும் அரையிறுதிக்கு செல்லும் நிலையில் இல்லை. ஏனென்றால் இங்கிலாந்து அணி மிகக்குறைவான வித்தியாசத்தில் தான் பின்தங்கியிருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தென்னாப்பிரிக்கா அணி தள்ளப்பட்டுள்ளது.
ஒருவேளை தென்னாப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தோற்றால், இங்கிலாந்து அணி அமெரிக்காவை நல்ல ரன்ரேட்டில் வென்று அரையிறுதிக்கு சென்றுவிடும். உடன் அதிக நெட்ரேட் வைத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தங்களுடைய இடத்தை தக்கவைத்துவிடும்.
இந்நிலையில், 6 போட்டியில் வரிசையாக வென்றதெல்லாம் பலனே இல்லாமல் கடைசி போட்டியில் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு சென்றுள்ளது தென்னாப்பிரிக்கா அணி.