Delhi Capitals Delhi Capitals
T20

IPL 2024 | ரிஷப் பன்ட் - இந்த சீசனின் பலமா பலவீனமா..!

டெல்லி கேப்பிடல்ஸ் சாதிக்குமா? ரிஷப் பன்ட்டின் பங்கு என்ன?

Nithish

ஐ.பி.எல் 2024 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பலமும் பலவீனங்களும் ஆராயப்படுகின்றன. ரிஷப் பன்ட் அணிக்கு முக்கிய வீரராக இருந்தும், அவரின் ஃபார்ம் மற்றும் பிட்னஸ் குறித்த சந்தேகங்கள் உள்ளன. புதிய வீரர் குமார் குஷாக்ரா அணிக்கு புதிய நம்பிக்கை அளிப்பார்.

தொடங்கிவிட்டது ஐ.பி.எல் திருவிழா. தேர்தல் காரணமாக வழக்கமான ஹோம் - அவே பார்மட்டில் நடக்குமா இல்லை மொத்தமாக வேறு எங்காவது இடம் மாற்றிவிடுவார்களா? பி.சி.சி.ஐயோடு முட்டிக்கொண்டிருக்கும் முன்னணி வீரர்கள் ஐ,பி.எல்லில் களம் காண்பார்களா? ஜுன் மாதம் முதல்வாரம் தொடங்கவிருக்கும் உலகக்கோப்பை டி20 தொடருக்கு தேர்வாகும் வீரர்கள் அமெரிக்காவில் பயிற்சி மேற்கொள்ள நேரம் இருக்குமா என ஏகப்பட்ட கேள்விகள் வலம் வந்தாலும், வழக்கத்தைவிட சீக்கிரமாகவே தொடங்கிவிட்டது உலகின் பணக்கார கிரிக்கெட் லீக். பிறகென்ன, நாமும் தொடங்கிவிட வேண்டியதுதான் ஐ.பி.எல்லைத் தொடர, அணிகளின் பலம் பலவீனங்களை அலசும் முதற்கட்ட வேலையை!

இந்த சீசனில் முதலில் நாம் பார்க்கப்போகும் அணி டெல்லி கேப்பிடல்ஸ். ஆண்டு முழுவதும் நன்றாகப் படித்து முதல் ரேங்க் வாங்கி கடைசியில் பொதுத்தேர்வில் கோட்டை விடும் விடலையைப் போலத்தான் டெல்லி. ஏல டேபிளில் சரியான வீரர்களைத் தேர்ந்தெடுப்பது தொடங்கி கோச், மென்டர் என தலைசிறந்த வீரர்களை நிர்வாகத்தில் அமர்த்துவது வரை எல்லாவற்றையும் சரியாக செய்து, ப்ளே ஆப் சுற்றில் சொதப்பி வெளியேறுவார்கள். அதிக முறை ப்ளே ஆப் வரை வந்து இன்னமும் ஐ.பி.எல் கோப்பை வெல்லாத ஒரே அணி (இல்லையே. இன்னொரு அணியும் இருக்கிறதே என உங்களுக்குத் தோணலாம். ஆனால் மேலே இருப்பதை திரும்பவும் படியுங்கள். 'எல்லாவற்றையும் சரியாக செய்தும் கோப்பை வெல்ல முடியாத அணி' - இதுதான் மிகவும் முக்கியம்).

ஏலத்திற்கு முன்னதாய் டெல்லி விடுவித்த வீரர்களின் பட்டியலில் பெரிதாய் சர்ப்ரைஸ் எல்லாம் ஒன்றுமில்லை. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சரி, வெளிநாட்டு வீரர்களும் சரி போன சீசனில் மிகச்சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்கள். எனவே அவர்களில் பெரும்பாலானவர்களை விடுவித்துவிட்டு சுமார் 29 கோடியோடு ஏலத்திற்குள் வந்தது டெல்லி.

அவர்கள் அதிக விலை கொடுத்து எடுத்தது 19 வயதான ஜார்க்கண்ட் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான குமார் குஷாக்ராவை. ரிஷப் பன்ட் ஆடுவாரா இல்லையா என்பது தெரியாத நிலையில் இந்திய விக்கெட்கீப்பர் ஒருவரைத் தேடுவார்கள் என எதிர்பார்த்ததுதான். ஆனால் முதல்தரப் போட்டிகளில் இன்னமும் போதிய அனுபவம் இல்லாத குஷாலை முதல் ஆப்ஷனாக தேர்ந்தெடுப்பார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் சென்னை, குஜராத் போன்ற அணிகளோடு போட்டி போட்டு 7.20 கோடிக்கு.

மிடில் ஆர்டர் பிரச்னையை சரிசெய்ய சன்ரைஸர்ஸ் விடுவித்த ஹாரி ப்ரூக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷாய் ஹோப் என வெளிநாட்டு வீரர்களையும் வாங்கினார்கள். ஹரியானா ஆல்ரவுண்டர் சுமித் குமாரை வாங்குவதாய் நினைத்து ஜார்க்கண்ட் கீப்பர் சுமித்தை ஒரு கோடி கொடுத்து வாங்கி அதன்பின் பல்டியடித்த கொடுமையெல்லாம் வேறு நடந்தது. நார்க்கியாவுக்கு துணையாக ரிச்சர்ட்சனையும் பெரும்தொகை கொடுத்து எடுத்தார்கள். சரி, இவ்வளவு போராட்டத்திற்குப் பின் கோப்பை வெல்லும் அணியாக உருமாறியிருக்கிறதா டெல்லி?

பலம்

போன சீசனில் தனியாளாக டெல்லியை தூக்கி நிறுத்தப் போராடிய வார்னர். 516 ரன்கள். அணியில் வேறு யாருமே 300 ரன்களைக்கூட தாண்டவில்லை என்பதே சொல்லும் வார்னரின் ஆதிக்கத்தை. டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெற்று முழுக்க முழுக்க லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தவிருக்கும் வார்னரை நம்பியே இருக்கிறது இந்த ஆண்டு டெல்லியின் பேட்டிங் பெர்பாமன்ஸ்.

Axar Patel

அக்‌ஷர் படேல் - போன சீசனில் மிடில் ஆர்டருக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட மணிஷ் பாண்டே, ரிப்பல் படேல், அமன் கான், சர்ஃபராஸ் கான் ஆகியோர் மொத்தமாய் சொதப்ப, ஒவ்வொருதடவையும் வந்து அணியை குணா குகையிலிருந்து மீட்கும் குட்டனாய் போராடினார் அக்‌ஷர். வழக்கமாய் ஆடும் ஏழாவது இடத்திலிருந்து ப்ரொமோட் ஆகி, விக்கெட் விழாமல் பாதுகாத்து ஸ்ட்ரைக் ரேட்டையும் தக்கவைத்து, பவுலிங்கில் ரன்களை விட்டுத்தராமல் கட்டுப்படுத்தி என டெல்லி கப்பலை கரைசேர்க்கும் மாலுமியாகவே மாறிப்போனார் அக்‌ஷர். இந்தத் தடவையும் பாரத்தில் பெரும்பங்கு அவர் தலையிலேயே!

குல்தீப் யாதவ் - நடுவே ஒன்றிரண்டு சீசன்கள் காணாமல் போயிருந்த குல்தீப்புக்கு டெல்லி நிர்வாகம் வழியே வந்தது நிஜமாகவே ஒரு மதிப்புமிக்க செகண்ட் இன்னிங்க்ஸ். அந்த நன்றியை கடந்த இரண்டு சீசன்களாக தன் பவுலிங் மூலமாக செலுத்தி வரும் குல்தீப் தான் இந்த ஆண்டு பவுலிங் டிபார்ட்மென்ட்டின் பொதுச் செயலாளர். இவரும் அக்‌ஷரும் சேர்ந்து மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவார்கள் என்பதால் பேட்ஸ்மேன்களின் வேலைப்பளு கொஞ்சம் இலகுவாகும்.

பலவீனம்

ரிஷப் பன்ட் - பன்ட்டின் பேரை பலவீனங்களின் பட்டியலில் பார்க்க அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் விபத்திற்குப் பின் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் எந்தவித கிரிக்கெட் பயிற்சியும் இல்லாமல் ஐ.பி.எல்லில் களமிறங்குகிறார் பன்ட். அவரின் வருகை அணிக்கு பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும்தான். ஆனால் ஒருவேளை அவர் ஃபார்முக்கு திரும்ப தாமதமானால் டெல்லி அணியின் மிடில் ஆர்டரில் நிரப்பவே முடியாத ஒரு வெற்றிடம் உண்டாகும். அதனால் இங்கே பலவீனம் பன்ட் அல்ல, இப்போதைக்கு கணிக்க முடிந்திடாத அவரின் ஃபார்மும் பிட்னஸும் மட்டுமே!

ரிஷப் பன்ட்

நான்கு கோடி கொடுத்து எடுத்த ஹாரி ப்ரூக் சொந்தக் காரணங்களுக்காக தொடரிலிருந்து தற்போது விலகியிருக்கிறார். பேக்கப்பான ஸ்ட்ப்ஸும் இதுவரை ஐ.பி.எல்லில் பெரிதாக சோபிக்கவில்லை. ஸ்வஸ்திக் சிக்காரா, அபிஷேக் போரேல்,
யஷ் துல், ரிக்கி புய் என அணியிலிருக்கும் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு ஐ.பி.எல் அனுபவமே இல்லை. ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆஸ்தான பேட்ஸ்மேன்தான் என்றாலும் ஐ.பி.எல்லில் இதுவே அவருக்கு முதல் ஆண்டு. போக, அவர் இந்திய மண்ணில் கடைசியாக டி20யில் ஆடியது ஐந்தாண்டுகளுக்கு முன். இப்படி போன சீசனிலிருந்த அதே மிடில் ஆர்டர் சிக்கல் இந்த ஆண்டிலும் தொடர்வது டெல்லிக்கு தலைவலியாக மாறலாம்.

ப்ருத்வி ஷா - அடுத்த சச்சின் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ப்ருத்வி ஷா கடந்த சீசனில் எடுத்தது வெறும் 106 ரன்கள். வேறு வழியே இல்லாமல் ப்ளேயிங் லெவனில் இருந்து அவரை கழட்டிவிட்டது அணி நிர்வாகம். அதன்பின் நடந்த ரஞ்சி தொடரில் நன்றாகவே ஆடியிருந்தாலும் டி20யில் எப்படி பெர்ஃபார்ம் செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்த ஆண்டும் அவரின் ஃபார்ம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாவிட்டால் அது டெல்லிக்கு கூடுதல் தலைவலி.

தனி ஒருவன்

இந்த சீசனில் டெல்லி அணியில் கவனிக்கப்படவேண்டிய வீரர் சந்தேகமே இல்லாமல் குமார் குஷாக்ரா தான். கடந்த ஆண்டு ஆடிய தியோதர் டிராபி, விஜய் ஹசாரே டிராபி, ரஞ்சி என அனைத்திலும் ரன்களைக் குவித்து கவனம் ஈர்த்தவர். பயமறியாமல் அசலாட்டாய் பந்தை பவுண்டரிக்குத் தள்ளும் 19 வயதான இளங்கன்று. பன்ட் தொடரின் முதல் பாதியில் கீப்பிங் செய்யமாட்டார் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் குஷாக்ரா முழுநேர கீப்பராக களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம். ஜார்க்கண்ட்டுக்கும் விக்கெட் கீப்பிங் அதிரடி பேட்ஸ்மேனுக்குமான கெமிஸ்ட்ரியை குஷாக்ராவும் தக்கவைப்பார் என மலையளவு நம்புகிறது அணி நிர்வாகம்.

ப்ளேயிங் லெவன்

ப்ரித்வி ஷா, வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பன்ட், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், குமார் குஷாக்ரா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், நார்க்கியா, கலீல் அகமது, முகேஷ் குமார்.

ஏற்கெனவே மிடில் ஆர்டர் வீக், இப்போது ஹாரி ப்ரூக்கும் இல்லை. எனவே மூன்று பேட்ஸ்மேன்கள், ஒரு பவுலர் என வெளிநாட்டு வீரர்களின் காம்பினேஷன் இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே ஐ,பி.எல் அறிமுகம் இருப்பதால் தொடக்கப் போட்டிகளில் அணி நிர்வாகம் ஸ்டப்ஸ்ஸை களமிறக்கலாம். பன்ட்டுக்கு பதிலாக இஷாந்த் சர்மா இம்பேக்ட் பிளேயராக களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம்.

இம்பேக்ட் பிளேயர்கள்

சோகம் என்னவென்றால் இஷாந்தைத் தவிர இம்பேக்ட் பிளேயராக களமிறங்க வேறு அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களே எந்த பொசிஷனுக்கும் இல்லை என்பதுதான்.

லோக்சபா தேர்தல் அட்டவணையைப் பொறுத்தே அணிகள் எங்கெங்கு ஆடும் என முடிவாகும். இப்போதைக்கு முதல் இரண்டு ஆட்டங்களை விசாகப்பட்டினத்தை ஹோம் கிரவுண்டாக கொண்டு ஆடவிருக்கிறது டெல்லி. டெல்லி அருண் ஜெட்லி (பெரோஸ் ஷா ) மைதானத்தில் கேப்பிடல்ஸ் அணியின் ட்ராக் ரெக்கார்ட் சுமாராகவே இருக்கிறது. அங்கு இதுவரை ஆடியிருக்கும் 77 ஆட்டங்களில் 43 ஆட்டங்களில் தோல்வி. எனவே இந்த புது ஹோம் கிரவுண்ட் டெல்லிக்கு ஒரு வரமாகக் கூட மாற வாய்ப்பியிருக்கிறது. எது எப்படியிருந்தாலும் பேட்ஸ்மேன்களின் லீக்கான ஐ.பி.எல்லில் சுமாரான மிடில் ஆர்டரைக் கொண்டிருப்பதால் டெல்லி அணி ப்ளே ஆப்பிற்கு தகுதிபெறுவது குதிரைக்கொம்புதான்.

முதல் போட்டி

டெல்லி கேப்பிடல்ஸ் தன் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை சந்திக்கவுள்ளது. மார்ச் 23ம் தேதி 3.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.