சில அணிகள் சில வீரர்களின் திறமைக்கான வாய்ப்பையே வழங்காமல் பெஞ்ச்சிலேயே அமரவைப்பார்கள்.. வாய்ப்பே கிடைக்காத அந்த வீரர் கிடைக்கும் ஒரேயொரு வாய்ப்பில் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக மாறி மிரளவைப்பார். அதற்கு பிறகு தான் ”யாரு பா இவரு? இந்த அடி அடிக்கிறாரு” என்ற கேள்வி எழுந்து, ”அடப்பாவிங்களா இவரை ஏன் பா பெஞ்ச்-ல உக்கார வச்சிருந்திங்க” என்ற ஆதங்கம் ரசிகர்களிடையே எழும்.
அப்படித்தான் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி, இன்றைய போட்டியில் Jake Fraser என்ற அதிரடி வீரரை களமிறக்கி, “ஏன் பா DC உலகசாதனை படைத்த வீரரை வச்சிக்கிட்டா இத்தன போட்டில தோத்திங்க” என கேட்கும் அளவு போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்துள்ளது. டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் போன்ற ஜாம்பவான் வீரர்களின் உலகசாதனையை முறியடித்த Jake Fraser இன்றைய போட்டியில் டெல்லி அணிக்கு கேம் சேஞ்சராக மாறினார்.
வெற்றிபெற்றே ஆகவேண்டிய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது டெல்லி கேபிடல்ஸ் அணி. சொந்த மண்ணில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்த லக்னோ கேப்டன் கேஎல் ராகுலுக்கு எல்லாமே சாதகமாக சென்றது.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியில், தொடக்கவீரராக களமிறங்கிய டி-காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 3 ஓவருக்குள் 4 பவுண்டரிகளை விரட்டிய டி-காக் ஆபாத்தான வீரராக மாற, சிறப்பான பந்தைவீசிய கலீல் அகமது 19 ரன்னில் டி-காக்கை வெளியேற்றியது மட்டுமில்லாமல், அடுத்து களத்திற்கு வந்த படிக்கல்லையும் பெவிலியன் அனுப்பி கலக்கிப்போட்டார்.
அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பவுண்டரிகளாக விரட்டிய கேஎல் ராகுல், 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தார். ஆனால் முக்கியமான நேரத்தில் குல்தீப் யாதவின் கையில் பந்தை கொடுத்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், லக்னோ அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார். ஒரே ஓவரில் ஸ்டோய்னிஸை 8 ரன்னிலும், நிக்கோலஸ் பூரனை 0 ரன்னிலும் வெளியேற்றிய குல்தீப் யாதவ், லக்னோ அணியின் மெயின் பேட்டர்களை காலிசெய்தார். உடன் நிலைத்து நின்ற ராகுலையும் 39 ரன்னில் குல்தீப் வெளியேற்ற, அடுத்தடுத்து வந்த தீபக் ஹூடா, க்ருணால் பாண்டியா என அனைவரும் சொற்ப்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
திடீரென 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி தத்தளித்தது. அவ்வளவுதான் லக்னோ அணி எப்படியும் 130 ரன்களுக்கு சுருண்டுவிடும் என நினைத்த போது, 8வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஆயுஸ் பதோனி மற்றும் அர்ஷத் கான் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
ஒருமுனையில் அர்ஷத் கான் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிலைத்து நிற்க, மறுமுனையில் 5 பவுண்டரிகள் 1 சிச்கர் என ஸ்மார்ட்டான பேட்டிங் ஆடிய பதோனி 55 ரன்கள் அடித்து அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக 8வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி, லக்னோ அணியை 167 ரன்கள் என்ற டீசண்ட்டான டோட்டலுக்கு அழைத்துச்சென்றது.
லக்னோ ஆடுகளத்தில் 160 ரன்களுக்கு மேல் அடித்தால் தோல்வியே பெற்றதில்லை என்ற LSG அணியின் சாதனைக்கு எதிராக டெல்லி என்ன செய்யப்போகிறது என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் லக்னோ அணியின் ரெக்கார்டை உடைக்கும் ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்திய டெல்லி அணியில், தொடக்கவீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 6 பவுண்டரிகளை விரட்டி நல்ல தொடக்கத்தை எடுத்துவந்தார். 6 ஓவர்களுக்கு 60 ரன்களை எட்டிய போது பிரித்வி-ஷா ரவி-பிஸ்னோய்க்கு எதிராக விக்கெட்டை இழந்து வெளியேற, 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த Jake Fraser மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரிஷப் பண்ட் ஒருபுறம் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட, மறுமுனையில் பேட்டிங்கில் ருத்ரதாண்டவமே ஆடிய Jake Fraser 5 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். ரிஷப் பண்ட் 41 ரன்கள் அடிக்க, 35 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என விளாசி 55 ரன்களை எடுத்துவந்த Jake Fraser டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். ஃபாஸ்ட் பவுலர் மற்றும் ஸ்பின்னர்கள் என அனைவருக்கு எதிராகவும் சிறந்த ஹிட்டிங் எபிலிடியை வெளிப்படுத்திய Fraser, ”யாரு பா இந்த பேட்ஸ்மேன்?” என்ற கேள்வியை ரசிகர்களிடையே ஏற்படுத்தினார்.
பார்ப்பதற்கு ஸ்கூல் பாய் போல இருக்கும் Jake Fraser தான், 31 பந்துகளில் சதமடித்து உலகசாதனையை தன்வசம் வைத்திருந்த டி வில்லியர்ஸின் World Record-ஐ உடைத்து உலகக்கிரிக்கெட்டை திரும்பிப்பார்க்க வைத்தவர். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரான Jake Fraser கடந்தாண்டு நடைபெற்ற மார்ஷ் கோப்பை என்ற உள்நாட்டு தொடரில், ”இனி வாழ்க்கையில் பந்தே வீச மாட்டோம் என பவுலர்கள் புலம்பும் அளவிற்கு” சிக்சர் மழைகளை பொழிந்து 29 பந்தில் சதமடித்து புதிய உலகசாதனையை படைத்தார்.
தொழில்முறை கிரிக்கெட்டில் 31 பந்துகளில் ஒருநாள் சதம், 30 பந்துகளில் டி20 சதம் என அடித்திருந்த டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் என்ற இரண்டு ஜாம்பவான்களின் சாதனையையும் முறியடித்த Jake Fraser உலக கிரிக்கெட்டர்களை தன்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தார். இவரை பற்றி சமீபத்தில் பேசியிருந்த டேவிட் வார்னர், “எதிர்கொள்ளும் அனைத்து பந்துகளையும் சிக்சர் அடிக்கும் திறமையை Jake Fraser கொண்டுள்ளார், அவர் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட்டில் பெரிய மாயாஜாலம் செய்யப்போகிறார்” என்று புகழ்ந்திருந்தார்.
Jake Fraser-ன் அதிரடியை பார்த்த ரசிகர்கள், ”ஏன் பா DC இவரை டீம்ல வச்சிக்கிட்டா 4 மேட்ச்ல தோத்திங்க” என விமர்சித்துவருகின்றனர். முக்கியமான தருணத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை திருப்பிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேந்தெடுக்கப்பட்டார். இந்தப்போட்டியின் முடிவில் சிஎஸ்கே அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது, அதேபோல ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.