இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2025 ஐபிஎல் திருவிழாவிற்கான மெகா வீரர்கள் ஏலமானது இன்றும், நாளையும் ( நவம்பர் 24 - 25) என இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கிறது.
ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் அவர்களுக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் இன்று ஏலத்தில் வீரர்களை வாங்கவுள்ளனர்.
367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் நிலையில், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் முதலிய 3 இந்திய ஸ்டார் வீரர்கள் மிகப்பெரிய ஏலத்திற்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதுபோலவே முதல் நாள் ஏலத்தில், தற்போது நல்ல விலைக்கு சென்றுள்ளார்கள் அவர்கள்.
இதில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் அந்த அணியிலிருந்து வெளியேறி ஏலத்தில் பங்கேற்றார். 2 கோடி அடிப்படை விலையில் பங்கேற்ற அவருக்கு ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பிட் செய்தன.
கேஎல் ராகுல் ஆர்சிபிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அந்தணி 10.50 கோடிவரைக்கும் சென்று பின் வாங்கியது. அதற்குபிறகு டெல்லி அணி இறுதிவரை பிட் செய்த நிலையில், கடைசியாக களத்தில் சிஎஸ்கே அணி இறங்கியது.
ஆனால் இறுதிவரை விட்டுக்கொடுக்காத டெல்லி அணி கேஎல் ராகுலை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஆர்சிபி அணி பல வீரர்களுக்கு பிட் செய்தாலும் இறுதியில் பின் வாங்கியது. ஆனால் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டனுக்கு கடைசிவரை சென்ற ஆர்சிபி அணி 8.75 கோடிக்கு கைப்பற்றியது.
2025 ஐபிஎல் ஏலத்தின் அதிகபட்ச ஏலமாக ரிஷப் பண்ட் ரூ.27 கோடி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.