Sai Sudharsan Ravi Choudhary
T20

DCvGT | தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்ஷன் அதிரடி... டெல்லிக்கு இரண்டாவது கொட்டு..!

`ஹலோ, அபிஷேக் போரெல். என்ன அடிச்சுட்டே போறேள்' என கடுப்பான ஹர்திக், ரஷீத் கானை இறக்கிவிட்டார். இரண்டாவது பந்தே போரெல் க்ளீன் போல்டானார்.

ப.சூரியராஜ்

நடப்பு சாம்பியன் எனும் கெத்தை விட்டுக்கொடுக்காமல் ஆடிவரும் குஜராத் டைட்டன்ஸும், டைட்டன்ஸிடம் அடி வாங்குவதற்கென்றே அளவெடுத்தது போலிருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் நேற்று மோதின. ஐ.பி.எல் தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்க வீரர்கள் எல்லோரும், நெதர்லாந்தை போட்டு நெம்பிய அதே உற்சாகத்தோடு, பொட்டி படுக்கையுடன் ஊர் வந்து இறங்கினர். எனவே, கேன் ஸ்மைல்சனுக்கு பதிலாக கில்லர் மில்லரை குஜராத் அணியும், பாவெல்லுக்கு பதிலாக நோர்க்யாவை டெல்லி அணியும் உள்ளே இழுத்தனர். குஜராத் டாஸ் ஜெயிக்க, பவுலிங்கை தேர்ந்தெடுத்தார் கேப்டன் ஹர்திக்.

David Warner

வார்னரும், ப்ரித்வி ஷாவும் டெல்லியின் இன்னிங்ஸை ஒபன் செய்ய, முதல் ஓவரை வீசவந்தார் ஷமி. ஓவரின் ஐந்தாவது பந்து, வார்னரின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு நழுவி ஓடியது. கடைசிப்பந்தோ அகலபந்தாகி, பவுண்டரிக்குள் பாய்ந்தோடி விழுந்தது. 2வது ஓவரை வீசவந்தார் லிட்டில். கடைசிப்பந்தை கவர் பகுதியில் ஓங்கி அறைந்தார் வார்னர். முகமது ஷமி வீசிய 3வது ஓவரின் முதல் பந்து, மீண்டும் ஒரு அகலபந்து. ஷமி சரக் சரக் என ஸ்விங் செய்வதில் பந்து எசக பிசகாக கோட்டைத் தாண்டிவிடுகிறது. அகலபந்துக்கு மாற்றாக வீசப்பட்ட பந்து, ஷாவின் மட்டையில் பட்டு பவுண்டரிக்கு விரைந்தது. ப்ரித்வி அடிச்சா அடி விழாது, இடி விழும் என டெல்லி ரசிகர்கள் சொல்லி முடிப்பதற்குள் அவுட் ஆனார் ஷா. இப்போது, ரசிகர்களின் நெஞ்சில்தான் இடி இறங்கியது. லிட்டில் வீசிய 4வது ஓவரில், ஒரு பவுண்டரியை விளாசினார் வார்னர். `வார்னர்னா அடாவாடி' என அலறினார்கள்.

ஷமி வீசிய 4வது ஓவரின் முதல் பந்தை, கவர்ஸில் அழகாக பவுண்டரிக்கு விளசினார் மார்ஷ். `மார்ஷ்ணே நீ மாஸ்ணே' என ஏகோபித்த குரலில் ரசிகர்கள் கத்த, அடுத்த பந்திலேயே க்ளீன் போல்டாகி ஏக்கத்துடன் விடைபெற்றுச் சென்றார் மார்ஷ். சர்ஃப்ராஸ் கான் களமிறங்கினார். ஓவரின் கடைசிப்பந்தை பாயின்ட் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார் வார்னர். `வார்னர்னா தடாலடி' என அலறினார்கள். பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசவந்தார் குஜராத்தின் கேப்டன். ஓவரின் இரண்டாவது பந்தை ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரிக்கு எகிறி குதித்து ஓட வைத்தார் டெல்லியின் கேப்டன். `வார்னர்னா கட்டுக்கடங்காத கிராமத்து காட்டு அடி' என அலறினார்கள். பவர்ப்ளேயின் முடிவில் 52/2 என சொல்லி அடித்திருந்தது டெல்லி.

David Warner

அல்சாரி வீசிய 7வது ஓவரில், மிட் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரியைத் குண்டுகட்டாக தூக்கியவர், பாயின்ட் திசையில் ஒரு பவுண்டரியை செல்லமாகத் தட்டினார். 8வது ஓவரை வீசிய ஹர்திக், வெறும் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்து இழுத்துப் பிடித்தார். மீண்டும் வந்தார் அல்சாரி. இரண்டாவது பந்தில், வார்னரை வீழ்த்தினார். டெல்லி ரசிகர்கள் `ஒரு காலத்துல நீ எப்படி இருந்த பங்காளி' என கண் கலங்கினார்கள்.

களத்தில் இறங்கிய ரூஸோ, முதல் பந்திலேயே தங்க வாத்தை வாங்கிக் கொண்டு வெளியேறினார். 2 விக்கெட்களையும் வீழ்த்தி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து அட்டகாசமாக ஓவரை முடித்தார் அல்சாரி. ஹர்திக் வீசிய 10வது ஓவரில், சர்ஃப்ராஸ் ஒரு பவுண்டரிய விளாசினார். பத்து ஒவர் முடிவில் 78/4 என பல்லி போல் மெதுவாய் நகர்ந்தது டெல்லி. ஜோசப் வீசிய 11வது ஓவரில், ஒரு சிக்ஸரை விளாசினார் அறிமுக வீரர் அபிஷேக் போரெல். அந்தப் பந்தை தாவிப் பிடித்த யாஷ் தயாள், பவுண்டரி லைனுக்குள் தரையிறங்கினார். முயற்சியை பாராட்டிய ஹர்திக், அடுத்த ஓவரை வீச யாஷ் தயாளை அழைத்தார். ஓவரின் கடைசி பந்தை மீண்டும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் அபிஷேக் போரெல். `ஹலோ, அபிஷேக் போரெல். என்ன அடிச்சுட்டே போறேள்' என கடுப்பான ஹர்திக், ரஷீத் கானை இறக்கிவிட்டார். இரண்டாவது பந்தே போரெல் க்ளீன் போல்டானார். அடுத்து களமிறங்கிய டெல்லியின் நம்பிக்கை நாயகன் அக்‌ஷர், ஒரு பவுண்டரியை வெளுத்தார். ஜோசப் வீசிய 14வது ஓவரில், அக்‌ஷருக்கு மீண்டுமொரு பவுண்டரி. ரஷீத் வீசிய 15வது ஓவரில், அக்‌ஷருக்கு ஒரு சிக்ஸர்.

Axar Patel

நீண்ட நேரமாக களத்தில் நின்றபடி களை பிடுங்கிக்கொண்டிருந்த சர்ஃப்ராஸ், ரஷீத் வீசிய 17வது ஓவரில் லிட்டிலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தப் பக்கம் எதற்கும் அஞ்சாமல், லிட்டில் வீசிய 18வது ஓவரில் இன்னொன்றை பறக்கவிட்டார் சிக்ஸர் படேல். ஆட்டத்தின் முக்கியமான 19வது ஓவரை ரஷீத் வீச, அமான் கான் ஒரு சிக்ஸரை அடித்தார். ரசிகர்கள் `கமான் கான்' என உற்சாகம் அடைந்தார்கள். அடுத்து பந்து, ரஷீத் கான் அவரை விக்கெட் எடுத்தார். கான் வீசிய காலியான கான். ஆதியும் நானே அந்தமும் நானே என கடைசி ஓவரை வீசவந்தார் ஷமி. சிக்ஸர் படேலுக்கு ஒரு சிக்ஸரை படையல் கொடுத்துவிட்டு, அவரது விக்கெட்டை வரமாக வாங்கினார். கடைசிப் பந்தில் நோர்க்யா ஒரு பவுண்டரியை வெளுக்க, 162/8 என இன்னிங்ஸை முடித்தது டெல்லி.

162 எனும் சர்க்கஸ் துப்பாக்கி இலக்கை எட்டிப் பிடிக்க களமிறங்கியது குஜராத் அணி. சாஹாவும் கில்லும் வரவு கணக்கைத் துவங்கினார்கள். சர்ஃப்ராஸ் கானுக்கு பதிலாக இம்பாக்ட் வீரராக வந்த கலீல் அகமது, முதல் ஓவரை வீசினார். ஓவரின் 3வது பந்தும் 4வது பந்து பவுண்டரிக்கு வெளுத்த விட்ட சாஹா, கடைசிப்பந்தை சிக்ஸருக்கும் பறக்கவிட்டார். 'சாஹா அடிப்பதுபோல் சோகம் உண்டோ' என டெல்லி ரசிகர்கள் கண்ணீர் வடித்தார்கள்.

Wriddhiman Saha | Anrich Nortje

`என் பெயர் முகேஷ்' என 2வது ஒவரில் அறிமுகமானவரை, பவுண்டரியுடன் வரவேற்றார் சப்லைம் ஃபார்மில் இருக்கின்ற சுப்மன் கில். அதே ஓவரில் இன்னொரு பவுண்டரியும் அள்ளினார். இப்போது, மீசைக்காரர் நோர்க்யாவை இறக்கிவிட்டார் வார்னர். முதல் பந்தே, ஸ்டெம்ப்பை தகர்த்தெறிந்தது. குஜராத் ரசிகர்கள் அரண்டு போனார்கள். முகேஷ் வீசிய 4வது ஓவரில், ஒரு பவுண்டரியுடன் சேர்த்து 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 5வது ஓவரை மீண்டும் வீசவந்தார் மீசைக்காரர். இம்முறை முதல் பந்தில் அவுட்டானது கில்!

149 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பந்து, கில்லின் தடுப்பாட்டத்தை கிழித்துக்கொண்டு போய் ஸ்டெம்ப்பை கீழே சாய்த்தது. கையிலிருந்து எங்கேயோ போன மேட்சை எருக்கம் செடியோரம் இறுக்கிப்பிடித்த நோர்க்யாவை டெல்லி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அந்த மகிழ்ச்சியில், தவறுதலாக ஒரு நோ பால் வீசிவிட்டார். ஆனால், சம்பவம் அதுவல்ல. அதுக்கு மாற்றாக வீசப்பட்ட 145 கி.மீ வேகப்பந்தை, ஷார்ட் ஃபைன் லெக் திசையின் மேல் ஸ்கூப் ஷாட் ஆடினார் சாய் சுதர்சன்! நோர்க்யாவின் மீசை துடித்தது. கேப்டன் ஹர்த்திக்கும் தன் பங்குக்கு அதே ஓவரில் ஒரு பவுண்டரியை வெளுத்துவிட்டார்.

ஆறாவது ஓவரை வீசவந்தார், ஆறாத வடுக்களை வாங்கிய கலீல் அகமது. வெந்த வடுவில் வேலை பாய்ச்சுவதைப் போல முதல் பந்தே, பவுண்டரிக்கு பறக்கவிட்டார் சாய் சுதர்சன். ஆனால், கடைசிப் பந்தில் ஹர்திக்கின் விக்கெட்டைத் தூக்கி கம்பேக் கொடுத்தார் கலீல். குஜராத் அணியினர் அரண்டு போனார்கள். பவர்ப்ளேயின் முடிவில் 54/3 என ரன் ரேட்டை தக்க வைத்திருந்தாலும் விக்கெட்களை பறி கொடுத்திருந்தது டெல்லி அணி. 84 பந்துகளில் 109 ரன்கள் மட்டுமே தேவை.

Sai Sudharsan

7வது ஓவரை வீசவந்தார் மிட்செல் மார்ஷ். களத்தில் சாய் சுதர்சனும், மற்றொரு தமிழக வீரரான விஜய் ஷங்கரும் ஜோடி போட்டனர். 7வது ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே. குல்தீப் வந்தார். 8வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. 9வது ஓவர் வீசிய முகேஷ் குமாரை, ஒரு பவுண்டரி விளாசினார் சாய் சுதர்சன். அந்த ஓவரில் மொத்தமே 8 ரன்கள் மட்டுமே கிடைத்தன. குல்தீப் வீசிய 10வது ஓவரில், விஜய் ஷங்கர் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில், 9 ரன்கள் மட்டுமே. பத்து ஓவர் முடிவில் 83/3 என மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தது குஜராத் அணி.

மார்ஷ் வீசிய 11வது ஓவரில், இன்னொரு பவுண்டரி அடித்தார் விஜய் ஷங்கர். அப்போதும், அந்த ஓவரில் 8 ரன்கள்தான் கிடைத்தது. கலீல் வீசிய 12வது ஓவரில், விஜய் ஷங்கர் ஒரு பவுண்டரியை விரட்டினார். இந்த ஓவரில் 10 ரன்கள்! மீண்டும் நோர்க்யா வந்து, ஆறு பந்துகளில் ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்து இறுக்கிப் பிடித்தார். கவனமாக ஆடிக்கொண்டிருந்த விஜய் ஷங்கர், மார்ஷ் வீசிய 14வது ஓவரில் எல்.பி.டபிள்யூ ஆனார். 15வது ஓவரை வீசிய குல்தீப் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அணியின் ஸ்கோர் 117/4 என கொஞ்சமாய் உயர்ந்திருந்தது. சாய், விஜய் இருவரும் திட்டமிட்டபடி மிடில் ஓவர்களை எவ்வித பாதிப்புமின்றி உருட்டியே கடத்தி கொண்டு வந்திருந்தார்கள். இப்போது, கில்லர் மில்லர் களத்தில் இருந்தார்.

Mitchell Marsh | Vijay Shankar

முகேஷ் வீசிய 16வது ஓவரின் 4வது பந்தை டீப் மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸர். 5வது பந்தை மிட் ஆனில் ஒரு சிக்ஸர். கடைசிப் பந்தை கவரில் ஒரு பவுண்டரி. ஒரே ஓவரில் 20 ரன்கள் அடித்து, தூங்கிக்கொண்டிருந்த எல்லோரையும் எழுப்பிவிட்டார். நோர்க்யா வீசிய 17வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார் சாய் சுதர்சன். பவுலர்களுக்கு சாதகமாய் இருந்த பிட்ச்சில், நின்று நிதானமாக ஆடி பொறுப்பான அரை சத

David Miller

த்தை கடந்திருந்தார். இப்போது, மில்லரின் வேகம் சுதர்சனுக்கும் தொற்றிவிட்டது. கடைசிப்பந்தில், ஃபைன் லெக் திசையில் பெரிய சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார். கலீல் வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் கிடைத்தது. இப்போது, இரண்டு ஓவர்களில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி! மார்ஷ் வீசிய முதல் பந்தை, டபுள்ஸுக்கு தட்டிவிட்டு ஆறு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது குஜராத். டெல்லி அணி இத்தொடரில் இரண்டாவது கொட்டு வாங்கியது. தன் நண்பர்களுக்கு ஊக்கமளிக்க வந்திருந்த ரிஷப் பன்ட்டுக்கு, ஊக்கமிழக்கச் செய்தனர் அவரது நண்பர்கள். பொறுப்பாக ஆடிய நெருப்பு தமிழன் சாய் சுதர்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.