Delhi Capitals  Twitter Delhi Capitals
T20

DC IPL 2023 Review | இந்த முறையேனும் கோப்பையை முத்தமிடுமா டெல்லி..?

கடந்த சில ஆண்டுகளாய் அணி உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி அவர்களை திறம்பட வழிநடத்திய கேப்டன் ரிஷப் பன்ட்டிற்கு அவரின் அணி உறுப்பினர்கள் திருப்பிக்கொடுக்க வேண்டிய நேரமிது.

Nithish

சென்னை - மும்பை, பெங்களூரு - கொல்கத்தா என களத்தில் அணிகளும் வெளியே ரசிகர்களும் உக்கிரமாய் சண்டை செய்துகொண்டிருப்பார்கள். இயல்பிலேயே சாது அணிகளான ராஜஸ்தானும் ஹைதராபாத்தும் கூட கோப்பை வென்று தங்கள் இருப்பைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் முதல் சீசன் தொடங்கி 11வது சீசன்வரை ஒரே ஒரு அணி மட்டும் 'இருக்குற இடம் தெரியாம இருந்துட்டுப் போயிடணும்டா தம்பி' என தம்பி ராமையா சொன்னதையே தாரக மந்திரமாக கடைபிடித்துவந்தது. டெல்லி டேர்டெவில்ஸ். சேவாக், கம்பீர், டிவில்லியர்ஸ், மெக்ராத் என கிரிக்கெட் ஜாம்பவான்கள் எல்லாம் அந்த அணியிலிருந்தே இதுதான் நிலைமை. 'டெல்லி கேப்பிடல்ஸ்' என பெயரும் நிர்வாகமும் மாறியபிறகு நிலைமை தலைகீழ். லீக் சுற்றில் டேபிள் டாப்பராக முடித்த அதிசயமெல்லாம் நடந்தது. என்ன கோப்பை மட்டும் இன்னமும் மாயக்கனவாகவே இருக்கிறது.

David Warner

இந்த முறை ஏலத்தின்போது கையில் 19 கோடி இருந்தும் தேவைப்பட்ட பிளேயர்கள் ஐந்துபேரே என்பதால் பொறுமையாகவே ஆளெடுத்தார்கள். எல்லாமே சொல்லிக்கொள்ளும்படியான நல்ல பிளேயர்கள் தான். ஆனால் ஏலத்திற்கு பின் தான் டெல்லி அணி தலையில் இடி இறங்கியது. ரிஷப் பன்ட் எதிர்கொண்ட விபத்து. நாட்டின் மிக முக்கியமான கிரிக்கெட் வீரர் இவ்வளவு மோசமான சாலை விபத்தில் சிக்குவது இதுவே முதல்முறை. இந்திய அணியின் எதிர்காலம் குறித்தே கவலைகள் பரவியபோது டெல்லி அணி மட்டும் எம்மாத்திரம். சடசடவென மாற்றுத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்கள். இப்படி அவசர அவசரமாய்த் தயாராகியிருக்கும் டெல்லி அணியிடம் கோப்பை வெல்வதற்கான பலம் இருக்கிறதா?

வாரணம் ஆயிரம்

ரிஷப் பன்ட் நல்ல கேப்டன் தான். அவரின் வெற்றி சதவீதம் கிட்டத்தட்ட 55. ஆனால் அதற்கி கொஞ்சமும் சளைக்காத கேப்டன் டேவிட் வார்னர். வெற்றி சதவீதம் 52.1. சன்ரைஸர்ஸ் அணி கடைசி கடைசியாய் சூர்ய உதயத்தைப் பார்த்தது இவரின் கேப்டன்சியில்தான். எனவே வார்னரின் அதிரடி முடிவுகள் அணிக்கு எக்கச்சக்க பலத்தைக் கொடுக்கும். என்ன, இதற்கு முன்னால் டெல்லிக்கு கேப்டனாய் இருந்து வார்னர் ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி எனும் டேட்டாதான் கொஞ்சம் கவலைதரக்கூடிய கணிதம்.

அக்‌ஷர் படேல். எல்லாரின் நம்பிக்கைக்குரிய ஆல்ரவுண்டராகவும் ஜடேஜா மாறியது 30ப்ளஸ் வயதில்தான். ஆனால் அவரை பின்பற்றும் அக்‌ஷரோ இந்த ஓராண்டிலேயே மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையை சம்பாதித்துவிட்டார். 7.25 என்கிற பவுலிங் எகானமியோடு இப்போது அவரின் பேட்டிங்கும் செம்மைப்பட்டிருப்பதால் டெல்லி அணிக்கு மற்றுமொரு பினிஷர் கிடைத்திருக்கிறார் அக்‌ஷர் வடிவில்.

ப்ரித்வி ஷா - படபடவென பொரிந்து தள்ளிவிடும் பட்டாசு. இவர் 30,40 பந்துகள் சந்திக்கவேண்டும் என்றெல்லாம் அவசியமே இல்லை. 15 பந்துகளில் இவர் ராக்கெட் வேகத்தில் எடுக்கும் 30 ரன்கள் போதும் டெல்லிக்கு வலுவான தொடக்கத்தைக் கொடுக்க. மிச்சத்தை பலமான மிடில் ஆர்டர் பார்த்துக்கொள்வார்கள்.

உச்சத்திலிருந்து அதல பாதாளத்தில் சட்டென விழுந்து விழுந்ததைவிட வேகமாக் மீண்டும் உச்சிக்கு பறப்பது குல்தீப் யாதவ் போன்ற ஒருசிலருக்கே சாத்தியம். 28 வயதான இந்த சிரிப்பழகன் சமீபகாலங்களில் தன்னை தகவமைத்துக்கொண்ட விதம் அசரடிக்கிறது. சமீபத்தில் முடிந்த நியூசிலாந்திற்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இவரின் எகானமி 5.4 தான். கோட்லா மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமானது என்பது கூடுதல் ப்ளஸ்.

மற்ற அணிகளைப் போல இல்லாமல் டெல்லி அணியின் பவுலிங்கை முழுக்க முழுக்க இந்திய வீரர்களைக் கொண்டே முடித்துவிடலாம். குல்தீப், கலீல் அகமது, சேத்தன் சகாரியா, நாகர்கோட்டி, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா என மிக வலிமையான கூட்டணி இது, இவர்களில் நான்கு பேரை பயன்படுத்தும்பட்சத்தில் நான்கு வெளிநாட்டு வீரர்களையும் பேட்டிங்கை மனதில் வைத்தே எடுக்கலாம்.

பலவீனம்

பேட்ஸ்மேனாய் வார்னரின் ஃபார்ம். சமீபத்தில் நடந்த பிக் பேஷ் தொடரில் ஆறு போட்டிகளில் களம்கண்டு வெறும் 99 ரன்களே எடுத்திருக்கிறார். அவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் குறைந்துகொண்டே போவதால் பவர்ப்ளேயில் ப்ரித்வி ஷா மேல் எக்கச்சக்க பிரஷர் விழ வாய்ப்புண்டு. இவர்தான் கேப்டன் என்பதால் ஃபார்மில் இல்லை என மாற்றவும் நிர்வாகத்தால் முடியாது. எனவே நெருக்கடியான நிலையில் இருக்கிறது டெல்லி.

பன்ட் இல்லாத பட்சத்தில் கீப்பிங் யார் செய்வது? பில் சால்ட் இருக்கிறார். ஆனால் அவர் முதல் சில ஆட்டங்களுக்கு இருக்கமாட்டார். அப்படியெனில் மிச்சமிருக்கும் ஒரே ஆப்ஷன் எப்போதாவது விக்கெட் கீப்பர் அவதாரம் எடுக்கும் சர்ஃப்ராஸ் கான். டி.ஆர்.எஸ் அப்ளை செய்வது, டெத் ஓவரில் பீல்டிங் செட் செய்வது என ஏகப்பட்ட விஷயங்களில் கீப்பரின் பங்களிப்பு முக்கியம். போக நார்க்கியா மாதிரி அதிவேக பவுலர்களை சமாளிப்பதும் சாதாரண வேலையில்லை. பார்ட் டைம் கீப்பரான சர்ப்ராஸ் கான் இதையெல்லாம் தாங்குவாரா?

Yash Dull

மிட்செல் மார்ஷும் காயமும் காங்கிரஸும் கோஷ்டி சண்டையும் போல. பிரிக்கவே முடியாது. 'தொடரும்' படத்தில் வரும் வடிவேலு போல அடிக்கடி காயம்பட்டு லீவ் விட்டுக்கொள்வார். இந்தமுறை இந்தியா முழுக்க சுற்றிக்கொண்டே இருக்க வேண்டுமென்பதால் அவரின் ஃபிட்னஸ் ஒரு சின்ன உறுத்தல்தான்.

தனி ஒருவன்

சர்ஃப்ராஸ் கான் - சமீப காலமாக அதிகம் முணுமுணுக்கப்பட்ட பெயர். 'டீம்ல எடுக்க மாட்டீங்களா? அப்போ நான் பேசமாட்டேன், என் பேட் பேசும்' என இந்திய அணித் தேர்வுக்குழுவுக்கே தலைவலி கொடுத்தவர். 2021-22 ரஞ்சி தொடரில் 982 ரன்கள், 122.75 சராசரியோடு. 2022-23 ஆண்டு ரஞ்சித் தொடரில் ஆறே ஆட்டங்களில் 556 ரன்கள் என கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஃபார்மில் இருக்கிறார். ஒரு பக்கா மிடில் ஆர்டர் பினிஷராய் இந்த சீசனில் சர்ஃப்ராஸ் உருவெடுப்பார் என எதிர்பார்க்கிறது ரசிகர் உலகம்.

முகேஷ் குமார் - சமீபத்திய பவுலிங் சென்சேஷன். கடைசியாய் ஆடிய 16 முதல் தர இன்னிங்ஸ்களில் 35 விக்கெட்கள். இந்த ஃபார்முக்காகவே 5.5 கோடி கொட்டி முகேஷை எடுத்திருக்கிறது டெல்லி அணி. ஐ,பி.எல்லிலும் மாயவித்தைகள் பல செய்வார் என நம்புவோம்.

துருவங்கள் பதினொன்று

வார்னர், ப்ருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், யஷ் துல் , ரைலி ரூஸோ, சர்ஃப்ராஸ் கான், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ், கலீல் அகமது, நார்க்கியா.

இம்பேக்ட் பிளேயர்

இந்த ஆண்டிலிருந்து இம்பேக்ட் ப்ளேயர் எனும் முறை ஐ.பி.எல்லில் அறிமுகமாகிறது. அதன்படி ப்ளேயிங் லெவன் தவிர ஐந்து பிளேயர்களை கேப்டன் மாற்றுவீரர்களாக அறிவிக்கலாம். அவர்களுள் ஒருவர் ஆட்டத்தின் தன்மை பொறுத்து பவுலராகவோ, பேட்ஸ்மேனாகவோ களமிறங்குவார். பவுலராய் களமிறங்குபவர் நான்கு ஓவர்களையும் வீசலாம். பேட்ஸ்மேனாய் களமிறங்குபவரும் அவுட்டாகும்வரை/ஓவர் முடியும்வரை விளையாடலாம். அப்படி பேட்ஸ்மேன் களமிறங்கும்பட்சத்தில் டெயில் எண்டில் இருக்கும் பவுலருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காது. அதே போல இவர்கள் களமிறங்கும்போது வெளியேறும் வீரர் அதன்பின் ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திரும்ப பங்குகொள்ளமுடியாது.

இதன்படி டெல்லி அணியின் இம்பாக்ட் பிளேயர்கள் பட்டியல் பெரும்பாலும் இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

மணிஷ் பாண்டே (ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் தேவைப்படும்போது)
ரோவ்மன் பவுல் (அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்களே இருக்கும்பட்சத்தில் இறங்கி இழுத்து வைத்து சாத்த சரியான பிளேயர்.
Rovman Powell
லலித் யாதவ் (ஒரு ஸ்பின் ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார் எனும் பட்சத்தில்)
கமலேஷ் நாகர்கோட்டி (ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும் பட்சத்தில்)
ரிபல் படேல் (ஒரு பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் தேவைப்படும்போது)

கடந்த சில ஆண்டுகளாய் அணி உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி அவர்களை திறம்பட வழிநடத்திய கேப்டன் ரிஷப் பன்ட்டிற்கு அவரின் அணி உறுப்பினர்கள் திருப்பிக்கொடுக்க வேண்டிய நேரமிது. எல்லாரும் ஒரு குடைகீழ் வந்து தங்கள் பெஸ்ட்டை கொடுக்கும்பட்சத்தில் கோப்பையை முத்தமிடுவார் முன்னாள் கேப்டன். பார்க்கலாம்