ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது என்றாலே, களத்திலும் களத்தை தாண்டி வெளியிலும் அனல்பறக்கும் போட்டியாகவே அமையும். 5 கோப்பைகளை சரிசமமாக வென்றிருக்கும் இவ்விரு அணிகளும், களத்தில் ஒரு ஹை-பிரஸ்ஸர் போட்டியை விருந்தாக கொடுக்கக்கூடியவை.
ரசிகர்கள் அதிகமாக எதிர்ப்பார்த்து காத்திருந்த மாபெரும் ரைவல்ரி போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் மும்பை அணிக்கு 200 ரன்களுக்கு மேலான டார்கெட்டை செட் செய்யும் எண்ணத்தில் சிஎஸ்கே களம்கண்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், மும்பையை சேர்ந்தவரான அஜிங்கியா ரஹானே தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார்.
பவர்பிளேவில் அதிக ரன்களை எடுத்துவரவேண்டும் என எதிர்ப்பார்த்து சிஎஸ்கே செய்த அந்த மூவ் சொதப்பலாக சென்று முடிந்தது. ரஹானேவை 5 ரன்னில் வெளியேற்றிய கோட்ஸீ கலக்கிப்போட்டார். 8 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த போதும், அதற்கு பிறகு கைக்கோர்த்த ரச்சின் மற்றும் கேப்டன் ருதுராஜ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்துவந்தனர்.
2 பவுண்டரிகள் 1 சிக்சர் என ரச்சின் விளாச, சிறந்த டச்சில் தெரிந்த ருதுராஜ் கெய்க்வாட் மும்பை அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்தார்.
முக்கியமான தருணத்தில் ரச்சினை ஸ்ரேயாஸ் கோபால் வெளியேற்ற, அதற்குபிறகு ரன்களை எடுத்துவரும் பொறுப்பை கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் எடுத்துக்கொண்டனர்.
போட்டிப்போட்டு சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய இந்த ஜோடி, அடுத்தடுத்து அரைசதங்களை எடுத்துவந்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டிவிட்டது. துபே களமிறங்கியதும் ஸ்பின்னர்களை களமிறக்க பயந்த ஹர்திக் பாண்டியா, கடைசிவரை ஸ்பின்னர்களை எடுத்துவரவே இல்லை.
’அவுட்டானாதான ஸ்பின்னரை எடுத்துவருவ’ என கலக்கிப்போட்ட ஷிபம் துபே, மும்பை அணிக்கு பெரிய தலைவலியாக மாறினார். இந்தப்போட்டியிலும் அபாரமாக பந்துவீசிய பும்ராவை துபே மற்றும் ருதுராஜ் இருவரும் பார்த்துவிளையாடினர்.
ஷிவம் துபே ஒருபுறம் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 66 ரன்கள் அடிக்க, மறுமுனையில் 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ருதுராஜ், 69 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
15 ஓவர்களுக்கு 150 ரன்களை எடுத்திருந்த போது கெய்க்வாட் வெளியேற 220 ரன்களை எடுத்துவரும் என்ற நல்ல நிலையிலேயே இருந்தது சிஎஸ்கே. ஆனால் தேவையில்லாமல் கடைசி 5 ஓவருக்கு டேரில் மிட்செல்லை பேட்டிங்கிற்கு அனுப்பிய சிஎஸ்கே அணி ”மோசமான நகர்த்தலை செய்து ரசிகர்களை ஏமாற்றியது”. 14 பந்துகளுக்கு வெறும் 17 ரன்களை மட்டுமே அடித்த மிட்செல்லை பார்த்து கடுப்பான ரசிகர்கள் “ஏன்ப்பா ஒன்னு அடி இல்லனா அவுட்டாயிட்டு போ, தோனியாது வந்து அடிக்கட்டும்” என புலம்பவே செய்தனர்.
டேரில் மிட்செல் ரன்வேகத்தை தடுத்து நிறுத்த, ஒருகட்டத்தில் 220 ரன்கள் வரும் என்றிருந்த நிலையில், 200 ரன்களாவது வருமா என்ற நிலைக்கே சென்றது சிஎஸ்கே அணி.
ஆனால் 20வது ஓவரின் கடைசி 4 பந்துகளுக்கு களத்திற்கு வந்த மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா வீசிய 3 பந்துகளையும் எல்லைக்கோட்டுக்கு வெளியே பறக்கவிட்டு ஹாட்ரிக் சிக்சர்களுடன் ரசிகர்களை குதூகலத்தின் உச்சிக்கே தள்ளினார்.
தோனி தோனி என மும்பை வான்கடே மைதானம் அதிர, 4 பந்துகளுக்கு 20 ரன்களை எடுத்துவந்த எம்எஸ் தோனி, சிஎஸ்கே அணியை 206 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.
கடப்பாரை பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் மும்பை அணிக்கு எதிராக 20 ரன்கள் குறைவான டோட்டல் என்பதால், சிஎஸ்கே அணி வெற்றிபெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதற்கேற்றார் போல் தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும், சிஎஸ்கே பந்துவீச்சை சின்னாபின்னமாக்கினர். போட்டிப்போட்டு சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய இருவரும் முதல் 7 ஓவருக்கு விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 70 ரன்களை எடுத்துவந்து மிரட்டினர்.
விக்கெட்டை தேடிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ், குட்டி மலிங்கா பதிரானாவின் கைகளில் பந்தை கொடுத்தார். முதல் பந்திலேயே இஷான் கிஷானை வெளியேற்றிய பதிரானா, அதே ஓவரில் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவை 0 ரன்னில் வெளியேற்றி போட்டியை சிஎஸ்கே அணியின் பக்கம் திருப்பிவிட்டார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் விழ, அடுத்த சில ஓவர்களில் பெரிதாக ரன்களை கொடுக்காமல் இழுத்துபிடித்தது சென்னை அணி.
ஆனால் களத்திலிருந்த ரோகித் சர்மா ரிவர்ஸ் ஷாட்டெல்லாம் விளையாடி 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு அரைசதத்தை எடுத்துவந்தார். மறுமுனையில் இருந்த திலக் வர்மாவும் 18 பந்துகளில் 30 ரன்கள் என விளாச, மீண்டும் போட்டிக்குள் வந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் மீண்டும் பந்துவீச வந்த பதிரானா, இந்தமுறை திலக்வர்மாவை வெளியேற்றி கலக்கிப்போட்டார். விக்கெட் வேண்டும் என தேடும்போதெல்லாம் பந்தை கொண்டு மாயாஜாலம் செய்த பதிரானா, மும்பை இந்தியன்ஸ் அணியை தனியாளாக சம்பவம் செய்தார்.
14வது ஓவரில் பதிரானா 6 ரன்களை விட்டுக்கொடுக்க, 15வது ஓவரில் 2 ரன் மற்றும் 16வது ஓவரில் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த ஷர்துல் தாக்கூர், துஷார் தேஸ்பாண்டே இருவரும் மேஜிக் செய்தனர். அழுத்தமான நேரத்தில் 6 பந்துகளை எதிர்கொண்ட மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.
தொடர்ந்து களத்திற்கு வந்த அதிரடி வீரர் ஷெப்பர்ட்டின் ஸ்டம்புகளை தகர்த்தெறிந்த பதிரானா, மும்பை அணியை தோல்விக்கு அழைத்துசென்றார்.
இறுதிவரை போராடிய ரோகித் சர்மா 11 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு 105 ரன்களை பதிவுசெய்தார். முடிவில் 186 ரன்களை மட்டுமே அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
தோனி அடித்த 20 ரன்களே வெற்றியின் வித்தியாசமாக அமைந்தது. ஒருவேளை மிட்செல்லின் விக்கெட்டை மும்பை எடுக்காமல் போயிருந்தால் தோனி களத்திற்கே வந்திருக்க மாட்டார்.
வெற்றிகுறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “எங்களது இளம் விக்கெட் கீப்பர் கடைசியில் அடித்த 3 சிக்சர்கள்தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது” என்று தோனியை பாராட்டினார்.
அதேபோல மும்பை அணியின் தோல்விக்கு தோனிதான் காரணம் என கூறிய ஹர்திக் பாண்டியா, “ஒருவர் ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்து பவுலர்களுக்கு பிட்ச் எப்படி ரியாக்ட் செய்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தார், அதுதான் எங்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது” என்று கூறினார்.
மும்பை போன்ற வலுவான அணிக்கு எதிராக பிளான் இருக்கிறது என்று போட்டிக்கு முன்னதாக கூறிய பவுலிங் பயிற்சியாளர் பிராவோ, டெத் ஓவர்களில் பவுலர்களை சிறப்பாக செயல்பட வைத்தார்.
2 டெத் ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்த துஷார் தேஸ்பாண்டே மற்றும் ஷர்துல் இருவரையும் போட்டி முடிந்த பிறகு பிராவோ கட்டிப்பிடித்து பாராட்டினார். அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய பதிரானா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.