rcb vs csk twitter
T20

CSK Vs RCB| மழை பெய்தால் இதுதான் இலக்கு.. வாழ்வா, வீழ்ச்சியா கட்டத்தில் CSKவை வீழ்த்துமா RCB?

இன்றைய போட்டியில் மழை காரணமாக, ஓவர்கள் குறைக்கப்பட்டால், ஆர்சிபி அணி எத்தனை ஓவர்கள் அல்லது எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Prakash J

பிளேஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக நுழையப்போவது சென்னையா அல்லது பெங்களூருவா என்பதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்குக் காரணம், பெங்களூருவில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததுதான்.

ஆனால், இன்று காலை முதல் வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், மீண்டும் போட்டி பற்றிய கணிப்புகள் பேசுபொருளாகி வருகின்றன.

அந்த வகையில், மழை பெய்யும் அளவு, நேரம் ஆகியவற்றை பொறுத்து இன்றைய ஆட்டம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை, மழை நீடித்தால் ஓவர்கள் குறைக்கப்படுமா என்பது தெரியவரும். எனினும், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பதால், பிசிசிஐ முடிந்தவரை 20 ஓவர் முழுமையாக நடத்த முயற்சி செய்யும். அப்படி இல்லை எனில், ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கு மாற்றி அமைக்கப்படும். ஒருவேளை ஓவர்கள் குறைக்கப்பட்டால், ஆர்சிபி அணி எத்தனை ஓவர்கள் அல்லது எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

இதையும் படிக்க: டிராவிட் இடத்தில் கெளதம் காம்பீர்.. அணுகிய நிர்வாகம்.. IPL Final-க்குப் பிறகு முடிவு?

போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டு ஆர்சிபி 190 ரன்கள் எடுத்தால், சிஎஸ்கேவை 172 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். ஒருவேளை, ஆர்சிபி சேஸிங் செய்தால்,13.1 ஓவர்களில் அந்த ரன்களை எடுக்க வேண்டும்.

அதேநேரத்தில்,10 ஓவர்களாகக் குறைக்கப்பட்டால் ஆர்சிபி அணி, 140 ரன்கள் எடுக்கும்பட்சத்தில், சிஎஸ்கேவை 122 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். அதேநேரத்தில், ஆர்சிபி சேஸிங் செய்தால், 8.1 ஓவரில் இந்த இலக்கை எட்ட வேண்டும்.

மேலும் மழை தொடர்ந்து ஐந்து ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டால், ஆர்சிபி 90 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் சிஎஸ்கேவை வெறும் 72 ரன்களில் சுருட்ட வேண்டும். ஒருவேளை, சிஎஸ்கே அணி 90 ரன்கள் எடுத்தால், அந்த இலக்கை ஆர்சிபி அணி, 3.1 ஓவரில் ரன்களை எடுக்கவேண்டும். இவற்றில் எது நிர்ணயிக்கப்படுகிறதோ, அதில் வெற்றிபெறும் அணி, பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி விடும்.

எனினும், பெங்களூரு சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக விளங்குவதால், இரண்டு அணிகளும் ரன் குவிப்பதற்கு பஞ்சமிருக்காது எனக் கூறப்படுகிறது. மொத்தத்தில் இரு அணிகளின் வெற்றிவாய்ப்பும் வருணபகவான் கையிலேயே உள்ளது.

இதையும் படிக்க: CSK Vs RCB | மே18 80% மழைக்கு வாய்ப்பு இருக்கு.. ஒருவேளை மழை குறுக்கிட்டால் என்னவெல்லாம் நடக்கலாம்!