CSK vs KKR PTI
T20

CSK vs KKR | கொல்கத்தாவில் காப்பு கட்டிய சூப்பர் கிங்க்ஸூக்கு, ‘அன்புடென்’ ஆப்பு வைத்த நைட் ரைடர்ஸ்!

கொல்கத்தாவுக்கு சென்று காப்பு கட்டிய சூப்பர் கிங்ஸுக்கு, அன்புடென்னில் ஆப்பு வைக்கும் முடிவோடு வந்திருந்தது நைட் ரைடர்ஸ் அணி.

ப.சூரியராஜ்

புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், பிளே ஆஃப் சுற்றுக்குள் இரண்டு கால்களையும் எடுத்து வைக்கவில்லை சென்னை. எனவே, சிங்கத்தின் குகைக்குள்ளேயே நடக்கும் இந்த ஆட்டத்தில் எப்படியாவது வென்று விட வேண்டுமென முடிவெடுத்தது சி.எஸ்.கே.

டாஸ் வென்ற தோனி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். கெய்க்வாடும் கான்வேயும் சூப்பர் கிங்ஸின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் அரோரா. ஓவரின் 4வது பந்து, ருத்துவுக்கு ஒரு பவுண்டரி. ஹர்ஷித் ராணாவின் 2வது ஓவரில், கான்வேவுக்கு ஒரு பவுண்டரி. அரோராவின் 3வது ஓவரில், கான்வேவுக்கு மற்றுமொரு பவுண்டரி. வருண் சக்கரவர்த்தியின் 4வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கிய ருத்து, 3வது பந்தில் அரோராவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு அரக்கபறக்க கிளம்பினார்.

CSK

அடுத்து அதே ஓவரில் கான்வே ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை இயல்பு நிலைக்கு திருப்பினார். ஹர்ஷித் ராணாவின் 5வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து `ஆர்ம்ஸ பார்த்தியாடா' என்றார் அஜின்கியா ரஹானே. அரோரா வீசிய அடுத்த ஓவரில், 4 ரன்கள் மட்டுமே கிடைக்க, 52/1 என பவர்ப்ளேவை நல்லபடியாகவே ஆடியிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

நரைன் வீசிய 7வது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. வருணின் 8வது ஓவரில், ரஹானே விக்கெட் கழண்டது. ‘என்ன ஆச்சு ரஹானே உங்களுக்கு? பயந்து வருது எங்களுக்கு?' என சென்னை ரசிகர்கள் சோக கீதம் வாசித்தார்கள். நரைனின் 9வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. லார்டு தாக்கூரின் 10வது ஓவரில், கான்வேவும் காலி. கடைசி நான்கு ஓவர்களில் பவுண்டரியே வரவில்லை.

10 ஓவர் முடிவில் 68/3 என தலைகீழாக குதித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
KKR

நரைனின் 11வது ஓவர் முதல் பந்து, ராயுடுவின் விக்கெட்டும், கடைசிப்பந்தில், மொயின் அலியின் விக்கெட்டும் கடல்காற்றில் பறந்தன. சுயாஷ் சர்மாவின் 12வது ஓவரில், ஒரு சிக்ஸரை அடித்து ரசிகர்களை பெருமூச்சு விடவைத்தார் டூபே. நரைனின் 13வது ஓவரில் 2 ரன்கள்தான் கொடுத்தார்.

CSK vs KKR

4-0-15-2 என படுபயங்கரமாக தனது ஸ்பெல்லை முடித்தார். சுயாஷின் 14வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. வருணின் 15வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 15 ஓவர் முடிவில் 92/5 என பரிதாபமான நிலையில் இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

16வது ஓவரை வீசிய தாக்கூர், தனது பழைய அணி எனும் பாசத்தில் ஒரு பவுண்டரி கொடுத்தார். சுயாஷின் 17வது ஓவரில், ஜடேஜா ஒரு பவுண்டரி அடித்தார். கிடைத்த ஃப்ரீஹிட் வாய்ப்பில், டூபே ஒரு சிக்ஸர் அடித்தார். வருணின் 18வது ஓவரில் மற்றுமொரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் டூபே. தாக்கூரின் 19வது ஓவரில், 5 ரன்கள் மட்டும்தான் அடிக்கமுடிந்தது. கடைசி ஓவர் வரை ஜடேஜா ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து, பல சென்னை ரசிகர்கள் வெறியானார்கள்.

ஜடேஜா அவுட்டாகி, தோனி களத்துக்குள் வர வேண்டுமென முட்டை மந்திரிப்பது, காசு வெட்டுவது, பில்லி சூனியம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஜடேஜாவும் மன உளைச்சலுக்கு ஆளாகி, அவுட்டாகி, வெறியாகி வெளியேறினார். கடைசி இரண்டு பந்துகளை சந்திக்க களமிறங்கினார் தல தோனி. முதல் பந்து அகலபந்து, அடுத்து பந்து நோ பால். ஃப்ரீஹிட்டில் ரன் ஏதுமில்லை. கடைசிப்பந்தில் இரண்டு ரன்கள். 20 ஓவர் முடிவில் 144/6 எனும் சுமாரான ஸ்கோரையே அடித்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

Dhoni CSK

145 எனும் எளிய இலக்கை எட்டிப்பிடிக்க களமிறங்கியது ஜேசன் ராய் - குர்பாஸ் ஜோடி. முதல் ஓவரை வீசந்தார் தீபக் சஹார். முதல் ஓவரின் கடைசிப்பந்து, குர்பாஸின் விக்கெட் காலி. எல்லைக் கோட்டில் வைத்து அற்புதமான கேட்சைப் பிடித்தார் தேஷ்பாண்டே. சுயாஷ் சர்மாவுக்கு பதில் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் வெங்கி. துஷாரின் 2வது ஓவரில், ஜேசன் ராய் ஒரு பவுண்டரி அடித்தார். சஹாரின் 3வது ஓவரில், 2 பவுண்டரிகளை அடித்த வெங்கி, ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டும் ஆனார். துஷார் வீசிய 4வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சஹாரின் 5வது ஓவரை சிக்ஸருடன் துவங்கினார் கேப்டன் ராணா. அதே ஓவரில் ஜேசன் ராய் அவுட். அசத்தினார் தீபக் சஹார். துஷாரின் அடுத்த ஓவரை, சிக்ஸர் அடித்து முடித்துவைத்தார் ரிங்கு சிங். பவர்ப்ளேயின் முடிவில் 46/3 என கொல்கத்தாவும் தடுமாற்றத்துடனே தொடங்கியது.

சென்னை ரசிகர்கள், வடக்குப்பட்டி ராமசாமியிடம் பணத்தை வாங்கிவிடலாம் எனும் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.

மொயின் அலி வீசிய 7வது ஓவரில், 3 ரன்கள் மட்டுமே. 8வது ஓவரை வீசிய தீக்‌ஷானா 4 ரன்கள் கொடுத்தார். மொயின் அலியின் 9வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ரிங்கு சிங்.

CSK vs KKR

பதீரனாவின் 10வது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. 10 ஓவர் முடிவில், 67/3 என ஆட்டத்தை சீர் செய்தது கொல்கத்தா. மொயினின் 11வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் கேப்டன் ராணா. அடுத்த பந்தில், அவர் கொடுத்த கேட்சை மிஸ் செய்தார் பதீரனா. சென்னை ரசிகர்கள் நொந்துப்போனார்கள். ஜடேஜா வீசிய 12வது ஓவரில், ஒரு சிக்ஸரை வெளுத்துவிட்டார் ரிங்கு. மொயின் அலியின் 13வது ஓவரில், இம்முறை அடுத்தடுத்த பவுண்டரிகள் அடித்தது கேப்டன் ராணா. ஜட்டுவின் 14வது ஓவரில், மீண்டுமொரு சிக்ஸர் அடித்தார் ரிங்கு. 15வது ஓவர் வீசவந்த தீக்‌ஷானாவை, இரண்டு பவுண்டரிகளுடன் வரவேற்றார் நித்தீஷ் ராணா. 15 ஓவர் முடிவில் 117/3 என வெற்றிக்கு மிக அருகில் சென்றுவிட்டது கொல்கத்தா. இன்னும் 30 பந்துகளில் 28 ரன்களே தேவை.

CSK vs KKR

பதீரனாவின் 16வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார் ரிங்கு சிங். தீக்‌ஷானாவின் 17வது ஓவரில், ராணாவும் அரைசதத்தையும் கடந்தார். பதீரனாவின் 18வது ஓவரில், ரிங்கு காலி. அடுத்த பந்து, அகலப்பந்தாக பவுண்டரிக்கு சென்று விழுந்தது. 12 பந்துகளில் 4 ரன்கள் தேவை எனும் நிலை. 18வது ஓவரின் 3வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது கொல்கத்தா. ரிங்கு சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

எப்போதும் பி.பி. மாத்திரையை தேடும் சென்னை ரசிகர்கள், இம்முறை கால்குலேட்டரைத் தேடினார்கள்.
CSK vs KKR

இந்த சீசனில், சேப்பாக்கத்தில் ஆடும் கடைசி லீக் மேட்ச் இது என்பதால், தோனியும் மற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும், மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ரசிகர்கள், வீரர்கள், லெஜண்டுகள் என எல்லோரும் உள மகிழ உச்சி முகர்ந்து கொண்டாடி தீர்த்ததில், தல ஹேப்பி அண்ணாச்சி!