2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 3-வது முறையாகக் கோப்பையைத் தட்டிச் சென்றது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் வளர்ச்சி மற்றும் அணிகளின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து Houllihan Lokey என்ற உலகளாவிய முதலீட்டு வங்கி நிறுவனம் மதிப்பீடு செய்து அதன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில், நடப்பாண்டில் மட்டும் ஐபிஎல் தொடர் 6.5 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஐபிஎல் தொடரின் மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சீசனில் மட்டும் ரூ.28 ஆயிரம் கோடி வளர்ச்சியை ஐபிஎல் தொடர் எட்டியுள்ளது. இதற்கு ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி என்று பிரிந்ததும் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபிஎல் அணிகளின் மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
அதன்படி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியின் பிராண்ட் வேல்யூ ரூ.1,930 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு தோனி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். தவிர, சிஎஸ்கே அணி முதலிடத்தில் உள்ளதால், சென்னை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேபோல் 2-வது இடத்தில் ஆர்சிபி அணி உள்ளது. ஆர்சிபி அணியின் பிராண்ட் வேல்யூ ரூ.1,896 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் இவ்வணி கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும், விராட் கோலியின் பிராண்ட் வேல்யூ ஆர்சிபி அணிக்கு வலு சேர்த்துள்ளது. தொடர்ந்து 3 முறை சாம்பியனான கேகேஆர் அணியின் பிராண்ட் வேல்யூ ரூ.1,805 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் பிராண்ட் மதிப்பைப் பொறுத்தவரை முதல் மூன்று இடங்களில்கூட இல்லை என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.