கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணிகளும் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சென்னை அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் கொல்கத்தா அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா மைதானமா இல்லை, சென்னை சேப்பாக்கம் மைதானமா என்கிற அளவில் ஈடன் கார்டன் மைதானமே தோனி என்ற ஒற்றை ஆளுக்காக மஞ்சள் நிறமாக ரசிகர்களின் கூட்டத்தால் காட்சியளித்தது. இந்தநிலையில், தொடர்ந்து 4 அரை சதங்களை குவித்து சென்னை அணியின் பிளே ஆஃப் பாதையை எளிமையாக்கி வரும் கான்வே, போட்டிக்கு பின்னதான பேட்டியில் தோனிக்கு புகழாராம் சூட்டியுள்ளார்.
அதில், “ருதுராஜ் உடன் கூட்டணி அமைத்து துவக்க ஆட்டக்காரராக விளையாடுவது எனது பதற்றத்தை குறைக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் நிறைய பாராட்டுகள் அவருக்குத்தான் சென்று சேர வேண்டும். முடிந்தவரை நான் தெளிவாக இருக்க முயற்சிக்கிறேன். எனது உடலுக்கு வரும் பந்தை எதிர்கொள்வதில் எனக்கு எப்போதுமே பிரச்சனை இருந்தது. ஆனால் அதை தற்போது சமாளித்து வருகிறேன். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எனது கால்களை பயன்படுத்துவதன் மூலம், நான் சிறப்பாக விளையாடி வருகிறேன்.
சென்னை அணியில் உள்ள கலாசாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, அதனால்தான் தொடர்ந்து வெற்றிகளை பெற முடிகிறது. எம்.எஸ். தோனி அணியில் இருப்பதால், நாட்டில் எங்கு சென்று விளையாடினாலும், ஒவ்வொரு போட்டியும் சொந்த மைதானத்தில் விளையாடுவது போன்ற உணர்வை எங்களுக்கு தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என்று கூறப்படுவதால், சென்னை அணி பங்குகொள்ளும் போட்டி மைதானங்களில் எல்லாம் மஞ்சள் நிறமாகக் காணப்படுவது வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்து வருவதாக தெரிகிறது.