Ambati Rayudu ATR twitter page
T20

”இன்றே என் கடைசிப் போட்டி.. நோ யூ டர்ன்” - அம்பத்தி ராயுடு உருக்கமான பதிவு!

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் அம்பத்தி ராயுடு இன்று ஓய்வை அறிவித்துள்ளார்.

Prakash J

நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டி, இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் மோத இருக்கின்றன. சென்னை அணி 5 முறையாகவும், குஜராத் அணி 2வது முறையாகவும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

இந்த நிலையில், சென்னை அணிக்காக மிடில் ஆர்டர் வரிசையில் இறங்கி விளையாடிவரும் அம்பத்தி ராயுடு, ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ’இன்றைய போட்டியே, தன்னுடைய இறுதிப் போட்டி’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இரண்டு சிறந்த அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ். 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளே ஆஃப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள். இன்று இரவு 6வது. இது ஒரு பயணம். இன்றிரவு நடக்கும் இறுதிப் போட்டிதான் ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த சிறந்த போட்டியை நான் உண்மையிலேயே ரசித்தேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. நோ யூ டர்ன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். தற்போது சென்னை அணியில் விளையாடி வரும் அம்பத்தி ராயுடு, நடப்பு சீசனில் 15 போட்டிகளில் விளையாடி வெறும் 139 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசன் முழுவதும் இம்பேக்ட் பிளேயராகவே களமிறங்கி விளையாடி வருவதுடன், பேட்டிங்கிலும் சொதப்பி வரும் அம்பத்தி ராயுடுவுக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அம்பத்தி ராயுடுவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு அம்பத்தியும் பதிலடி கொடுத்திருந்தார். மேலும், அம்பத்தி ராயுடுவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் தோனியை, கிரிக்கெட் வல்லுநர்களும் ரசிகர்களும் வறுத்தெடுத்து வந்தனர். இந்த நிலையில், அம்பத்தி ராயுடுவே ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

13 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அம்பத்தி ராயுடு, இதுவரை 203 போட்டிகளில் களமிறங்கி 4,329 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதமும், 22 அரைசதங்களயும் எடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டு சென்னை அணிக்காக களமிறங்கிய அவர், அந்த ஆண்டு நடைபெற்ற சீசனில் 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதத்துடன் 602 ரன்கள் எடுத்ததே அவருடைய அதிகபட்ச சராசரியாக உள்ளது. முன்னதாக, இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,694 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 3 சதங்களும், 10 அரைசதங்களும் அடக்கம். அதுபோல் 6 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் அம்பத்தி ராயுடு, 42 ரன்கள் எடுத்துள்ளார். ஏற்கெனவே அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், இன்றுடன் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.