RR vs CSK IPL
T20

'துண்டு ஒருமுறைதான் தவறும்..' 7க்கு6 கோப்பை நோக்கி செல்லும் CSK! RR அணிக்கு ஹாட்ரிக் தோல்வி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி அபார வெற்றிபெற்றது.

Rishan Vengai

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5முறை ஐபிஎல் கோப்பைக்கு அழைத்துச்சென்ற மகேந்திர சிங் தோனி, ஓய்வுபெற சரியான நேரம் இருந்த போதும் ரசிகர்களுக்காக மேலும் ஒரு ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவதாக கடந்த ஐபிஎல்-ல் தெரிவித்தார்.

ரசிகர்களுக்காக 2024 ஐபிஎல் தொடரில் விளையாடும் முடிவை எடுத்தாலும், சிஎஸ்கே அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக தன்னுடைய கேப்டன் பதவியை புறக்கணித்த தோனி, ஒரு வீரராக மட்டுமே இந்த ஐபிஎல்-ல் விளையாடி வருகிறார்.

MS Dhoni

இந்நிலையில் தோனியை மீண்டும் ஒரு கோப்பையுடன் அனுப்பிவைக்கும் முயற்சியாக “7க்கு6” என 6வது கோப்பை நோக்கி விளையாடி வருகிறது சென்னை அணி. தொடக்கத்தில் புள்ளிப்பட்டியலில் நல்ல இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி, அதற்குபிறகு சில தோல்விகளால் ஏற்ற இறக்கத்தை கண்டுவருகிறது. கடைசி 3 போட்டிகளில் இரண்டில் வெல்லவேண்டும் என்ற இக்கட்டான நிலையில், குஜராத் அணிக்கு எதிராக தோல்வியடைந்த சென்னை அணி முக்கியமான போட்டியில் இன்று ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.

அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங்!

தங்களின் சேப்பாக்கம் கோட்டையில் நடந்த போட்டியில் முதலில் பந்துவீசிய சென்னை அணி, ராஜஸ்தான் பேட்டர்களை தங்களின் அபாரமான பந்துவீச்சால் திணறடித்தது. முதல் 6 ஓவரில் 3, 4, 6 ரன்கள் என சொற்ப ரன்களையே அடித்த ராஜஸ்தான் அணி, பவர்பிளேவில் 42 ரன்கள் மட்டுமே அடித்து ரன்களை எடுத்துவர முடியாமல் திணறியது.

simarjeet singh

தொடர்ந்து சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 110 ஸ்டிரைக்ரேட்டிலும், ஜோஸ் பட்லர் 80 ஸ்டிரைக்ரேட்டிலும் விளையாட, இரண்டு கலக்கலான டெலிவரி மூலம் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இருவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றிய சிமர்ஜீத் சிங் கலக்கிப்போட்டார். உடன் களத்திற்கு வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் ரன்களை அடிக்க முடியாமல் தடுமாறினார், வெறும் 5 பவுலர்களோடு மட்டுமே சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தரமான பிளானிங் உடன் வந்து RR அணியை சம்பவம் செய்தனர்.

sanju samson

ரன் எப்படியும் வந்துவிடும் என காத்திருந்த ராஜஸ்தான் ரசிகர்களுக்கு கடைசிவரை ஏமாற்றமே மிஞ்சியது, 19 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடுத்து வெளியேறிய சஞ்சு சாம்சன் ஏமாற்றினார்.

ரியான் பராக்

“யாருதான் ப்பா அடிக்க போறிங்க” என்ற விரக்திக்கே ரசிகர்கள் செல்ல, கடைசியாக ஜோடி சேர்ந்த ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரேல் இருவரும் 5 சிக்சர்களை பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தனர். 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என விரட்டிய பராக் 47 ரன்களும், 2 சிக்சர்கள் 1 பவுண்டரி என விளாசிய ஜுரேல் 28 ரன்களும் அடிக்க 20 ஓவர் முடிவில் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான் அணி.

அசத்தலான வெற்றியை பதிவுசெய்த சிஎஸ்கே!

142 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், பேட்டர்கள் ஒரு அணியாக சேர்ந்து சிறப்பாக செயல்பட்டனர்.

தொடக்கத்தில் 2 சிக்சர்கள் 1 பவுண்டரி என பறக்கவிட்ட ரச்சின் ரவிந்திரா ரன்களை எடுத்துவர, அடுத்து களத்திற்கு வந்த டேரில் மிட்செல் 4 பவுண்டரிகளை விளாசி கெத்துக்காட்டினார். ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டை கைப்பற்றிய ராஜஸ்தான் அணி, ஆட்டத்தை கட்டுப்படுத்தும் ஒரு பவுலிங்கை வீசியது.

ரச்சின்

என்னதான் விக்கெட்டை வீழ்த்தினாலும் இறுதிவரை களத்திலிருந்தன் கேப்டன் ருதுராஜ், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை இறுதிவரை தனியாளாக எடுத்துச்சென்றார். ஆட்டம் ஒரு கட்டத்தில் மந்தமாக செல்ல களத்திற்கு வந்த சிக்சர் துபே 2 பவுண்டரி 1 சிக்சர் என பறக்கவிட்டு இலக்கிற்கு அருகாமையில் அணியை எடுத்துச்சென்றார். முடிவில் 2 சிக்சர்கள் 1 பவுண்டரி என விரட்டி கெத்துக்காட்டிய ருதுராஜ் 42 ரன்கள் அடிக்க, சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ருதுராஜ்

இந்த தோல்வியின் மூலம் தங்களுடைய மொமண்டமை தவறவிட்டிருக்கும் ராஜஸ்தான் அணி, தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்று ஹாட்ரிக் தோல்வியை பதிவுசெய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு சென்றிருக்கும் சென்னை அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் ரன்ரேட்டுடன் சிறப்பான இடத்தில் நீடிக்கிறது.

தோனி

ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சிமர்ஜீத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.