தோனி PT
T20

நாடி, நரம்பு.. அனைத்திலும் ஊறிப்போன CSK! ஆசை இருந்தும் பேட்டிங் செய்ய வராத தோனி! நெகிழ்ச்சி சம்பவம்!

பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

Rishan Vengai

சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும், சிஎஸ்கே ரசிகர்களுக்கும் இடையேயான பந்தம் என்பது ”ஒரு கண்ணு கலங்கினாலும் பல கைகள் துடைக்க வருமே”னு வரிகள் எழுதி கொண்டாடுற அளவுக்கு அன்பால் நிரம்பியது. அதற்கு எடுத்துக்காட்டாய் கடந்த 2023 ஐபிஎல் பைனலில் தோனிக்காக சிஎஸ்கே ரசிகர்களும், சிஎஸ்கே ரசிகர்களுக்காக தோனியும் மாறிமாறி அன்பை பறிமாறிக்கொண்ட விதம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

2023 ஐபிஎல் பைனல்தான் தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கப்போகிறது என்று தெரிந்ததும், தோனியின் மீதான அதீத பாசத்தால் இறுதிப்போட்டி நடந்த அகமதாபாத்துக்கு படையெடுத்தனர் சிஎஸ்கே ரசிகர்கள். மழையால் பாதிக்கப்பட்ட இறுதிப்போட்டி முடிவதற்கு 3 நாட்கள் ஆனபோதும், மழை-வெயில் என எதையும் பார்க்காமல் கொசுக்கடியில் ரயில்வே ஸ்டேஷனில் படுத்தெழுந்து தோனியின் வெற்றியை கண்ணில் கண்ணீரோடு கொண்டாடினர் சிஎஸ்கே ரசிகர்கள்.

CSK Fans | IPL 2023 Finals

ரசிகர்களின் இவ்வளவு அன்பையெல்லாம் கவனித்த தோனி, ”5வது ஐபிஎல் கோப்பையை வென்று அதிக கோப்பைகள் வென்ற மும்பை அணியை சமன்செய்தாச்சு, முழங்காலிலும் பெரிய காயம் பார்த்தாச்சு, இதைவிட ஓய்வை அறிவிக்க சிறந்த தருணம் இருக்கமுடியாது. ஆனால், இவ்வளவு அன்புகாட்டும் சென்னை ரசிகர்களுக்காக கூடுதலாக ஒரு ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன்” என்று தன் முடிவை மாற்றிக்கொண்டார். இப்படி தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் என இரண்டு தரப்பும் அன்பை மாற்றிமாற்றி வெளிக்காட்டியதை நாம் அதிகமுறை பார்த்திருக்கிறோம்.

dhoni - ruturaj

ஆனால் தற்போது சிஎஸ்கே அணிக்காகவும், அதன் எதிர்காலத்திற்காகவும் “கேப்டன்சி பொறுப்பு வேண்டாம்” என தோனி எடுத்திருக்கும் பெரிய முடிவு அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் தானெடுத்த ஒரு முடிவுக்காக தோனி எந்தளவு தன்னுடைய விருப்பத்தை கூட விட்டுவிட்டு அணிக்காக நிற்கிறார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நேற்றைய போட்டியில் தோனி செய்த ஒரு சம்பவம் எல்லோரையும் பிரமிக்க வைத்துவிட்டது.

இனி நிரந்தர ஓப்பனர் ரச்சின் தான்..

சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில், ருதுராஜுக்கு எதிராக முதல் ஓவரை அற்புதமாக வீசிய ஓமர்சாய், ஒரு ஸ்விங்கிங் டெலிவரியில் சிஎஸ்கே கேப்டனை சிக்கவைத்தார். ஆனால் கைக்கு வந்த எளிதான கேட்ச்சை கோட்டைவிட்ட சாய் கிஷோர், அணியை முதல் ஓவரிலேயே தோல்விக்கு அழைத்துச்சென்றுவிட்டார். அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் எல்லாமே குஜராத் அணிக்கு சாதகமாக சென்றிருக்கும்.

rachin

ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ருதுராஜ் ஒருபுறம் நிலைத்துநிற்க, மறுமுனையில் சிக்சர், பவுண்டரிகள் என சிதறடித்த ரச்சின் ரவிந்திரா, டெவான் கான்வே திரும்ப வந்தாலும் நான்தான் நிரந்தர ஓப்பனர் என சொல்லுமளவு தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்கொண்ட பந்துகளை எல்லாம் பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிய ரச்சின், 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து 46 ரன்கள் குவித்து வெளியேறினார்.

Dubey

ரச்சின் வெளியேறியதும் களத்திற்கு வந்த சிவம் துபே, ”அவர் அடிச்சதுலாம் அடியே இல்ல; இப்போ நான் அடிக்கிறன் பாருங்க” என 5 சிக்சர்களை பறக்கவிட்டு சிக்சர் துபேவாக மாறினார். ருதுராஜ் 46 ரன்களும், துபே 23 பந்துகளுக்கு 51 ரன்களும் அடித்து வெளுத்துவாங்க 206 ரன்களை குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

42 வயதில் ஸ்டண்ட் செய்த தோனி!

207 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியில், எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக சோபிக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய குஜராத் வீரர்கள், மிடில் ஓவர்களில் கிட்டத்தட்ட 26 பந்துகளாக ஒரு பவுண்டரியை கூட அடிக்கமுடியாமல் தடுமாறினர். மோசமாக செயல்பட்ட டைட்டன்ஸ் அணி ஆட்டத்தின் முடிவில் 143 ரன்கள் மட்டுமே அடித்து, 63 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 31 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார்.

தோனி

விஜய் சங்கருக்கு எதிராக ஒரு அசாத்தியமான கேட்ச்சை எடுத்த எம்எஸ் தோனி, 42 வயதில் “உங்களுக்கு இன்னும் வயசே ஆகல” என சொல்லுமளவு எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஒரு கடினமான கேட்ச்சை எளிதாக காட்டிய தோனி, நான்தான் இப்போதும் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை நிரூபித்துள்ளார்.

தோனி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

முதல் இன்னிங்ஸில் 19வது ஒவரில் பேட்டிங் செய்த ஷிவம் துபே அவுட்டானதும், தோனி பேட்டிங் செய்வதற்காக கைகளில் கிளவுஸ் மற்றும் லெக்பேட் (legpad) அனைத்தையும் கட்டுக்கொண்டு ரெடியாகினார். அதனை பார்த்த ரசிகர்கள் இன்று தோனியின் பேட்டிங்கை பார்த்துவிடலாம் என ஆரவாரம் செய்தனர். ஆனால் அப்போது தோனிக்கு பதிலாக சமீர் ரிஸ்வி களமிறக்கப்பட்டார். சமீர் ரிஸ்வியும் அவுட்டாகி வெளியேற, பேட்டிங் செய்யவே தோனி கிளம்பிவிட்டார். ஆனால் அப்போதும் தோனிக்கு முன்னதாக ரவிந்திர ஜடேஜா களமிறங்கினார். முடிவில் பேட்டிங் செய்ய தயாராக இருந்த தோனியால் பேட்டிங் செய்யவே முடியாமல் போனது.

தோனி

இதற்குமுன் இதுபோன்று தோனி பேட்டிங் செய்ய தயாரானால் நிச்சயம் பேட்டிங் செய்ய வந்துவிடுவார், ஆனால் தற்போது தோனி கேப்டன் இல்லாததால் அவர் கோச் மற்றும் கேப்டனின் முடிவுக்கு மதிப்பளித்து தன்னுடைய விருப்பத்தை புறந்தள்ளிவிட்டார். தோனி ”அணியின் நலனுக்காக கேப்டன்சி வேண்டாம்” என்று எடுத்த முடிவில் திடமாக இருக்கிறார். அவருடைய நாடி நரம்பு ரத்தம் புத்தி அனைத்திலும் தற்போது சிஎஸ்கேவின் எதிர்காலமே ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாய் இந்த சம்பவம் அமைந்தது.

தோனி

போட்டிக்கு பிறகு இதுகுறித்து பேசிய பத்ரிநாத், “தோனியால் தனித்து முடிவெடுக்க முடியாத நிலையில்தான் பேட்டிங் செய்ய வரவில்லை, அவர் கேப்டன் மற்றும் கோச் இருவரின் முடிவுக்காக தன் ஆசையை விட்டுவிட்டார்” என்று தெளிவுபடுத்தினார்.

போட்டியின் போதும் ஒவ்வொரு முடிவுக்கும் தோனியையே மற்றவீரர்கள் பார்க்கும்போது, ‘என்னிடம் கேட்காதீர்கள், ருதுராஜிடம் கேளுங்கள்’ என்று தோனி கூறிவருவது குறிப்பிடத்தக்கது. தோனி சிஎஸ்கே அணியை ஒரு சரியான நகர்த்தலில் கொண்டுசெல்ல தன்னுடைய முழு கவனத்தையும், உழைப்பையும் போட்டுவருகிறார். அதற்காக அவர் நேற்று செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே

இரண்டு போட்டிகளை வென்ற சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.