சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 17-வது லீக் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், சிஎஸ்கே அணி வீரர் ரவீந்திர ஜடேஜா சேப்பாக்கம் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, சிஎஸ்கே அணியில் காயமடைந்த வீரர்களின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சுழல் பந்து வீச்சாளர் மொயின் அலி தற்போது நன்றாக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் சரியாகி விடுவார் என்றும் கூறினார். தீபக் சஹார் நிலைப் பற்றி தகவல் தெரியவில்லை எனவும், பென் ஸ்டோக்ஸ் 5, 6 நாட்களில் சரியாகி விடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தனது 200 ஆவது போட்டியை நாளை விளையாட உள்ளநிலையில், சிஎஸ்கே அணிக்கு மட்டுமல்ல; இந்திய கிரிக்கெட் அணியின் லெஜன்ட் தோனி என்றும், சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி விளையாடும் 200-வது போட்டியை அவருக்காக நாளை நாங்கள் வென்று அவருக்கு பரிசளிப்போம் எனவும் ரவீந்திர ஜடேஜா கூறினார்.
நாளை நிச்சயம் சில திட்டங்களுடன் (Plans) வருவோம் எனவும், திட்டங்களை அடிப்படையாக கொண்டு பந்து வீசுவோம் என்றும் தெரிவித்த அவர், கடந்தப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தியது தனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தது எனவும், அடுத்து வரும் போட்டிகளில் நன்றாக பந்து வீச தனக்கு அது உதவியாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை மைதானம் என்றாலே ஸ்பின்னர்ஸ் தான்; நாளையப் போட்டியில் இரு அணிகளிலும் தகுதி வாய்ந்த ஸ்பின் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்றுக் கூறிய ரவீந்திர ஜடேஜா, ஒரு பேட்ஸ்மேனாக செய்ய வேண்டியது, இடைவெளிகளை பார்த்து பந்துகளை பவுண்டரிகளுக்கு அடிப்பதுதான் எனவும், பெங்களூரில் பந்துகளை பறக்க விட்டது போல், இங்கு அது அவ்வளவு எளிதல்ல; கடினமான ஒன்று என தெரிவித்தார்.
ஒரு பேட்ஸ்மேனாக தன்னை எந்த இடத்தில் அணி விளையாட சொல்கிறதோ, அந்த இடத்தில் விளையாடுவது தனக்கு மகிழ்ச்சி தான் என்றும், அது 5, 6, 7 என எந்த இடமாக இருந்தாலும் அதைப் பற்றி தான் கவலைப்படுவதில்லை எனவும் அவர் கூறினார்.