ஒருவழியாக, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா முடிவுக்கு வந்துள்ளது. இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா, மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையைத் தட்டிச் சென்றது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் மற்றும் ஆடவர் ஐபிஎல் இறுதிப்போட்டியில், ஓர் ஒற்றுமை உள்ளதை இங்கே பார்ப்போம்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற மகளிர் ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனையான மேக் லானிங் தலைமையிலான டெல்லி அணியும், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய வீராங்கனையான கேப்டன் மேக் லேனிங், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அவ்வணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 113 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய வீராங்கனையான கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதே ஆட்டம்தான், நேற்றைய ஆடவர் ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் அரங்கேறி உள்ளது. ஆம், ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட் கம்மின்ஸ் உள்ளார். அவர் நேற்றைய போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். அதன்படி, அவரது அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் வெறும் 113 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் கொல்கத்தா அணியில் இந்தியர்தான் கேப்டன்.
அதாவது, மகளிர் ஐபிஎல்லின் இறுதிப்போட்டியில் என்ன நடந்ததோ, அதுவே நேற்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் அரங்கேறியுள்ளது. இரண்டு அணிகளிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களே கேப்டன்களாக இருந்தனர். தவிர, இருவருமே முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தனர். இரண்டு அணிகளுமே 18.3 ஓவர்களுக்கு 113 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததது குறிப்பிடத்தக்கது. இந்த ஒற்றுமையை இணையத்தில் பதிவிட்டு நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.