CSK vs RR pt web
T20

CSK vs RR | திணறிய ராஜஸ்தான்... சேப்பாக்கம் கோட்டையில் கெத்து காட்டிய சென்னை பந்துவீச்சாளர்கள்!

Angeshwar G

நடப்பு ஐபிஎல் தொடரின் 61 ஆவது லீக் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இன்று நடைபெறும் போட்டி மற்றும் ஆர்.சி.பி. அணியுடனான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு பிரச்னையின்றி முன்னேற முடியும். அதேப் போன்று ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிடும். ராஜஸ்தான் அணி தான் விளையாடிய கடைசி இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

11ஆவது முறையாக டாஸ் தோல்வி

இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்றைய டாஸ் தோல்வியின் மூலம் சென்னை அணி நடப்பு தொடரில் 13 லீக் போட்டிகளில் 11 போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளது.

பவர்ப்ளேவில் குறைவான விக்கெட்கள்

ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் நிதானமாகவே ஆட்டத்தைத் தொடர்ந்தனர். பவர்ப்ளேவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்திருந்தது. இந்த பவர்ப்ளேவிலும் சென்னை அணி விக்கெட்களை வீழ்த்தவில்லை. இதன்மூலம் நடப்பு தொடரில் பவர்ப்ளேவில் குறைவான விக்கெட்களை வீழ்த்திய அணிகளின் பட்டியலில் பஞ்சாப் அணிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை பஞ்சாப் அணி பவர்ப்ளேவில் 14 விக்கெட்களை வீழ்த்திய நிலையில், சென்னை அணி 15 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளது.

அதேபோல் நடப்பு தொடரின் பவர்ப்ளேவில் குறைவான சிக்ஸர்களை அடித்த அணிகளின் பட்டியலில் ராஜஸ்தான் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. பவர்ப்ளேவில் 15 சிக்சர்களை மட்டுமே அடித்து சென்னை அணி முதலிடத்தில் உள்ள நிலையில், ராஜஸ்தான் அணி 16 சிக்சர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

142 இலக்கு

விக்கெட்களை இழக்காமல் பவர்ப்ளேவில் ஆடிய ராஜஸ்தான் அணிக்கு தனது முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார் சிமர்ஜித். இதன்பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்துகொண்டே இருந்தன.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

அதிகபட்சமாக ரியான் பராங் 47 ரன்களையும், துருவ் ஜூரல் 28 ரன்களையும் எடுத்தனர். சென்னையின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். சிமர்ஜித் சிங் 3 விக்கெட்களையும், தேஷ்பாண்டே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

2-வது இன்னிங்க்ஸ் தற்போது தொடங்கிய நிலையில் 1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி சென்னை அணி 4 ரன்களில் ஆடிவருகிறது!