Dhoni Kunal Patil
T20

CSK IPL 2023 Preview | போர்கண்ட சிங்கம் யார்கண்டு அஞ்சும்? தோனியின் சென்னை வேட்டைக்குத் தயாரா..?

ஓய்வு பெறுவதும் கோப்பையை கைப்பற்றுவதும் தோனி எடுக்கும் முடிவுகளை நம்பியே இருக்கின்றன. சிங்கத்திற்கு வேட்டையாடக் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன?

Nithish

நினைவில் காடுள்ள மிருகம் யானை. அரவமே இல்லாமல் அலைந்து திரிந்தாலும் அது எழுப்பும் அதிர்வுகள் போதும் அதன் இருப்பை உணர்த்த. அதே காட்டில் மற்றொருபுறம் இலக்கின்றி வேகம் மட்டுமே தெரிந்த இயல்பென ஓடித் திரியும் குதிரை. அணியாய் ஒன்றிணைந்து எதிராளியைத் தாக்கி நிலைகுலைய வைக்கும் ஆற்றல் மிகுந்த ஓநாய்க்கூட்டம் ஒருபக்கம். இவற்றின் நடுவே ஒய்யாரமாய் படுத்திருக்கும் சிங்கம். அது எழுந்து வேட்டைக்கு எத்தனிக்கும் அடுத்த நொடி காடே விதிர்த்துப்போகும். வேட்டை சலித்து அந்த சிங்கம் ஒதுங்கினாலோ காயம்பட்டு ஓய்வெடுத்தாலோ காடு தன்னுடையதாக்கும் என ஒவ்வொரு மிருகமும் உரிமை கொண்டாடும். ஓய்வுக்குப் பின் முன்னிலும் வேகமாய் அதே சிங்கம் பாயும்போது தெரியும் அசல் காட்டுராஜா யாரென. ஐ.பி.எல் காட்டில் சி.எஸ்.கேதான் அந்த சிங்கம். எத்தனை முறை எண்ட் கார்டு போட்டாலும், 'நான் வீழ்வென நினைத்தாயோ' என முன்னிலும் வேகமாய் பாயும் காட்டு ராஜா.

Dhoni, Fleming

2018-ல் இப்படி எண்ட் கார்டு போட்ட அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி கோப்பையை வென்று 'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என முழக்கமிட்டது. 2019-ல் ஒரு ரன்னில் கோப்பையை கைவிட்டது. மயிரிழையில் தோற்பதும் ஜெயிப்பதும் சி.எஸ்.கேவுக்கு புதிதல்ல. எனவே அடுத்த வருஷம் பார்த்துக்கலாம் என மனதைத் தேற்றிக்கொண்டார்கள் சென்னை ரசிகர்கள். ஆனால் அப்போது யாருக்கும் தெரியாது, அடுத்து சி.எஸ்.கேவை சேப்பாக்கத்தில் பார்க்க நான்கு ஆண்டுகள் ஆகுமென. 2020-ல் சென்னையின் வீழ்ச்சிக்கு ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும் பிரதான காரணங்களுள் ஒன்று, சென்னையில் விளையாடாதது. எல்லாம் கையைவிட்டுப் போனாலும் அந்த எனர்ஜியே அணியை கடைசிபந்துவரை போராட வைக்கும். 2021-ல் சொன்னபடியே முன்னினும் வேகமாய் பாய்ந்தது சிங்கம். 2022-ல் மீண்டும் சறுக்கல். அதுவும் இதுவரை சென்னை அணி சந்தித்திடாத அளவுக்கு மோசமான சறுக்கல். கூடவே எக்கச்சக்க குழப்பங்களும். 'இது நம்ம பார்த்த சென்னை கிடையாதே' என்கிற கேள்வி ஒவ்வொருக்குள்ளும் எழுந்தது. ஜடேஜாவுடன் சமரசமானது, பிராவோ, உத்தப்பாவிற்கு விடைகொடுத்தது, ஸ்டோக்ஸை ஆர்ப்பாட்டமாய் ஏலத்தில் எடுத்தது என ஏகப்பட்ட சம்பவங்களுக்குப் பின் இதோ இன்று களம் காண்கிறது சென்னை.

வாரணம் ஆயிரம் :

கேப்டன் தோனி. வேறு யாராய் இருந்துவிட முடியும் பலங்களின் பட்டியலில் முதலிடத்தில். பவர்ஹிட்டர் தோனி, பினிஷர் தோனியை எல்லாம் இனியும் எதிர்பார்ப்பதில் லாஜிக் இல்லை. ஆனால் கேப்டன் தோனியை கட்டாயம் எதிர்பார்க்கலாம். பவுலர்களை சட்சட்டென ரொட்டேட் செய்யும் ஆளுமையை, பேட்ஸ்மேனோடு மைண்ட் கேம் ஆடி பீல்டர்களை செட் செய்யும் சாதுரியத்தை.. இவையெல்லாவற்றையும் மீண்டும் காணலாம். அதற்கேற்றார்போலவே ஒரு அணியை செட் செய்தும் வைத்திருக்கிறார். 'என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்' என்பதே அவரின் உடல்மொழியாக இருக்கிறது இந்த சீசனில். போர்கண்ட சிங்கம் யார்கண்டு அஞ்சும்?

Dhoni

ஜடேஜா - பிணக்குகள் எல்லாம் தீர்ந்து பிழைகளை எல்லாம் களைந்து மீண்டும் களம் காணத் தயாராகிறார். கடந்த ஆண்டு தொலைத்த ஃபார்மை இந்த சீசனுக்கு முன்பாக அவர் கண்டெடுத்திருப்பது அணிக்கு எக்கச்சக்க பலம். தோனி ஆல்ரவுண்டர்களுக்கு எல்லாம் பின்னால்தான் களமிறங்குவார் என்பதால் இந்த முறை பினிஷர் ரோலும் ஜடேஜாவையே சாரும்.

Jadeja Dhoni Deepak Chahar

பெஞ்சமின் ஸ்டோக்ஸ் - இந்தத் தலைமுறையின் தி பெஸ்ட் ஆல்ரவுண்டர். டெஸ்ட்டோ, டி20யோ, ஒருநாள் போட்டியோ தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து விளையாடும் கிரிக்கெட் காதலன். ஐ.பி.எல்லில் இதுவரை `முழுதாக ஒரு சீசன் கூட ஆடவில்லை என்பதால் அவரின் புள்ளிவிவரங்கள் பார்க்க ஏமாற்றமளிப்பதைப் போலத்தான் இருக்கும். ஆனால் சி.எஸ்.கே அணியின் பெரும்பலமே அவர்கள் வீரர்களை வைத்திருக்கும் தன்மையான சூழல்தான். அது அவர்களை இலகுவாக்கி முழு ஆட்டத்திறனையும் வெளிக்கொண்டு வர உதவுகிறது. கடந்த காலத்தில் வாட்ஸன், ராயுடு, டுவைன் ஸ்மித் என பலருக்கு இது ஒர்க் அவுட்டாகியிருக்கிறது.

Jadeja Ali

ஓபனிங் பார்ட்னர்ஷிப் - 2022 மெகா ஏலத்திற்கு முன்பாக சக கிரிக்கெட் வெறியர்களிடம் 'கண்டிப்பா கான்வேயை எடுப்பாங்க' என பந்தயம் கட்டியது நினைவிலிருக்கிறது. கான்வே ஒரு பக்கா சி.எஸ்.கே மெட்டீரியல். டெக்ஸ்ட் புக் ஷாட்கள் ஆடுவது, ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து சிக்கும் பந்தை விரட்டுவது, ஃப்ளெமிங் - மெக்கல்லம் என சென்னைக்கு ராசியான நியூசிலாந்து ஓபனர் என்கிற பின்னணியிலிருந்து வருவது, இப்படி ஏகப்பட்ட காரணங்கள் இருந்தன பந்தயம் கட்ட. அந்த நம்பிக்கையை கடந்த சீசனில் காப்பாற்றினார் கான்வே. கூடவே ருத்துராஜ். சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் 660 ரன்கள். சராசரி 220. கண்ணைக் கட்டுகிறதா? இந்த ஃபார்ம் அப்படியே இருக்கும்பட்சத்தில் சென்னை ஓபனர்கள் பட்டையைக் கிளப்புவார்கள்.

சேப்பாக்கம் - குண்டு துளைக்காத கண்ணாடி போல தோல்வி துளைக்காத கோட்டை சி.எஸ்.கே அணிக்கு இந்த சேப்பாக்கம் மைதானம். ஐ.பி.எல்லில் இதுவரை சென்னை அணி சேப்பாக்கத்தில் ஆடியுள்ள 56 ஆட்டங்களில் 40-ல் வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி சதவீதம் 71.4. இது மற்ற எந்த அணிகளிடமும் இல்லாத பெரும்பலம்.

பேட்டின் லைன் அப் - குறைந்தது பத்து பேர், அதிகபட்சம் பதினோரு பேர் பேட்டிங் ஆடவேண்டும் என்பதுதான் தோனியின் சமீப ஆண்டுகளுக்கான கேம் பிளான். இந்த ஆண்டும் அதை மனதில் வைத்தே ஆல்ரவுண்டர்களை எடுத்திருக்கிறார்கள். எனவே விக்கெட்கள் போனாலும் இழுத்துப் பிடித்து நிறுத்தி ஸ்கோர் ஏற வைப்பார்கள்.

இம்சை அரசர்கள் :

டெத் ஓவர் பவுலிங் - அணியின் ஆபத்பாந்தவனான பிராவோ கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அந்த வெற்றிடத்தை நிரப்ப ஏலத்தில் ஆளெடுக்கவும் இல்லை. கைல் ஜேமிசன் கடைசி நேரத்தில் காயம் காரணமாக வெளிநடப்பு செய்ய, அவருக்கு பதிலாய் எடுக்கப்பட்ட சிசாண்டா மகலா நன்றாகவே டெத் பவுலிங் போடக்கூடியவர். ஆனால் ஐ.பி.எல் அனுபவம் இவருக்கு இல்லையென்பதால் தோனி முதல் பாதியில் ப்ரிட்டோரியஸை வைத்து டெத் ஓவர்களை சமாளிக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் கான்வே, மொயின், ஸ்டோக்ஸ் என மூன்று பேர் ஏற்கனவே டீமில் இருக்கிறார்கள். எனவே நான்காவது ஆள் ப்ரிட்டோரியஸா தீக்‌ஷனாவா என்றால் தோனி தீக்‌ஷனாவையே டிக் அடிப்பார். 6.00 என்கிற கடைசி சீசன் எகானமியே காரண்ம். ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் சுத்தமாய் பங்களிக்கப் போவதில்லை என்பது கூடுதல் செய்தி.

Pret Chepauk

இந்திய வீரர்களின் ஃபார்ம் - எப்போதும் சென்னை அணியில் உள்ளூர் வீரர்களின் பங்களிப்பு 50 சதவீதம், வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு 50 சதவீதம் என்றுதான் இருக்கும். ஆனால் இந்த முறை வெளிநாட்டு வீரர்களையே அதிகம் சார்ந்திருக்கிறது அணி. ராயுடு கடைசியாய் விளையாடி ஐந்து மாதங்கள் ஆகிறது. ஷிவம் தூபேயும் சையது முஷ்டாக் அலி தொடரில் சராசரியாகவே ஆடியிருக்கிறார். மற்றொருபக்கம் ஒரு பெரும் இடைவெளிக்குப் பின் முகாமுக்கு வந்திருக்கும் தீபக் சஹாரின் சமீபத்திய ஃபார்மும் நம்பிக்கையளிப்பதாய் இல்லை. இவர்களின் பெர்ஃபாமன்ஸைப் பொறுத்தே ப்ளே ஆஃப் வாய்ப்பு.

தனி ஒருவன் :

தீக்‌ஷனா : பவர்ப்ளேயோ டெத் ஓவரோ, கேரம் பாலோ ஆர்ம் பாலோ ரன்களை கட்டுப்படுத்த வேண்டுமோ, விக்கெட் எடுக்க வேண்டுமோ எல்லாவற்றுக்கும் ஒரே உபாயம் தீக்‌ஷனாதான். உலகமெங்கும் நடைபெறும் டி20 லீக்குகள் அத்தனையிலும் பறந்து பறந்து பங்குகொள்கிறார். விக்கெட்கள் குவிக்கிறார். சுழல் சுரங்கமான சேப்பாக்கம் இவரின் கைபட காத்திருக்கிறது. சேப்பாக்கத்தில் எந்த இடர்ப்பாடுகளும் இல்லாமல் இவர் ஆடும்பட்சத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

CSK IPL

சிமர்ஜித் சிங் - சென்னை அணி ஒரு வீரருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் தருகிறதென்றால் அந்த அணி நிர்வாகம் அந்த வீரரை எளிதில் கைவிடத்தயாரில்லை என அர்த்தம். சிமர்ஜித்துக்கு கடந்த முறை ஆறு போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. 7.67 என்கிற எகானமியோடு ஓரளவிற்கு நன்றாகவே பந்துவீசினார். இந்த முறை முகேஷ் இல்லாத காரணத்தால் இன்னும் அதிக வாய்ப்புகள் வழங்கப்படலாம். இன்னும் நிறைய விக்கெட்களும் வீழ்த்தலாம்.

துருவங்கள் பதினொன்று :

ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், தோனி, ஜடேஜா, ப்ரிட்டோரியஸ், தீபக் சஹார், ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர், சிமர்ஜித் சிங்.

Chennai Super Kings

இந்த அணி முதல் சில ஆட்டங்களுக்கு மட்டுமே. இலங்கைக்காக விளையாடிக்கொண்டிருக்கும்  தீக்‌ஷனா வந்து சேர்ந்தபின் இந்த அணி மாறும். ஸ்டோக்ஸ் டி20யில் ஐந்தாவது இடத்தில் ஆடும்போது சராசரி 30.50. ஸ்ட்ரைக் ரேட் 137.85. எனவே மிடில் ஆர்டரில் இறங்கவே வாய்ப்புகள் அதிகம். தோனி பேட்டிங் லைன் அப் நீளமாய் இருக்கவேண்டும் என விரும்புபவர். எனவே ப்ளேயிங் லெவனில் ஷிவம் தூபேயை அவர் பரிசீலிக்கலாம். தூபே ஸ்பின் ஆடத் தடுமாறுவார். சேப்பாக்கத்தில் அவர் சொதப்ப வாய்ப்பிருக்கிறது. போக, அவரின் பந்துவீச்சு சுமார் என்பதால் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டரையே தேர்வு செய்வார் எனத் தோன்றுகிறது.  

இம்பேக்ட் பிளேயர் :

இந்த ஆண்டிலிருந்து இம்பேக்ட் ப்ளேயர் எனும் முறை ஐ.பி.எல்லில் அறிமுகமாகிறது. அதன்படி ப்ளேயிங் லெவன் தவிர ஐந்து பிளேயர்களை கேப்டன் மாற்றுவீரர்களாக அறிவிக்கலாம். அவர்களுள் ஒருவர் ஆட்டத்தின் தன்மை பொறுத்து பவுலராகவோ, பேட்ஸ்மேனாகவோ களமிறங்குவார். பவுலராய் களமிறங்குபவர் நான்கு ஓவர்களையும் வீசலாம். பேட்ஸ்மேனாய் களமிறங்குபவரும் அவுட்டாகும்வரை/ஓவர் முடியும்வரை விளையாடலாம். அப்படி பேட்ஸ்மேன் களமிறங்கும்பட்சத்தில் டெயில் எண்டில் இருக்கும் பவுலருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காது. அதே போல இவர்கள் களமிறங்கும்போது வெளியேறும் வீரர் அதன்பின் ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திரும்ப பங்குகொள்ளமுடியாது.

இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸின் இம்பேக்ட் பிளேயர்கள் பட்டியல் பெரும்பாலும் இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

ஷிவம் தூபே (பவர்ஹிட்டராக ஆட்டத்தின் தன்மை பொறுத்து ஏதோ ஒரு கட்டத்தில் இறங்கலாம்)
சிசாண்டா மங்கலா (பேட்டிங்கும் செய்யக்கூடிய டெத் பவுலர் என்பதால் மூன்று ஃபாரீன் பிளேயர்களோடு அணி களமிறங்கும்போது இவர் உள்ளே நுழையலாம்.
பிரஷாந்த் சோலங்கி (ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவைப்படும்போது)
துஷார் தேஷ்பாண்டே (ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும்போது)
ரஹானே (விக்கெட்கள் நிறைய சரிந்தால் ஸ்திரத்தன்மைக்காக)

ஐ.பி.எல்லுக்கு இணையான பிராண்ட் வேல்யூ தோனிக்கு. ஆனால் அவரைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்குமோ என்கிற கவலையோடே தொடருக்குள் வருகிறார்கள் ரசிகர்கள். குறைந்தபட்சம் கோப்பையை வென்றுவிட்டு ஓய்வு பெற்றாலாவது கோடிக்கணக்கான மனங்கள் குளிரும். ஓய்வு பெறுவதும் கோப்பையை கைப்பற்றுவதும் தோனி எடுக்கும் முடிவுகளை நம்பியே இருக்கின்றன. சிங்கத்திற்கு வேட்டையாடக் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன? கோப்பையை வேட்டையாடிவிட்டு வருவார். கானகம் போலே பொறுமையாய் காத்திருப்போம்.