கோடை வெயிலிலும் ரசிகர்களைக் குளிர்வித்து வருகிறது ஐபிஎல். இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவுற்றுள்ளன. அதன்படி புள்ளிப் பட்டியலில் முதல் 3 இடங்களில் ராஜஸ்தான், லக்னோ, சென்னை ஆகிய அணிகள் உள்ளன. இந்த 3 அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றிபெற்றுள்ளன.
நேற்று (ஏப். 21) 29வது லீக் போட்டியில் சென்னை அணியும் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய சென்னை அணி, 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் தனியொருவனாய் நின்ற டெவான் கான்வே, 57 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தப் போட்டிக்குப் பிறகு ‘தல’ கேப்டன் தோனி, ஐதராத்பாத் அணியின் இளம்படையினரைச் சந்தித்து ஆலோசனை கூறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் அவ்வணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக வீரரான டி.நடராஜன் குடும்பத்தைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது பேசுபொருளாகி வருகிறது. ஐதராபாத்தின் இளம்படையினருக்கு, ஆலோசனை கூறிய நடராஜன், அதற்குப் பிறகு தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனையும் நேரில் சந்தித்துப் பேசினார். சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியை நடராஜனின் மனைவி மற்றும் அவருடைய பெண் குழந்தையும் நேரில் கண்டுகளித்தனர். அப்போது, நடராஜன் தன் குழந்தையைக் கைகளில் தூக்கி வைத்திருந்தார்.
அந்தக் குழந்தையைப் பார்த்து தோனி, ‘தன் கையில் தட்டுமாறு கேட்டார். ஆனால், அக்குழந்தையோ தட்டாமல் தன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டது. தோனியோ, திரும்பத்திரும்ப அக்குழந்தையிடம் தன் கையைத் தட்டுமாறு கேட்டப்படி இருந்தார். அக்குழந்தை தட்ட மறுத்தபோதும், ‘உங்க வீட்ல தம்பி இருக்கா’ எனக் கேட்டது. அதற்கு தோனி சிரித்தப்படியே, ‘இல்ல.. உன்னைப்போல ஒரு பாப்பாதான் இருக்கு’ என்று சொன்னவர், நடராஜன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.