champions trophy x page
T20

Champions Trophy 2025|அட்டவணையில் IND Vs PAK மோதல்.. உறுதிசெய்யாத இந்தியா.. வேறுநாட்டில் நடக்குமா?

பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மார்ச் 1-ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத இருப்பதாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Prakash J

’மினி உலகக் கோப்பை’ என அழைக்கப்படும் 9வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை 8 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் முதல் தடவையாக நடத்துகிறது. பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுவதால் அந்த அணியே போட்டி அட்டவணையை அறிவித்துள்ளது.

இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒருநாள் போட்டித் தரவரிசையில் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.

அதன்படி, இந்த தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 19இல் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி முடிவடைகிறது. இதில், லாகூரில் அதிகபட்சமாக 7 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியும் அடங்கும். மார்ச் 1-ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியும் லாகூர் மைதானத்திலேயே நடைபெற இருப்பதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், இந்த தொடருக்கு இந்திய அணியை தவிர மற்ற அணிகள் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்து விட்டன.

இதையும் படிக்க: ”மனைவி நான் இருக்கையில்..” பவித்ரா கவுடா குறித்து நடிகர் தர்ஷனின் மனைவி போலீஸ் கமிஷனருக்கு கடிதம்!

ஆனால் இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது இன்னும் உறுதியாக அறிக்கப்படவில்லை. மத்திய அரசின் அனுமதியைப் பொறுத்துதான் அதன் முழு விவரம் தெரியவரும். ஒருவேளை இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்தால், கடந்த காலங்களைப்போல இந்தியா ஆடும் போட்டிகள் வேறு நாட்டுக்கு மாற்றப்படும்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடரில் விளையாடாமல் இருந்துவருகின்றன. இருநாட்டிற்கும் இடையே இருக்கும் அரசியல் பதற்றம் காரணமாக இருநாட்டின் கிரிக்கெட் அணிகளும் இருதரப்பு தொடர்களில் இருந்து விலகியே இருக்கின்றன. விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்று கூறினாலும், இந்தியா போதுமானவரை பாகிஸ்தானிடம் இருந்து விலகியே இருக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2012-13 இருதரப்பு தொடரில் விளையாடின. அதன்பிறகு இரு நாடுகளும் ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தொடரில் மட்டுமே நேருக்கு நேர் மோதிவருகின்றன. இந்தியா கடைசியாக 2006-ம் ஆண்டு பாகிஸ்தானிற்கு சென்று இருதரப்பு தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஐபிஎல்லில் விரக்தி.. டி20-ல் வெற்றி.. வான்கடே மைதானத்தில் விண்ணைப் பிளந்த ‘ஹர்திக் பாண்டியா’ கோஷம்!