தோனி, பதிரானா file image
T20

ரன்களை வாரி வழங்கியபோதும் பதிரானாவை விட்டுக் கொடுக்காத தோனி! போட்டிக்கு பின் பேசியது என்ன?

Prakash J

அன்றாடம் பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், நேற்று (ஏப்ரல் 27) ஜெய்ப்பூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மண்ணின் மைந்தனான ராஜஸ்தான் அணியும் 37வது லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்த ராஜஸ்தான், முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து சென்னை அணியை ஆரம்பம் முதலே சிதறடித்தது. இறுதியில் அவ்வணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை, அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பவர்பிளேயில் ரன்களை வாரி வழங்கியதும், 2வது இன்னிங்ஸில் ரன்களைக் குவிக்கத் தவறியதுமே சென்னை அணி தோல்வியைத் தழுவியதற்கு முதல் காரணமாகச் சொல்லப்படுகிறது. அதுபோல் ஆரம்பத்தில் அதிரடியாய் ஆடி ரன் குவித்த ராஜஸ்தானை, நடுப்பகுதியில் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை அணி, கடைசி பவர்பிளேயில் பல பந்துகள் ஸ்டெம்பை நோக்கி யார்க்கராக வீசப்பட்டாலும், அது பேட்டில் எட்ஜ் ஆகி பவுண்டரி எல்லைக்கு ஓடியது. இதனாலேயே கடைசி நேரத்தில் அவ்வணி, 200 ரன்களுக்கு மேல் குவித்து, அந்த மைதானத்தின் அதிகபட்ச ரன்னாகவும் சாதனை படைத்தது.

Devon Conway

அதுபோல், தொடர்ந்து நான்கு போட்டிகளில் அரைசதம் அடித்த கான்வே, இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியதும், கடந்த போட்டியில் வெற்றிக்குக் காரணமாக விளங்கிய மற்றொரு வீரரான ரஹானே இந்த ஆட்டத்தில் பெரிய ஸ்கோரை அடிக்காமல் ஏமாற்றியதும், இம்பேக்ட் வீரராக களம் இறக்கப்பட்ட அம்பத்தி ராயுடுவும் டக் அவுட் ஆகி, கை கழுவிப் போனதும் சென்னை அணியின் தோல்வியின் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.

தோல்வி குறித்து பேசிய கேப்டன் தோனி, “நம்முடிய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் நடு ஓவர்களில் நன்றாகத்தான் பந்து வீசினார்கள். ஆனால் பேட்டில், எஜ்ஆகி ஐந்து முதல் ஆறு பவுண்டரிகள் சென்றதுதான் இந்த ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. மேலும், சராசரிக்கு அதிகமான இலக்கு என்பதால் நாம், பவர்பிளேயில் அதிரடியாக விளையாடிருக்க வேண்டும். ஆனால் நமக்கு நல்ல தொடக்கம் பேட்டிங்கில் அமையவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

MS Dhoni

அதேநேரத்தில், நேற்று மைதானத்தில் தம் கைக்கு வந்த பந்தை எதிர்முனையில் நின்ற பதிரானாவுக்கு த்ரோ செய்து பேட்டரை ரன் அவுட்டாக்கும்படி கத்தினார். ஆனால், அந்தப் பந்தை பிடிக்காமல் பதிரானா தவறவிட்டார். இதனால் ஒரு ரன் அவுட் மிஸ்ஸானது. அத்துடன் நேற்றைய போட்டியில் அவர், 4 ஓவர்கள் வீசி 48 ரன்களை வழங்கியிருந்தார். இவற்றால், பதிரானா மீது தோனி கோபம் கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது.

இதற்குப் பதிலளித்துள்ள தோனி. ”பதிரானா, இந்த ஆட்டத்திலும் நன்றாகத்தான் பந்து வீசினார். சிலசமயம் நாம் எப்படி பந்து வீசினோம் என்பதை ஸ்கோர் கார்டு சரியாகச் சொல்லாது” எனத் தெரிவித்துள்ள தோனி, ராஜஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடியதையும் பாராட்டியுள்ளார்.

மைதானத்தில் பதிரானா மீது தோனி, கோபப்பட்டாலும் அவரை பேட்டியின்போது விட்டுக்கொடுக்கவில்லை. அவர், கடந்த காலங்களில் சிறப்பாகப் பந்துவீசி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்ததே காரணம் என்கின்றனர், ரசிகர்கள்.

ஏற்கெனவே தோனி பதிரானாவைப் பாராட்டி இருந்தார். ”அவர் எங்களுக்குக் கிடைத்த நல்ல ஒரு திறமையான வீரர். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக அமையும்” என இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மலிங்காவுடன் பதிரானாவை தோனி ஒப்பிட்டுப் பாராட்டியிருந்தார். இவருடைய பாராட்டலுக்குப் பிறகு, பிரபல கிரிக்கெட் விமர்சகரான ஹர்ஷா போக்ளேவும், ”இலங்கை ரசிகர்களே... உங்களுக்காக ஒரு வைரத்தை தோனி பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார். அவர், நிச்சயம் இலங்கை அணிக்காக மாபெரும் செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்; காத்திருங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

சென்னை அணியால் ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட பதிரானா, கடந்த ஆண்டு ஐபிஎல் முதல் அவ்வணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.