Lucknow Super giants Nand Kumar
T20

LSG IPL 2023 Preview | சோதனைகளைக் கடந்து சாதிக்குமா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

மோசமான சர்வதேச ஃபார்ம், பிசிசிஐ கான்ட்ராக்ட்டில் தூக்கியடிக்கப்பட்டது என ராகுலுக்கு இது சோதனையான காலகட்டம்.

Nithish

'ஓபனிங் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா பினிஷிங் சரியில்லையேப்பா' - இது கே.எல் ராகுலின் கேப்டன்சிக்கு பக்காவாய் பொருந்தும். அதிரடியாய் தொடரைத் தொடங்குவார்கள். வரிசையாய் மேட்ச்களை ஜெயிப்பார்கள். போகப் போக அப்படியே க்ராஃப் கீழிறங்கி அடுத்து வரும் எல்லா ஆட்டங்களிலும் ஜெயித்தால் மட்டுமே ப்ளே ஆப்பிற்கு செல்லமுடியும் என்கிற நிலைக்கு வந்து வெளியேறுவார்கள் அல்லது ப்ளே ஆஃப்பிற்குள் நுழைந்து பிரஷர் தாங்க முடியாமல் சொதப்பி வெளியே வருவார்கள். பஞ்சாப் தொடங்கி இப்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வரை இதுதான் கதை.

Lucknow Super giants batters

கடந்த சீசனில் நன்றாக கட்டமைக்கப்பட்ட அணிகளுள் ஒன்று லக்னோ. ராகுல், ஸ்டாய்னிஸ், ரவி பிஸ்னோய் என மூன்று பக்கா டி20 பிளேயர்களை ஏலத்திற்கு முன்பே தட்டித்தூக்கியது. ஏலத்திலும் தீபக் ஹூடா, க்ருணால் பாண்ட்யா, ஜேசன் ஹோல்டர், டி காக் என மேட்ச்வின்னர்களை தேடித் தேடி எடுத்தார்கள். அதனாலேயே கடந்த ஐ.பி.எல்லுக்கு முன்பான ஆரூடங்களில் கோப்பையை வெல்லக்கூடிய அணி என எல்லாராலும் கணிக்கப்பட்டது. ஆனாலும் என்ன செய்ய, 'என் ட்ராக் ரெக்கார்ட் இதுதான்' என ப்ளே ஆஃப்பில் வெளியேறினார் ராகுல். 'சரி ஜஸ்ட்ல தானே மிஸ்ஸாச்சு. அதே டீமோட தான் வருவாங்க இந்த தடவை' என எல்லாரும் நினைத்துக்கொண்டிருக்க, ஹோல்டர், சமீரா என ஏகப்பட்ட பேரை வழியனுப்பி வைத்து மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார்கள்.

'இதென்ன பிரமாதம், இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு' என இந்த ஆண்டு ஏலத்தில் இவர்கள் செய்த சம்பவம்தான் பல்லாயிரம் வோல்டேஜ் ஷாக். 16 கோடி கொட்டி நிக்கோலஸ் பூரனை எடுத்தார்கள். 'என்னை எதுக்குய்யா அவ்ளோ காசுக்கு எடுத்தீங்க?' என பூரனே புரியாமல் ஒருவாரம் தவித்திருப்பார். இப்படி ஏலத்தில் கொடுத்த ஷாக்கை தொடரிலும் மற்ற அணிகளுக்கு கொடுக்குமா எல்.எஸ்.ஜி?

வாரணம் ஆயிரம் :

ஐ.பி.எல் வந்துவிட்டாலே கெளரியைப் பார்த்துவிட்ட சூர்யவம்சம் சின்ராசைப் போல ராகுலை கையிலேயே பிடிக்க முடியாது. கேப்டன்சி ஃபார்மை பாதித்து அவதிப்படும் பிளேயர்கள் மத்தியில் ராகுல் தனி ரகம். 2020-ல் கேப்டனான சீசன் தொடங்கி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 600+ ரன்கள். இந்த முறையும் அதே ஃபார்மில் அணிக்குக் கைகொடுப்பார் என நம்பலாம். அவரோடு ஓபனிங் இறங்கப்போவது டி காக். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான் டி20 தொடரில் சதமெல்லாம் அடித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாக இங்கே வந்து இறங்குகிறார். இவர்களின் ஓபனிங் பார்ட்னர்ஷிப்பே லக்னோ அணியின் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய முக்கியக் காரணியாக இருக்கும்.

KL rahul

ரவி பிஸ்னோய் - ஐ.பி.எல்லின் அண்டர்ரேட்டட் பவுலர். நல்ல எகானமி, முக்கியமான நேரத்தில் விக்கெட்கள் வீழ்த்தும் திறன் என சர்வதேச கிரிக்கெட் அரங்கிலேயே தன் முத்திரையை அழுத்தமாய் பதித்தவர். இந்த ஆண்டு சில அணிகளில் சொல்லிக்கொள்ளும்படியான ஸ்பின்னர்கள் இல்லாததால் அந்த அணிகளின் ஹோம் கிரவுண்ட் பிட்ச்கள் அதற்கேற்றபடியே வடிவமைக்கப்படும். அதேசமயம் சேப்பாக்கம் போன்ற பிட்ச் அமையும்பட்சத்தில் பிஸ்னோயின் சாகசங்களை காணத் தயாராகுங்கள்.

LSG team

தீபக் ஹூடா - இப்படி ஒரு வீரரை தங்கள் டீமில் வைத்திருக்கத்தான் எல்லா அணிகளும் தவியாய் தவிக்கின்றன. 140-க்கு குறையாத ஸ்ட்ரைக் ரேட், ஆட்டத்தின் நிலைமை பொறுத்து கியரை மாற்றி மாற்றி ஆடும் திறன், சத்தமில்லாமல் நடுவே இரண்டு மூன்று ஓவர்கள் பவுலிங் என டி20க்காகவே அளவெடுத்து செய்த பேக்கேஜ் தீபக் ஹூடா. இவரின் இருப்பு லக்னோவின் மிடில் ஆர்டரை பலமுள்ளதாக்குகிறது.

இம்சை அரசர்கள்

வேறென்ன, முன்னரே சொன்னதுபோல பூரன் தான். மிடில் ஆர்டர் பலமாகவேண்டும் என்றுதான் கோடிகளைக் கொட்டி இவரை அணியில் எடுத்திருக்கிறார்கள். பணம் செலவழித்ததில் தப்பில்லை. சரியான ஆளுக்கு செலவு செய்திருக்கிறார்களா என்பதுதான் சந்தேகம். 2022 ஆகஸ்ட் தொடங்கி இப்போதுவரை ஆடிய 23 இன்னிங்ஸ்களில் 269 ரன்களே எடுத்திருக்கிறார். சராசரி வெறும் 11. ஐ.பி.எல்லிலும் பெரிதாய் இவர் சாதித்த வரலாறு இல்லை. இந்த சீசனிலும் மோசமான ஃபார்மில் இவர் இருக்கும்பட்சத்தில் லக்னோ அணியின் மிடில் ஆர்டர் சீட்டுக்கட்டு போல பொலபொலவென சரியும்.

Krunal Pandya

க்ருணால் பாண்ட்யா - தம்பி பாண்ட்யா அடி மேல் அடிவைத்து வெற்றிப்பாதையில் நடைபோட்டுக்கொண்டிருக்க அண்ணன் பாண்ட்யாவோ தடுமாறிக்கொண்டிருக்கிறார். 2019-லிருந்து இப்போதுவரை ஆடியுள்ள 52 இன்னிங்ஸ்களில் வெறும் 618 ரன்கள்தான். பேட்டிங் ஆவரேஜ் 17 என்பது டி20 அணியின் மிக முக்கிய இடமான ஏழாவது இடத்தில் ஆடக்கூடிய ஆல்ரவுண்டருக்கு அழகில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆடிய 43 போட்டிகளில் சராசரியாய் ஒரு ஆட்டத்தில் மூன்று ஓவர்கள் வீசியிருக்கும் இவர் வீழ்த்தியிருப்பதும் 21 விக்கெட்கள்தான். ரவி பிஸ்னோய்க்கு இவர் துணையாய் நிற்கவேண்டியது அணிக்கு அவசியம்.

அசத்தலான ஓபனிங் சீசன் அமைந்தது மொஹ்ஸின் கானுக்கு. ஒன்பது போட்டிகளில் 14 விக்கெட்கள், 5.97 எகானமியோடு. மொத்த கிரிக்கெட் உலகமும் யார் இந்த பையன் என திரும்பிப் பார்த்து அதிசயித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த முறை காயம் காரணமாக மொத்தத் தொடரிலும் அவர் பங்கேற்க முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது. அவரின் பந்துவீச்சை லக்னோ நிச்சயம் மிஸ் செய்யும்.

டாப் ஆர்டரில் போதுமான இந்திய பேட்ஸ்மேன்களின் பேக்கப் இல்லாததும் சிக்கலை உருவாக்கலாம்.

தனி ஒருவன்

'பேருல டோனின்னு இருந்தா இப்படித்தானே ஆடுவாங்க' - கடந்த சீசனில் ஆயுஷ் படோனியின் தொடக்க ஆட்டங்களைப் பார்த்தவர்கள் இப்படித்தான் முணுமுணுத்தார்கள். வெளுவெளுவென சர்வதேச பவுலர்களையே வெளுத்தவர் அதன்பின் தன் டீமைப் போலவே பெர்ஃபாமன்ஸில் மங்கிப் போனார். இந்தமுறை ஜனவரி வரை முதல்தர கிரிக்கெட் ஆடி செம ஃபார்மில் இருக்கும் அவரின் வித்தைகளைக் காண காத்திருக்கிறது கிரிக்கெட் உலகம்.

உனத்கட் - இந்தப் பெயரை கவனிக்க வேண்டிய வீரர்கள் பட்டியலில் பார்க்க ஆச்சரியமாய் இருக்கலாம். ஆனால் எத்தனை விமர்சனங்கள் குவிந்தாலும், 'எனக்கா எண்ட் கார்டு? எனக்கு எண்டே கிடையாது' என சளைக்காமல் மீண்டு வருகிறார். இந்த ஓராண்டில் ஆடிய விஜய் ஹசாரே தொடர், சையது முஷ்டாக் அலி தொடர், ரஞ்சிக்கோப்பை என அனைத்திலும் ஏறுமுகம்தான். கேப்டனாய் கோப்பைகள் வென்றதோடு எக்கச்சக்க விக்கெட்களை வீழ்த்தியிருக்கும் அவரின் ஃபார்ம் பவுலிங்கில்ன் நிச்சயம் கைகொடுக்கும்.

துருவங்கள் பதினொன்று

ராகுல், டி காக், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஸ்டாய்னிஸ், ஆயுஷ் படோனி, க்ருணால் பாண்ட்யா, ரவி பிஸ்னோய், மார்க் வுட், அவேஷ் கான், உனத்கட்.

இம்பேக்ட் பிளேயர்கள்

மனன் வோஹ்ரா (மிடில் ஆர்டரில் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் தேவைப்படும்போது)
டேனியல் சாம்ஸ் (அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்களே ஆடும்பட்சத்தில் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராய் டேனியல் சாம்ஸ் தேவைப்படலாம்)
கிருஷ்ணப்ப கெளதம் (எதிரணியில் அதிக இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும்பட்சத்தில் இவரின் ஆஃப் ப்ரேக் பவுலிங் கைகொடுக்கும்)
அமித் மிஸ்ரா (சீனியர் மோஸ்ட் ஸ்பின்னரான இவர் சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசி ஆட்டத்தின் போக்கையே மாற்றலாம்)
ப்ரேரக் மேன்கட் (ஒரு பாஸ்ட் பவுலிங் இந்திய ஆல்ரவுண்டர் தேவைப்படும்போது)

ஏற்கனெவே இருக்கும் எஸ்.டி.டி போதாதென மோசமான சர்வதேச ஃபார்ம், பிசிசிஐ கான்ட்ராக்ட்டில் தூக்கியடிக்கப்பட்டது என ராகுலுக்கு இது சோதனையான காலகட்டம். எனவே லக்னோ அணி நிர்வாகத்தைவிட அவருக்கு இந்தக் கோப்பை மிக அவசியமாய் தேவை. இதே போன்ற நிலைமையிலிருந்த தன் நண்பன் கடந்த முறை குஜராத் அணியை கோப்பை வெல்ல வைத்ததை அருகிலிருந்து பார்த்திருக்கும் ராகுல் அந்தப் படிப்பினைகளை எல்லாம் வைத்து லக்னோ ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.