நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி, உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால், திடீர் மழைக்காரணமாக, மைதானம் ஈரமாகியதால் ரிசர்வ் டேவான திங்கள்கிழமை இரவுக்கு போட்டி மாற்றப்பட்டது. ஆனால், ரிசர்வ் டே நாளில் கூட முதல் இன்னிங்ஸ் முடிந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி 3 பந்துகள் வீசியிருந்த சமயத்தில் மழை பெய்தது.
இதனால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆடுகளம் திரையால் (கவர்) மூடப்பட்டது. எனினும், ஆடும் இடத்தை தவிர மற்ற இடங்கள் மழையில் நனைந்தன. திங்கள் கிழமை இரவு சில நிமிடங்கள் மட்டுமே மழை பெய்தாலும், பிரதான ஆடுகளத்தின் பக்கத்தில் இருந்த இரண்டு பயிற்சி ஆடுகளங்கள் மழையால் ஈரப்பதத்துடன் இருந்தது. இதையடுத்து அதனை உலர செய்யும் பணிகளை மைதான பராமரிப்பு ஊழியர்கள் மேற்கொண்டனர். மேலும் பெரிய அளவிலான ஸ்பாஞ்ச் (Sponge) கொண்டு நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் ஆடுகளம் உலரச் செய்யும் பணிக்கு மணல் தூவப்பட்டது. இதனால், போட்டி தாமதமாக தொடங்கியதுடன், ஓவர்களும் குறைக்கப்பட்டது.
ஆடுகளத்தை உலரச் செய்ய நவீன தொழிழ்நுட்ப யுக்திகளை பயன்படுத்தாதது குறித்து ரசிகர்கள் சமூவலைத்தளங்கள் வாயிலாக பிசிசிஐ-யிடம் கேள்வி எழுப்பி வந்தனர். வரும் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரையில் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் முக்கியமான மைதானங்களில் போட்டியை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர்-நவம்பர் மாதங்கள் பொதுவாக இந்தியாவில் வடகிழக்கு பருவ மழைக்காலம். இந்நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டி போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் சினேஹாசிஸ் கங்குலி, குஜராத் கிரிக்கெட் சங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிடிஐ-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “பக்க ஆடுகளம் நனைந்ததால் போட்டிகள் தாமதமானது. நரேந்திர மோடி மைதானம், ஒரு புதிய மைதானம், அது சரியான நேரத்தில் சரிசெய்யப்படும் என்று நான் நம்புகிறேன். இது பெரிய பிரச்சினை இல்லை. மழைபெய்யும் போது, அவர்கள் முழு ஆடுகளத்தையும் கவர் செய்துவிட்டால், அதன்பிறகு இந்தப் பிரச்சினை இருக்காது.
இந்த சூழ்நிலை ஒரு கற்றுக்கொள்வதற்கான பாடம் (learning process) என்று சொல்லலாம். ஒவ்வொரு நாளும் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உலகக் கோப்பைக்கு முன்பு அதனை அவர்கள் செய்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஈடன் கார்டன் மைதானத்தைப் போல, குஜராத் கிரிக்கெட் சங்கமும் முழு அளவிலான கவருக்கு ஏற்பாடு செய்தால், இந்தப் பிரச்சனையை அவர்கள் சமாளித்து விடுவார்கள். ஏனெனில் அவர்களிடம் அதனை செய்யக்கூடிய எல்லா வசதிகளும் உள்ளன.
மணலை அடிப்படையாகக் கொண்ட ஆடுகளம் மற்றும் குறுகிய நேரத்தில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான சரியான வடிகால் அமைப்பையும் கொண்டுள்ளன. ஆனால் பக்கவாட்டு ஆடுகளங்களில் மணல் இருக்காது, மழை பெய்தால் பிரச்சனை இருக்கும். இருப்பினும் மழை பெய்யும்போது அவை முழுவதுமாக மூடப்பட்டால் அது தீர்ந்துவிடும். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. முழுமையாக ஆடுகளத்தை மூடிவைக்க கூடுதலாக 40-50 பேரை நீங்கள் வேலைக்கு அமர்த்த வேண்டும் அவ்வளவுதான்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள மைதானங்களிலேயே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தான், முழுவதுமாக கவர் செய்யும் வகையில் திரை உள்ளதாகக் கூறப்படுகிறது. பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பிராசன் முகர்ஜி மற்றும் துணை செயலாளர் சினேஹாசிஸ் கங்குலி (தற்போதைய தலைவர்) தலைமையில் கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது, ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ளூர் பிளாஸ்டிக்குகளைக் கொண்டு தயார் செய்யப்பட்ட திரையை அமல்படுத்தியதாக தெரிகிறது. அதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தபோது, இங்கிலாந்திலிருந்து ஆடுகளத்தை முழுவதுமாக மூடும் திரையை இறக்குமதி செய்ததாகவும், அதன்பிறகு ஒருமுறைக்கூட போட்டி வாஷ் அவுட் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஈடன் மைதானத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் மழை பெய்த நிலையில், மைதானம் முழுவதுமாக மூடப்பட்டிருந்ததால் போட்டி இரண்டு ஓவர்கள் மட்டும் குறைக்கப்பட்டு போட்டி 8.30 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.