மும்பை இந்தியன்ஸ் cricinfo
T20

IPL அணி ஓனருக்கே அந்த உரிமை கிடையாது! முன்னாள் வீரர் செய்த செயலால் BCCI எச்சரிக்கை! என்ன நடந்தது?

ஐபிஎல் போட்டி நடைபெறும் போது வர்ணனை பெட்டியிலிருந்து முன்னாள் வீரர் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டதால் அதிருப்தியடைந்த பிசிசிஐ, ஐபிஎல் உரிமையாளர் முதல் வீரர்கள் வரை அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Rishan Vengai

பிசிசிஐ அனைத்து ஐபிஎல் உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள், வீரர்கள் மற்றும் அணிகளுடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் என அனைவருக்கும், ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்களில் மைதானத்தில் இருந்து எந்த படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவர் ஐபிஎல் போட்டியின் போது வர்ணனை செய்யும் படத்தை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால், ஒளிபரப்பு உரிமை வைத்திருப்பவர்கள் எரிச்சலடைந்ததாக தெரிகிறது. அதனால் அதிருப்தியடைந்த பிசிசிஐ ”போட்டி நடைபெறும் நாட்களில் மைதானத்தில் இருந்து எந்த புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ எடுத்து வெளியிடகூடாது” என அனைத்து தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ..

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுருக்கும் அறிக்கையின் படி, “ஒளிபரப்பாளர்கள் ஐபிஎல் உரிமைகளுக்காக பெரும் பணம் செலுத்தியுள்ளனர். எனவே வர்ணனையாளர்கள் போட்டி நடைபெறும் நாளில் மைதானத்திலிருந்து வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட அனுமதி கிடையாது. சமீபத்தில் சில வர்ணனையாளர்கள் 'இன்ஸ்டாகிராம் லைவ்' செய்த அல்லது மைதானத்தில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. முன்னாள் வீரர் ஒருவர் வர்ணனைசெய்யும் போது லைவ் வீடியோ வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. IPL அணிகளின் உரிமையாளருக்கு கூட நேரலை கேமரா வீடியோக்களை வெளியிட அனுமதி கிடையாது, அதனால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அபராதம் விதிக்கப்படும்” என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

ஐபிஎல்

இந்த சம்பவம் குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், சில வீரர்கள் சமீபத்தில் போட்டி நாட்களில் மைதானத்திலிருந்து சில படங்களைப் பகிர்ந்ததாகவும், பின்னர் அவற்றை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “போட்டி நாட்களில் சமூக ஊடக பதிவுகளை கவனத்தில் கொள்ளுமாறு வீரர்களிடமும் கூறப்பட்டுள்ளது. அதனால் வீரர்களின் அனைத்து சோஷியல் மீடியா பதிவுகளும் கண்காணிக்கப்படுகின்றன. விதிகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோதும், சிலர் அதைப் பின்பற்றவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்” என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது..

2024 ஐபிஎல் தொடரின் தொலைக்காட்சிக்கான உரிமையை ஸ்டார் இந்தியா மற்றும் டிஜிட்டலுக்கான உரிமையை வயாகாம் 18 ஆகிய இரண்டு ஒளிபரப்பு உரிமையாளர்கள் வைத்திருக்கும் நிலையில், "நேரடி போட்டிகள்" மற்றும் "விளையாட்டு மைதானம்" தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ அனைத்தின் மீதும் பிரத்யேக கட்டுப்பாட்டை வைத்துள்ளனர்.

ipl cup, chennai ground

இந்நிலையில், ஒரு ஐபிஎல் அணி மைதானத்தில் இருந்து லைவ் வீடியோ கிளிப்பைப் பகிர்ந்ததற்காக ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிகளை கடைபிடிக்க பிசிசிஐ-ஆல் நியமிக்கப்பட்ட குழுவினர் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.