stephen fleming web
T20

’CSK-லிருந்து வெளியேறுங்கள்’- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு Fleming-ஐ குறிவைக்கும் BCCI

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட்டிற்கு பிறகு, அந்த பதவியில் நீடிக்கும் ஜீனியஸ்ஸை பிசிசிஐ தேடிவருகிறது.

Rishan Vengai

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. அதனால் ராகுல் டிராவிட்டிற்கு பிறகான புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என நேற்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

rahul Dravid

ராகுல் டிராவிட் தொடர்ந்து செயல்பட விருப்பம் தெரிவிக்காத நிலையில், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஜாம்பவான்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதவிக்கு ஸ்டீபன் பிளெம்மிங், ஜஸ்டின் லாங்கர், விவிஎஸ் லக்சுமன் மூன்றுபேரும் சிறந்த போட்டியாக இருப்பார்கள் என கூறப்படும் நிலையில், பிசிசிஐ 5 முறை ஐபிஎல் கோப்பை வென்றவரான நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங்கை நியமிக்கும் எண்ணத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டீபன் பிளெமிங்கிற்கு குறிவைக்கும் பிசிசிஐ!

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெம்மிங்கை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ காய் நகர்த்தி வருகிறது. இதற்காக பிசிசிஐ சார்பில் ஏற்கனவே ஸ்டீபன் பிளெம்மிங்கிடம் பேசி இருப்பதாகவும், அவர் இன்னும் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பல பிரான்சைஸ் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துவரும் பிளெம்மிங், இதுவரை சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூட இதுகுறித்து கலந்து பேசவில்லை எனவும் கூறப்படுகிறது.

தோனி - பிளெமிங்

தற்போது சிஎஸ்கே அணிக்கு மட்டுமல்லாமல் சென்னை அணியின் சகோதர அணிகளான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் முதலிய அணிகளுக்கும், இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் தொடரின் சதர்ன் பிரேவ் முதலிய பல்வேறு பிரான்சைஸ் டி20 அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துவருகிறார்.

ஸ்டீபன் பிளெமிங்கிற்கு இருக்கும் சிக்கல்!

முதலில் இப்படி பல்வேறு அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஸ்டீபன் பிளெமிங், அத்தனையும் விட்டுவிட்டு இந்திய அணிக்கும் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஒரு முடிவை எடுப்பாரா என்று யோசிக்கவேண்டும்.

ஏனென்றாஅல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 10 மாதங்களும் இந்திய அணியுடன் பயணிக்க வேண்டும். எனவே, ஸ்டீபன் பிளெம்மிங் இந்த பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்டீபன் பிளெமிங்கின் பலம்!

ஸ்டீபன் பிளெமிங்கை பொறுத்தவரையில், கடந்த 2009-ம் ஆண்டுமுதல் சிஎஸ்கே அணிக்காக பணியாற்றி 5 முறை ஐபிஎல் கோப்பை மற்றும் 2 முறை சாம்பியன் லீக் கோப்பைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

Stephen Fleming

அதுமட்டுமில்லாமல் பிளெமிங்கிடம் இருக்கும் ஆளுமை நிர்வாகத் திறன்கள், அணிக்குள் அவர் ஏற்படுத்தும் நேர்மறையான சூழல் மூலம் சிறந்த வீரர்களை வெளிக்கொணரும் திறன் மற்றும் CSK-ல் அவர் வைத்திருக்கும் ஈர்க்கக்கூடிய வெற்றி விகிதம் ஆகியவை பெரியதாக பிசிசிஐயால் நம்பப்படுகிறது.